சனி, 29 அக்டோபர், 2011

வடக்கில் புலிகள் நடத்திய இனச்சுத்திகரிப்பு., 78,000 முஸ்லிம்கள் 72 மணித்தியாலங்களுக்குள் விரட்டப்பட்டனர்!

இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.
‘யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்’
இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.

ஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14,844. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள், முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர்.தென்னிலங்கையில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் மக்களைப் போலன்றி வடக்கே வாழ்ந்த முஸ்லிம் மக்களின் பேச்சுமொழி தமிழ்தான். அதுவும் பிரதேசப் பேச்சுவழக்கிலேயே இருந்தது. தமிழ்மக்களின் விடிவுக்காக ஆயுதமேந்துகிறோமென்று கூறிக்கொண்ட புலிகள், தமிழையே பேச்சுவழக்காகக் கொண்ட முஸ்லிம் மக்களை ஆயுத முனையில் விரட்டினார்கள். இது அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை.
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் விரட்டப்பட்ட காலப் பகுதியை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும். 1987ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிலை கொண்ட இந்தியப் படையினர் 1990ஆம் ஆண்டு மார்ச் முடிவுக்கு முன்னராகவே வெளியேறிச் சென்றுவிட்டனர். இந்தியப் படையை வெளியேற்றக் கோரியும் அரச அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்குடனும் தென்னிலங்கையில் ஜே.வி.பி.ஆயுதத் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டிருந்த காலமது.
வடக்கிலும் கிழக்கிலும் நிலை கொண்டிருந்த இந்தியப் படைக்கும் புலிகளுக்குமிடையில் மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. இந்தியப் படை நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் காட்டுப் பகுதிக்குள் விரட்டப்பட்டிருந்த புலிகள், இந்தியப் படை வெளியேறிய பின்னர் வடக்கு, கிழக்கில் பெரும் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாடெங்கும் இடம்பெற்ற வன்செயல்களுக்கு மத்தியில் ஜனவரி 2ஆம் திகதி ரணசிங்க பிரேமதாச இலங்கை அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார். செயலாற்று அதிகாரமிகு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதுமே சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜே.வி.பி.க்கும் புலிகள் இயக்கத்துக்கும் பிரேமதாசா அழைப்பு விடுத்தார். உத்தியோகபூர்வமக இந்த அறிவிப்பு 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி விடுக்கப்பட்டது. புலிகளுக்கு பிரேமதாசா நிதியுதவி மற்றும் ஆயுதங்களை வழங்கினார்.
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா, புலிகள், ஜே.வி.பி. ஆகிய முத்தரப்பினருக்குமே இந்தியப் படையின் வெளியேற்றம் பொது இலக்காக இருந்தது. இந்தியப் படையின் இறுதி அணி 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி இலங்கையை விட்டு வெளியேறியது. இந்தியப் படை வெளியேறிக் கிட்டத்தட்ட மூன்று மாதங்களின் பின்னர் இலங்கை இராணுவத்தின் மீது புலிகள் தாக்குதல்களை ஆரம்பித்தனர். சுமார் 14 மாதங்களாகப் பிரேமதாசா அரசாங்கத் தரப்பினருக்கும் புலிகளுக்குமிடையில் இடம்பெற்றுவந்த சமாதானப் பேச்சுவார்த்தையும் இடைநடுவில் முறிந்தது. 1990ஆம் ஆண்டு ஜூன் பத்தாம் திகதி புலிகள் இரண்டாவது ஈழப்போரை ஆரம்பித்தபோது வடக்கு கிழக்கில் பெரும் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
1980களின் நடுப்பகுதியில் புலிகள் இயக்கத்துடனும் ஏனைய தமிழ் விடுதலை அமைப்புகளுடனும் இணைந்து சில முஸ்லிம் வாலிபர்களும் செயற்பட்டு வந்திருக்கிறார்கள். 1981ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஒரு தனியான தேசிய இனமென்ற கோரிக்கை இதன் பின்னர் வலுவடையத் தொடங்கியது. அத்துடன் புலிகளின் தனித் தமிழீழக் கோரிக்கையை முஸ்லிம் காங்கிரஸ் வலுவாக எதிர்த்தது. முஸ்லிம்களுக்கான சுயாட்சிப் பிரதேசக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. காலப் போக்கில் இலங்கை அரசின் ஊர்க்காவல் படைகளில் முஸ்லிம் இளைஞர்கள் உள்வாங்கப்பட்டனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குப் பின்னால் முஸ்லிம்கள் அணிதிரளத் தொடங்கியதும் புலிகளுக்குப் பிரச்சினையாகியது. காலவோட்டத்தில் முஸ்லிம் மக்களைப் புலிகள் துரோகிகளாகப் பார்க்கத் தொடங்கினர்.
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர். அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்.
இக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர், பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள், 36 பேர் பெண்கள், 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது.
1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறை, முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறை, அவரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர். இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.
வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது. கிழக்கிலங்கையில் அன்றைய யுத்தச் சூழ்நிலையில் ‘ஜிகாத்’ நடத்த முயன்ற சில வெறியர்கள் அப்பாவித் தமிழர்கள் சிலரை வேட்டையாடினார்கள் என்ற உண்மையையும் மறுதலிக்க முடியாது. இன, மத ரீதியான கோர முகத்துடன் ஜிகாத்துகளைத் தலையெடுக்காமல் தடுத்த நல்லெண்ணம் கொண்ட முஸ்லிம் தலைவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற இந்த மோதலில் படையினரிலும் புலிகளிலும் பார்க்க அப்பாவி மக்களின் உயிர்களே பெருமளவுக்குப் பலியெடுக்கப்பட்டன. புலிகள் முஸ்லிம் மக்களை மட்டுமல்ல, எல்லைக் கிராமங்களிலுள்ள சிங்களக் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவிச் சிங்கள மக்களை வகை தொகையின்றிக் கொன்றிருக்கிறார்கள். அதேபோன்று கொக்கட்டிச்சோலை, மைலந்தன்னை, வவுனியா உட்படப் பல்வேறு தமிழ்ப் பிரதேசங்களிலும் நூற்றுக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் நரவேட்டையாடப்பட்டிருக்கிறார்கள்.
யுத்தம் பெருமளவில் காவு கொண்டது அப்பாவிகளைத்தான்.
சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி இனவெறியர்கள் சிலரின் நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட மக்கள் அதிகம். அவர்கள் அப்பாவி மக்களுக்குள் பாய்ச்சிய இனவாதம் இன்றுவரை அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேசங்களால் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.  இன்றுவரை தீர்க்கப்படாத இனப்பிரச்சினையால் இலங்கை தேசம் கண்ணீரில் மிதக்கிறது.
எஸ்.அருளானந்தம், முன்னாள் பிரதம ஆசிரியர்-தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக