திங்கள், 10 அக்டோபர், 2011

ஸ்டீவ் ஜாப்ஸின் தொழில்நுட்ப தரிசனம்


நான் கணினித்துறையில் நுழைந்து மென்பொருள் எழுதிய ஆரம்ப கால கட்டங்களில் எங்கள் கம்பெனியில் ஒரு பிஸ்தா இருந்தான். மென்பொருள் வேலை செய்யாமல் முரண்டு பிடித்தால் அவன்தான் கதி. எந்த பிரச்சினைக்கும் உடனடியான தீர்வு கண்டுபிடிக்கும் துல்லியமான தர்க்க புத்தி படைத்தவன். மென்பொருள் துறையில் புதியதாக எது வந்தாலும் அவனுக்குத் தெரியாமல் இருக்காது. ஆனால் ஒரு விஷயத்துக்கு மட்டும் அவனிடம் உதவிக்குப் போக முடியாது. அதுதான் யூஸர் இண்டர்ஃபேஸ் என்னும் பயனர் முகப்பு. ஒரு இளக்காரமான புன்னகையுடன் “அது பெண்கள் வேலை” என்று விலகி விடுவான். அதன் பிறகும் பல மென்பொருள் பிஸ்தாக்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லோருமே இந்த விஷயத்தில் தெளிவாக இருந்தார்கள்: ஆபரேட்டிங் சிஸ்டம் ஆண் துருவம் என்றால் பயனர் முகப்பு பெண் துருவம். உழவுக்குச்செல்பவன் ஆண், கோலம் போடுவது பெண் என்பது மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன். வாழ்க்கைக்கு உழவு முக்கியம். கோலம்? அது இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?
ஸ்டீவ் ஜாப்ஸ் கோலத்துக்காகத்தான் உழவு என்றார். உலகம் அவரை விசித்திரமாகப் பார்த்தது.

விசித்திரங்களும் விதி மீறல்களும் தொழில்நுட்ப உலகத்துக்குப் புதியது அல்ல. 19ம் நூற்றாண்டில் சார்லஸ் பாபேஜ் கண்டுபிடித்த கணக்கிடும் யந்திரம் அன்றைய விசித்திரம். ஆனால் இங்கிலாந்தின் முதலீடு, யந்திரத்தறியிலும் காலனீய ஆதிக்கத்தில் கிடைத்த சுலப செல்வங்களாலும் கவரப்பட்டிருந்தது. பாபேஜின் யந்திரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பாபேஜின் யந்திரத்தை அது கண்காட்சிப் பொருளாக்கியது. அன்றைய பாபேஜ் போலவே இன்றைய ஸ்டீவ் ஜாப்ஸுக்கும் இந்திய சிந்தனைகளுடன் பரிச்சயம் இருந்தது.
அமெரிக்காவின் புதிய தொழில்நுட்ப வெற்றிகள் ஒவ்வொரு பத்தாண்டிலும் பழசாகிப்போய் விடுபவை. முதலியம், உலகமயமாக்கல் ஆகிய இரட்டைக் குதிரைகளால் ஓட்டப்படும் அமெரிக்கப் பொருளாதாரம் எந்தக் கண்டுபிடிப்பிலும் அதிக காலம் இளைப்பாற முடிவதில்லை. தனது புதிய கண்டுபிடிப்பை தானே முதலில் முன்நின்று பழையதாக்கி விடுவதில்தான் அதன் தொழில்நுட்ப வெற்றி அடங்கியுள்ளது. பழையதைத்தாண்டி புதியதைப் படைப்பதன் மூலமாகவே அது முன்-நிலையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
70களிலும் இதே நிலைதான். கணினித் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா உலகிலேயே முதலிடம் வகித்து வந்தது. பெரியதொரு அறையையே அடைக்கும் பெருங்கணினிகளின் காலம் அது. அன்றைய தேதியில் கணினி என்றால் அது பாதுகாப்புத்துறை, பல்கலைக்கழகங்கள், பெரு நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான ஏதோ சிக்கலான சமாசாரம். இந்நிலையில் 1974ல் இண்டெல் நிறுவனம் உலகின் முதல் மைக்ரோப்ராஸ்ஸரை (8080) வெகு குறைவான விலையில் வெளியிட்டது. தனிக்கணினி (personal computer) என்பதன் உருவாக்கத்துக்கான முதல் அடிக்கல் இதன்மூலம் போடப்பட்டது. பொழுதுபோக்காய் எலக்ட்ரானிக்ஸ் சர்க்யுட்களில் விளையாடிக்கொண்டிருந்த பல தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு இண்டெலின் விலை குறைந்த மைக்ரோப்ராஸ்சர் மிகப்பெரும் உற்சாகத்தை அளித்தது.
பள்ளியில் படிக்கும்போதே ஸ்டீவ் ஜாப்ஸுக்கு வாஸ் (Woz) என்று அழைக்கப்பட்ட ஸ்டீபன் வாஸ்னியாக் என்கிற கணினித் தொழில்நுட்பத்தில் கில்லாடி மாணவன் ஒருவனுடன் நட்பு தொடங்கியிருந்தது. வாஸ் உருவாக்கிய முதல் தனிக்கணினி (personal computer) சிலிக்கன் பள்ளத்தாக்கின் கணினி ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதைக்கண்ட ஸ்டீவ் ஜாப்ஸ் அதை அவர்களுக்கு ஒரு விலை வைத்து விற்கத் தொடங்கினால் என்ன என்று கேட்டார். ஸ்டிவ் ஜாப்ஸ் வீட்டின் கார் நிறுத்தும் அறை, கணினி தயாரிக்கும் இடமாயிற்று. இரண்டு பேரும் சேர்ந்து 1000 டாலர் முதலீடு செய்தனர். கம்ப்யுட்டர் பாகங்களுக்கு $220 செலவு. கணினி போர்டை கட்டி முடிக்க உதவிய ஸ்டீவ் ஜாப்ஸின் நண்பனுக்கும் சகோதரிக்கும் போர்ட் ஒன்றுக்கு 1 டாலர் தரப்பட்டது. முடிக்கப்பட்ட ஒவ்வொரு போர்டும் 500 டாலருக்கு மொத்த காண்ட்ராக்டில் விற்கப்பட்டது. இப்படியாகத் தொடங்கிய விற்பனை நல்ல லாபம் தரவே 1976 ஏப்ரல் 1ல் ஆப்பிள் என்ற பெயரில் முறைப்படி கம்பெனியாக பதிவு செய்தனர்.
ஆப்பிள் கம்ப்யுட்டரின் தொழில்நுட்ப மூளையான வாஸ்னியாக் அடுத்ததாக உருவாக்கிய ஆப்பிள் II அன்றையை நிலையில் ஒரு பெரும் புரட்சி- அதனை கலர் டிவியில் இணைத்து வண்ணக் கணினியாக உபயோகப்படுத்த முடியும். அன்றைய ஆப்பிளின் லோகோவில் இருந்த வானவில் பட்டைகளின் பின்னணி இதுவே. 1977ல் வெளிவந்ததுமே ஆப்பிள் II பலத்த வரவேற்பைப் பெற்றது. (ஆப்பிள் II உபயோகப்படுத்தியது மைக்ரோசாஃப்டின் பேஸிக் மொழிபெயர்ப்பு மென்பொருள் என்பது உபரிச்செய்தி.)
2500 ஆப்பிள் II கணினிகளை 1977ல் விற்றது. அடுத்த வருட விற்பனை மூன்றுமடங்குக்கும் மேலாக இருந்தது. 1979ல் 35000 கணினிகள் விற்றுத்தீர்ந்தன. இன்று போலவே அன்றைய நிலையிலும் அமெரிக்கா பொருளாதாரச் சரிவின் பிடியில்தான் இருந்தது. ஆனால் 1980ல் பொது நிறுவனமாக்கி தனது பங்குகளை முதல் பொது விற்பனையாக (ஐபிஓ) ஆப்பிள் நிறுவனம் பங்குச் சந்தையில் விட்டபோது, அதன் பங்குகளுக்கு மாபெரும் டிமாண்ட் இருந்தது. அதற்கு முந்தைய கால் நூற்றாண்டு அமெரிக்கப் பங்குச்சந்தை வரலாற்றில், ஃபோர்டு கார் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக அதிக மதிப்புடையதாக ஆப்பிளின் ஐபிஓ அமைந்தது. 1979ல் 7 மில்லியன் டாலர் மதிப்புடையதாய் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸின் சொத்து ஐபிஓ-விற்குப்பின்னால் 217.5 மில்லியன் டாலராக அதிகரித்தது.
ஆனால் இந்த வெற்றி முகத்திற்கு சவால்கள் பல வரத்தொடங்கின. ஐபிஎம் கம்பெனி பெரும் கணினிகளில் பெரு வெற்றி கண்டு, பெரு நிறுவனங்களில் கால் பதித்திருந்த நிறுவனம். 1981ல் அது தனது தனிக்கணினியை சந்தைக்குகொண்டு வந்தது ஆப்பிளுக்கு மிகப்பெரும் சவாலானது. மைக்ரோசாப்ட் ஐபிஎம் கணினிகளுக்கு ஏகபோகமாக இயங்கு மென்பொருள் வழுங்கும் கம்பெனியானது. இந்நிலையில், ஆப்பிளின் அடுத்த தயாரிப்பான ஆப்பிள் III பெரும் தோல்வியடைந்தது. தொடர்ந்து ஸ்டீவ் ஜாப்ஸ் 1984ல் ஆரவாரமாக அறிமுகப்படுத்திய ஆப்பிள் மாக் கம்ப்யுட்டர் முதல் சில மாத விற்பனைக்குப்பின் படிப்படியாக தோல்வியடையத் தொடங்கியது.
இந்த நேரத்தில் ஸ்டீவ் ஜாப்ஸின் மேலாண்மை முறை பற்றி சொல்ல வேண்டும். பிறரை அனுசரித்துப்போவதோ, வளைந்து கொடுப்பதோ அவரது இயல்பிலேயே இல்லை. ஆப்பிளில் ஸ்டீவ் ஜாப்ஸ் “மாக்” கணினிக்குழுவின் தலைவராய் இருந்தார். ஆனால் பிற மென்பொருள் குழுக்களும் இருந்தன. ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸ் தன் குழுவுக்கு வெளியில் இருக்கும் அனைவரையும் – அவர்கள் ஆப்பிள் கம்பெனிக்காரர்களாயிருந்தாலும் அவர்களை ரெண்டாம் தரம், மூன்றாம் தரம் என்று வெளிப்படையாக ஏளனப்படுத்திப்பேசி வந்தார். இதில் வாஸ்னியாக்கின் ஆப்பிள் II குழுவும் அடங்கும். ஆப்பிள் II மட்டும்தான் கம்பெனிக்கு தொடர்ந்த வருமானத்தை ஈட்டித் தந்து கொண்டிருந்தது என்ற நிலையிலேயே இப்படி! விளைவு, ஜாப்ஸுடன் சேர்ந்து ஆப்பிளைத் தொடங்கிய வாஸ்னியாக் 1985 தொடக்கத்தில் ஆப்பிளில் இருந்து விலகினார். ஆப்பிளின் விற்பனை தொடர்ந்து அடி வாங்கிக்கொண்டே வந்தது. கம்பெனியை தன் விருப்பப்படி மட்டுமே செலுத்த முயலும் ஸ்டீவ் ஜாப்ஸின் போக்கை சகித்துக்கொள்வதில்லை என போர்டு உறுப்பினர்கள் முடிவு செய்தனர். 1985ல் தன் முப்பதாவது வயதில் ஸ்டீவ் ஜாப்ஸ், அவர் தொடங்கிய கம்பெனியின் அனைத்து மேலாண்மை பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
1985ல் தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸின் இறங்கு முகம் அடுத்த பத்தாண்டுகளுக்குத் தொடரும். ஆனால் உண்மையில் அந்தப்பத்தாண்டுகளின் உழைப்பும் அனுபவமும்தான் 1995க்குப் பின் ஸ்டீவ் ஜாப்ஸ் அடைந்த அனைத்து வெற்றிகளுக்கும் அடித்தளமானது.
ஆப்பிளில் இருந்து வெளியேற்றப்பட்டபின், நெக்ஸ்ட் என்கிற கம்பெனியைத் தொடங்கினார். தனது மனதிலுள்ள உன்னத கணிப்பொறிக்கு உயிர்கொடுக்க சிலிகான் பள்ளத்தாக்கின் தலை சிறந்த தொழில்நுட்ப வித்தகர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டார். கனசதுர வடிவில்தான் நெஸ்ட் கணினியின் வடிவம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். நெக்ஸ்ட் கணினி உருவாக்கத்தில் ஒவ்வொரு சிறு அம்சத்திலும் ஸ்டீவ் ஜாப்ஸின் பங்கு இருந்தது. மெக்னீஸியத்தாலான கறுப்பு நிறத்தில் கனசதுரம் இருக்க வேண்டும் என்றும், வெளியே மட்டுமல்லாமல் உள்ளிருக்கும் பாகங்களும் போர்டுகளும்கூட துல்லியமாக அழகாக அமைய வேண்டும் என்பதில் கறாராக இருந்தார். யுனிக்ஸ் அப்ஜக்ட்-ஓரியண்ட்டட் நிரலி அடிப்படையில் இயங்கு செயலியை (operating system) உருவாக்க முடிவு செய்தார்.
நெக்ஸ்ட் கம்ப்யுட்டர் வெளி மாதக்கணக்கில் தாமதமாகிக்கொண்டே போனது. வெளி வந்தபோது சந்தையில் பெரும் தோல்வி அடைந்தது.
ஆப்பிளை விட்டு வெளியே வந்த அதே நேரத்தில் வரை-கணினி (computer graphics) துறையில் மிகச்சிறந்த நிபுணர்களைக்கொண்ட குழு ஒன்றை, லுகாஸ் பிலிம் என்கிற நிறுவனத்திடமிருந்து வாங்கினார். பிக்ஸார் என்கிற பெயரில் அனிமேஷன் துறையில் மென்பொருள் மற்றும் உயர் கணினி தயாரிப்புகளில் அது ஈடுபடத் தொடங்கியது. ஆனால் பிக்ஸார் நிறுவனமும் தொடர்ந்து நஷ்டத்தையே ஏற்படுத்திக்கொண்டிருந்தது – 1995 வரை. 1995ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸுக்கு திருப்பு முனையாய் அமைந்தது. முழு அனிமேஷன் திரைப்படம் ஒன்றை உருவாக்கும் காண்ட்ராக்ட்டை டிஸ்னி நிறுவனம் 1995ல் பிக்ஸார் நிறுவனத்திற்கு அளித்தது. “டாய் ஸ்டோரி” என்கிற அந்த முழு அனிமேஷன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது., நெக்ஸ்ட், பிக்ஸார் ஆகிய இரண்டு கம்பெனிகளின் நஷ்டத்தையும் ஈடு செய்யும் அளவுக்கு வசூலில் சாதனை படைத்தது. ஸ்டீவ் ஜாப்ஸின் ஏறு முகம் தொடங்கியது.
1995ல் வெளி வந்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் 3.0 மாபெரும் வெற்றியடைந்ததில், ஆப்பிளின் விற்பனை வெகுவாகச் சரியத்தொடங்கியது. மீண்டும் ஸ்டீவ் ஜாப்ஸை இணையும்படி ஆப்பிள் போர்டு கேட்டுக்கொண்டது. நஷ்டத்தில் இருந்த நெக்ஸ்ட் கம்பெனியை வாங்கிக்கொள்ள ஆப்பிள் தலைமையை சம்மதிக்கச்செய்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். நெக்ஸ்டின் இயங்கு செயலி எதிர்கால ஆப்பிள் கணினிகளின் இயங்கு செயலியாக உருவெடுக்கத்தொடங்கியது. நெக்ஸ்டைப்போலவே இங்கும் கணினிகளின் கவர்ச்சிகர வெளிப்புறத்தோற்றக் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் தரத் தொடங்கினார். 1998ல் புதுமையான வடிவமைப்பில் பல வண்ணங்களில் வெளிவந்த ஐ-மாக் கணினி மாபெரும் வெற்றி பெற்றது. அழகு, பயனர் உபயோகம் ஆகிய இரண்டு அம்சங்களிலும் பெரும் கவனம் செலுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்ட கணினி அது. அதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து கணினியின் வேகத்தைக்கூட்டி வடிவமைப்பில் பல மாற்றங்களையும் புதுமைகளையும் புகுத்தி புதிய மாடல்களை அறிமுகப்படுத்தினார். சரிந்திருந்த விற்பனை வேகமாக மேலெழத் தொடங்கியது.
 கடந்த பத்து வருட அனுபவங்கள் ஸ்டீவ் ஜாப்ஸை பல விதங்களில் முதிர்ச்சியடையச் செய்திருந்தன. பிக்ஸார் அனுபவம் பொழுதுபோக்குத்துறையில் உள்ள பெரும் வியாபார சாத்தியத்தை அவருக்கு கோடி காட்டியிருந்தது. ஐமாக், ஏர்போர்ட் ஆகிய தொழில்நுட்ப சாதனங்களின் உருவாக்கத்தில் இண்டர்நெட்டின் வளர்ச்சியையும் அவர் கவனிக்க முடிந்தது. 1990களின் இறுதியில் கணினி, பொழுதுபோக்கு, வலையுலகம் ஆகியவை இணைந்த வாழ்-நிலையை (Lifestyle) வியாபார நோக்கில் யோசித்த முதல் தொழில்நுட்ப நிபுணர் ஸ்டீவ் ஜாப்ஸ்தான். வலையுலக வாழ்விற்கான தொழில்நுட்ப விஷயங்களை உருவாக்குவதில் ஆப்பிள் முன்னணி வகித்தது. தொடர்ந்து வெளி வந்த ஐபாட் மிகப்பெரும் வெற்றியடைந்தது. ஐ-ட்யுன்ஸ் பாடல்களைத் தரவிறக்குவதை எளிதாக்கியது. அடுத்து வந்த ஐபாட் மினியும் பெரும் வெற்றியடைந்தது.
தோல்வியடைந்த தயாரிப்புகளும் இல்லாமலில்லை. ஐபாட் ஹைஃபி, ஆப்பிள் டிவி ஆகியவை வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் அவற்றையெல்லாம் விஞ்சும் அளவுக்கு ஆப்பிள் 2007ல் ஐ-ஃபோனை வெளியிட்டது. ஐஃபோனின் கவர்ச்சிகர வடிவமைப்பும், பயனர் முகப்பும், உபயோக எளிமையும் அதனை மாபெரும் வெற்றிப் படைப்பாக்கின. 2007ல் முக்கியமான இன்னொரு அறிவிப்பையும் ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியிட்டார்- ஆப்பிள் கம்ப்யூட்டர் என்பதிலுள்ள கம்ப்யூட்டரை நீக்கிவிட்டு கம்பெனியின் பெயரை “ஆப்பிள்” என்று மாற்றினார். 2010ல் ஐபேட் வெளிவந்து அதுவும் பெரும் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிகள் ஜாப்ஸை ஒரு தொலைநோக்கு மிக்க தொழில்நுட்பவாதியாக அடையாளம் காட்டுகின்றன. ஆனால் ஜாப்ஸின் வெற்றியின் ரகசியம், இரண்டாம் முறை அவர் ஆப்பிள் தலைமைப்பொறுப்பை ஏற்றவுடன் பழையனவற்றை அழித்து விட்டு புதியதாய்த் தொடங்கியதில் இருக்கிறது. பழைய பொருட்கள் அனைத்தையும் கண்காட்சியகத்திற்கு தானம் செய்துவிட்டு புதிய பார்வையில் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை அணுக முற்பட்டதில் அவரது வெற்றி அடங்கியுள்ளது. வன்பொருளையும் மென்பொருளையும் இறுக்கமாய்க் கட்டிய தொழில்நுட்பம் ஆப்பிளுடையது. இந்த தனிச்சிறப்பை அழகிய வடிவமைப்பிலும், பயனர் முகப்பிலும், உபயோகிக்க எளியதாய் கருவிகளைக்கொண்டு வருவதிலும் பயன்படுத்தியதில் ஸ்டீவ் ஜாப்ஸின் மேதைமை உள்ளது. இதற்காக கணினி என்பதிலிருந்து கன்ஸ்யுமர் பொருட்களை உற்பத்திசெய்யும் தொழில்நுட்ப நிறுவனமாக ஆப்பிள் கம்பெனியின் போக்கையே மாற்றியமைத்தார்.
ஆப்பிளுக்குத் திரும்பி வந்தபின்பு “மாற்றி யோசி” என்பதையே தன் கம்பெனியின் தாரக மந்திரமாக்கிக் கொண்டார். அதுவே அவரது அடுத்தடுத்த வெற்றிக்கு அடித்தளமாய் அமைந்தது. ஆப்பிள் விளம்பரம் ஒன்று இவ்வாறு அறிவித்தது: “கிறுக்கர்களை, கோட்டிகளை, கலகக்காரர்களை, வட்டத்திற்குள் சதுரமாகும் மனிதர்களை வரவேற்போம். மாற்றிப் போட்டுப்பார்ப்பவர்கள் அவர்கள். சட்டதிட்டங்களில் அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. அவர்களை நீங்கள் விரும்பலாம், வெறுக்கலாம், பாராட்டலாம், அவர்களுடன் கருத்து வேறுபடலாம். ஆனால் அவர்களை உதாசீனப்படுத்த உங்களால் முடியாது. ஏனெனில் அவர்கள் விஷயங்களை மாற்றியமைக்கிறார்கள். அவர்கள் மனித குலத்தை முன் நகர்த்துகிறார்கள். பைத்தியக்காரத்தனம் என்று அவர்களைப்பலர் பார்த்தாலும் நாங்கள் அவர்களிடத்தில் வித்தகர்களைப் பார்க்கிறோம். ஏனெனில் உலகை மாற்றி விடலாம் என்று சிந்திக்கும் அளவுக்கு பைத்தியங்கள்தான், உண்மையில் உலகை மாற்றி அமைக்கவும் செய்கிறார்கள்.”
 ஒரு கம்பெனியின் தொழில்நுட்ப படைப்புக்கு போதைபோல உலகளாவிய ஒரு தொண்டர் படையே உருவானது எவ்வாறு? இந்தக்கேள்விக்கு எனக்குத் தெரிகின்ற ஒரே பதில், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பயனர்களை வெகுவாக மதித்தார் என்பதுதான். வெறும் தொழில்நுட்பப் படைப்பு என்பதைத்தாண்டி வடிவ நேர்த்தியையும் அழகியலையும் உபயோக எளிமையையும் தன் நிறுவன தயாரிப்புகளில் உக்கிரமாக முன்வைத்தார். ஆப்பிள் தயாரிப்புகளை வைத்திருப்பதே பெருமை என்கிற உணர்வை தொடர்ந்து பயனர்களிடத்தில் வலுவாக்கிக்கொண்டே இருந்தார். இதற்காக அவர் தொடர்ந்து தன் தயாரிப்புகளைப் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது. இவ்வாறு புதுப்பிக்க தலைசிறந்த தொழில்நுட்பக்குழு தேவைப்பட்டது. அதனையே தன் வெற்றியின் அச்சாணியாக்கிக் கொண்டார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் புதியதாய் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவரில்லை. அவரது பல தொழில்நுட்பங்கள் ஹெச்பி, ஜெராக்ஸ் போன்ற கம்பெனிகள் ஏற்கனவே உருவாக்கியவைதான். தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்பாளர்கள் வேறு நிறுவனங்களில் இருந்திருக்காலம், ஆனால் தொழில்நுட்பத்தின் தொலைநோக்கு சாத்தியக்கூறுகளை முதலில் கண்டுகொண்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இவ்வாறு கண்டறிய எதிர்காலம் குறித்த தன் பார்வையை புதுப்பித்துக்கொண்டே இருக்கின்ற மனோதிடமும், மாற்றி யோசிக்கும் தன்மையும் வேண்டும். ஸ்டீவ் ஜாப்ஸிடத்தில் அது இருந்த அளவுக்கு அவரது சம காலத்தவர் யாரிடம் இல்லை. அதனாலேயே அவரது தயாரிப்புகளின் பின்னுள்ள தொலை சிந்தனை பலருக்கு அந்த நேரத்தில் பிடிபடாமல் போயிருக்கிறது. ஆனால் அதுவே அவரது பலம். தனது தொலைநோக்குப் பார்வையை தெளிவாகவும் ஆர்ப்பாட்டமாகவும் மறக்கமுடியா விதத்திலும் ஊடகங்களுக்கு கவர்ச்சிகரமாக எடுத்துச் சொல்லத் தெரிந்திருந்தது அவருக்கு. ஸ்டீவ் ஜாப்ஸின் ஊடக பிம்பம் ஆப்பிளின் ஊடக பிம்பத்துடன் பின்னிப்பிணந்தது வளர்ந்தது இவ்வாறுதான்.
இன்று ஆப்பிளுக்கு உள்ள சவால்கள் மைக்ரோசாஃப்டிடமிருந்தோ ஐபிஎம்மிடமிருந்தோ அல்ல. கூகுளிடமிருந்து. ஆனாலும், அதன் தன்மைகூட ஒருவகையில் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே மைக்ரோசாஃப்ட்டிடம் எதிர்கொண்டதுதான். கூகுளின் ஆண்ட்ராய்ட் வெகு வேகமாக ஆப்பிளுக்கு எதிராக வளர்ந்து வருகிறது. இயங்கு செயலி மென்பொருளை பிரித்தெடுத்து பல கருவிகளுக்கு லைசென்ஸ் செய்ததன் மூலம் அன்றைய மைக்ரோஸாஃப்டின் அதே அணுகுமுறையை ஆப்பிளுக்கு எதிராக உபயோகப்படுத்துகிறது கூகுள். ஆப்பிளின் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது கூகுளின் இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்வதில்தான் உள்ளது. அந்த திறமை ஆப்பிள் நிறுவனத்தில் ஸ்டீவ் ஜாப்ஸைத்தாண்டி பலரிடத்தில் இருந்திருக்கலாம். ஸ்டீவ் ஜாப்ஸ் இருக்கும்வரை அவர்கள் வெளியே வெளிச்சத்திற்கு வந்திருக்க வாய்ப்பில்லை. ஸ்டீவ் ஜாப்ஸின் ஒளிவட்டம் அத்தகையது. அத்தகையவர்கள் இனி முன்னணிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னிலையில் 2005ல் அவர் பேசிய உரை அருமையான ஒன்று. எல்லா மகத்தான உண்மைகளையும் போல அது நம் எல்லோருக்குமே அழகாகப்பொருந்துவது.
“நீங்கள் செய்யும் வேலை என்பது உங்கள் வாழ்வின் ஆகப்பெரும் பகுதியை நிரப்பும், அதில் திருப்தி காண ஒரே வழி நேர்த்தியுடன் அதைச் செய்வதுதான். அது எப்போது சாத்தியமாகும் என்றால், நீங்கள் செய்யும் வேலையை நீங்கள் மனதார விரும்பிச்செய்யும்போதுதான். அப்படிப்பட்ட உங்களுக்கான வேலையை நீங்கள் கண்டறியும்வரை தேடிக்கொண்டே இருங்கள். ஒரே இடத்தில் நின்று விடாதீர்கள்.”
“எழுமின், விழிமின், கருதிய கருமம் கைகூடும் வரை நில்லாது செல்மின்” என்கிற விவேகானந்தரின் அறைகூவல் நவீன தொழில்நுட்ப தீர்க்கதரிசி ஒருவரது குரலில் எதிரொலிப்பதாகவே தோன்றுகிறது. உன்னதங்களின் தேடல் எல்லாக்காலங்களிலும் ஒரே குரலில்தான் ஒலிக்கும் போலிருக்கிறது.
-அருணகிரி
www.tamilpaper.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக