சனி, 1 அக்டோபர், 2011

வன்முறையை கைவிடுங்கள்” –புலிகளின் கனடிய ஆயுதத் தரகர் வலியுறுத்தல்

sathjhanவன்முறையை கைவிடுங்கள்” – சிறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் கனடிய ஆயுதத் தரகர் வலியுறுத்தல்
சத்ஹஜன் சரத்சந்திரன் எல்.ரீ.ரீ.ஈ முகாமில் வைத்து ஒரு இயந்திரத்துப்பாக்கியை பிடித்தபடி உள்ளார்,சிறையிலிருந்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் அந்தக் குழுவை கைவிட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.(அமெரிக்க மாவட்ட நீதி மன்றின் கோப்புகளிலிருந்து)
ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஸ்ரீலங்கா போராளிக் குழு ஒன்றுக்காக, 1 – மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதத் தரகில் ஈடுபட்டிருந்த சமயம் பிடிபட்ட ஒரு முன்னாள் கனடியத் தமிழ் செயற்பாட்டாளர், தனது தவறுகளை மீண்டும் யாரும் செய்யவேண்டாம் என இளைஞர்களை வலியுறுத்தி எழுதியுள்ள பகிரங்கக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
நியுயார்க் சிறைச்சாலையிலிருந்து இந்தக் கடிதத்தை எழுதியுள்ள சத்ஹஜன் சரத்சந்திரன் என்பவர் முதல் தடவையாக ரொரான்ரோவில் ஒருசமயம் தான் நடத்தி வந்த தமிழ் இளைஞர் அமைப்பானது எல்.ரீ.ரீ.ஈ யின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.
31வயதான கணனி மென்பொருள் பொறியியலாளரான இவர், தன்னை தவறாக வழிநடத்தி, தனது கோபத்துக்கு எண்ணெய் வார்த்து வெறுப்படையச் செய்து வன்முறையை ஊக்குவித்து மற்றும் வன்முறையற்ற தன்மை தன்னுள் எழுவதை மௌனமாக்கியதற்காக தமிழ் சமூகத்தின் தலைவர்கள் என்றழைக்கப்படுபவர்களை குற்றம் சாட்டினார்.
“ இப்படியானவர்களையிட்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று மட்டும் நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். வன்முறையை ஊக்குவிக்கும் எந்த ஒரு வழியையும் உங்களில் ஒருவரும் தெரிவு செய்யக்கூடாது என உங்களிடம் வேண்டுகிறேன். தயவு செய்து எந்த வடிவத்திலாவது அமைந்த வன்முறையையோ அல்லது வெறுப்பையோ ஊக்குவிக்கும் ஒரு ஊக்கியாக நீங்கள் ஒருபோதும் ஆகிவிடாதீர்கள்” இவ்வாறு தனது இரண்டுபக்க கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.
ஸ்ரீலங்காவின் உள்நாட்டு யுத்தம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்களால் மார்க்கம், ஒன்ட். இனை – தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட இலாப நோக்கற்ற இணையத்தளமான தமிழ் கைதிகளிடம் கருணை காட்டுங்கள் எனும் இணையத்தளம் ஒன்றில், சிறைச்சாலையிலிருந்து ஆகஸ்ட் 9 ந்திகதியிட்டு எழுதப்பட்ட இந்தக் கடிதம் இந்த வாரம் வெளியாகியிருந்தது.
அரசாங்கப் படைகள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகளைத் தோற்கடித்ததோடு ஸ்ரீலங்காவில் யுத்தம் நிறைவடைந்தது. ஆனால் உலகில் அதிக எண்ணிக்கையிலான தமிழ் இனத்தவர்கள் வசிக்கும் நாடுகளில் ஒன்றான கனடாவில் ஸ்ரீலங்கா இன்னும் ஒரு சூடான தலைப்பாகவே இருந்து வருகிறது, யுத்தம் காரணமாக ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேறிய தமிழர்களில் அதிகளவிலானோர் இங்கு வாழ்கிறார்கள். இந்தக் கடிதம் தமிழ் போராளிகளை கைவிடும்படி அவர்களை ஊக்குவிக்கிறது.
“எல்.ரீ.ரீ.ஈ இப்போது இல்லை, நாங்கள் உண்மைகளை ஏற்றுக்கொண்டு யதார்த்தத்தை நோக்கி நகர வேண்டும். சகோதர சகோதரிகளான உங்களிடம் நான் கேட்பது எல்.ரீ.ரீ.ஈ சித்தாந்தத்திலிருந்து விலகியிருங்கள் என்றுதான்” சரத்சந்திரன் இவ்வாறு எழுதியிருந்தார்.
“தமிழர்களாகிய நாங்கள் வன்முறைகளைக் கைவிட்டு சமாதானத்தை தழுவிக் கொள்ள வேண்டும்.... நான் உங்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்வது தீவிரவாத சிந்தனைகளின் வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்றுதான்”
கைதாகி ஐந்து வருடங்கள் கடந்த பின்பு ஏன் அவர் வன்முறைக்கு எதிராக வெளிக் கிளம்பியிருக்கிறார் என்பதற்கான காரணம் எதனையும் அந்தக் கடிதம் கொண்டிருக்கவில்லை.
தமிழ் கைதிகளிடம் கருணை காட்டுங்கள் எனும் அமைப்பு கூறியது. அது கனடாவிலுள்ள வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக அமெரிக்கா, மற்றும் ஸ்ரீலங்காவில் யுத்தகால நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு சாத்தியமான இடமாற்ற உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்த முடிமா என ஆராய்ந்து வருவதாக.
“அது ரொன்ரோவில் உள்ள தமிழ் மக்களுக்கு முகவரியிடப்பட்ட பொதுவான ஒரு கடிதம்” இவ்வாறு தெரிவித்தார் கடிதம் எழுதியவரின் தந்தையும், கைதிகளிடம் கருணை காட்டுங்கள் எனும் அமைப்பின் தலைவருமான சரத்சந்திரன் சண்முகம் என்பவர்.
அந்தக் கடிதம் அவரது மகனின் நியுயார்க் வழக்கறிஞரான லீ கின்ஸ்பேக்கின் உதவியுடன் எழுதப்பட்டது எனவும் தெரிவித்த அவர், தமிழ் இளைஞர்களுடனான அவரது மன்றாட்டமெல்லாம் அவர்கள் வன்முறையைத் தேடும் பாதைகளைப் பின்தொடராமல், இந்தப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என தொடர்ந்து தெரிவித்தார்.
சரத்சந்திரன் ரொன்ரோ பகுதி தமிழ் இளைஞர் அமைப்பின் தலைவராக 2003 முதல் 2005 வரை பணியாற்றியுள்ளார். அவர் ஸ்ரீலங்காவுக்கு இரண்டு முறை விஜயம் செய்தள்ளார். மற்றும் ஒரு எல்.ரீ.ரீ.ஈ முகாமில் வைத்து ஒரு இயந்திரத் துப்பாக்கியை கையாளுவதுபோல புகைப்படமும் பிடித்துள்ளார்.
2006ல் நியுயார்க்கில் உள்ள லோங் தீவில் வைத்து அவரும் மற்ற இரண்டு கனடியர்களும் முதுகில் சுமக்கக்கூடிய ஏவுகணைகளையும் மற்றும் ஏகே 47  தாக்குதல் துப்பாக்கிகளையும் புலிகளுக்காக கொள்வனவு செய்ய முயலும்போது கைது செய்யப்பட்டார்கள். அனைவரும் பயங்கரவாதம் மற்றும் சதி முயற்சி என்பனவற்றுக்கான குற்றத்தை ஏற்றுக் கொண்டார்கள். சரத்சந்திரனுக்கு 26 வருடங்கள் சிறைவாசம் அனுபவிக்கும்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு கனடியர்கள் நாடுகடத்தப்படுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஆறாவது நபர் ஒருவர் நவம்பர் மாதம் வழக்கு விசாரணையை எதிர் கொள்கிறார்.
“கடந்த ஐந்து வருடங்களாக நானும் என்னுடன் சேர்ந்த சக இளைஞர்களும் நியுயார்க்கில் சிறைவாசம் அனுபவித்து வருகிறோம். இந்த துயரத்தக்கு கூடுதலாக என்னுடைய குடும்பத்தினர் எங்களை வந்து பார்ப்பதற்கு சட்டத்தின் சில குறிப்பிட்ட பகுதிகள் தடையை ஏற்படுத்தியுள்ளன” என்று சரத்சந்திரன் எழுதியிருந்தார்.
கடந்த மூன்று வருடங்களாக நான் எனது பெற்றோர்களையோ அல்லது எனது குடும்பத்திலுள்ள வேறு அங்கத்தவர்களையோ கண்ணால்கூடக் கண்டதில்லை. கடந்த மூன்று வருடங்களாக என்னைக்காண ஒரு வருகையாளர் கூட வரவில்லை. நான் தெரிவு செய்த பாதையின் காரணமாக நான் அனுபவித்துவரும் இன்னல்களை விளக்குவதற்காகவே நான் இதை உங்களுக்கு எழுதுகிறேன். எனது கடந்தகால பல செயல்களையிட்டு நான் வருந்துகிறேன். கூட்டங்களுக்குப் பின் கூட்டங்கள் பிரச்சாரத்தின் பின் பிரச்சாரம் என சகலதும் என்னுள்ளும் எனது சக மாணவர்களிடத்தும் வெறுப்பை பாய்ச்சின”.
டேவிட் பூபாலபிள்ளை என்கிற கனடியன் தமிழ் காங்கிரஸ் பேச்சாளர் கூறுகையில், சரத் சந்திரனும் அவரது கூட்டாளிகளும் அமெரிக்காவில் இன்னும் இரண்டு தசாப்தங்கள் சிறைவாசத்தை எதிர்கொண்டிருக்கையில், ஆயுதம் ஏந்தி யுத்தம் நடத்திய உண்மையான தீவிரவாதப் போராளிகள் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என்று.
வன்முறை என்கிற அத்தியாயம்  முடிவடைந்து விட்டது என்று தெரிவித்த அவர், இந்தக் கடிதம் இளைஞர்களுக்கு சரியான செய்தியை எடுத்து வந்திருப்பதாக தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
“கனடாவிலும் கனடாவுக்கு வெளியிலும் உள்ள சில சக்திகள் இவர்களை தற்போதைய இந்த நிலைக்கு தள்ளி விட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அவர் அந்த சக்தியை இலக்கு வைக்கிறார் என்றுதான் நான் எண்ணுகிறேன்” இவ்வாறு அவர் சொன்னதாக நஷனல் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
தமிழில் : எஸ்.குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக