செவ்வாய், 4 அக்டோபர், 2011

முத்தூட் மினி நிறுவன நகை கொள்ளை- 6 பேர் கைது- 1106 பவுன் நகைகள் மீட்பு


திருப்பூர் முத்தூட் மினி நிறுவனத்தில் பயங்கர கொள்ளையில் ஈடுபட்டு தமிழகத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய வழக்கில் 6 பேர் கொண்ட கும்பலைப் போலீஸார் பிடித்துள்ளனர். இவர்களிடமிருந்து 1106 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நடந்த மிகப் பயங்கர கொள்ளைச் சம்பவங்களில் ஒன்றாக முத்தூட் மினி நிறுவனத்தில் நடந்த நகைக் கொள்ளை அமைந்து விட்டது.
கடந்த மாதம் 24ம் தேதி திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள முத்தூட் மினி நிதி நிறுவனத்திற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் கத்தி முனையில் 1381 பவுன் தங்க, வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இதனால் தமிழகமே அதிர்ந்து போனது.

பட்டப் பகலில் நடந்த இந்த அதி பயங்கர கொள்ளைச் சம்பவத்தால் அந்த நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்திருந்த மக்கள் பதை பதைத்துப் போயினர்.

இந்த நிலையில் கொள்ளைக் கும்பலைப் பிடிக்க திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸாரைக் கொண்டு 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

கொள்ளையில் ஈடுபட்ட கும்பல், போகும்போது முத்தூட் நிறுவன ஊழியர்களின் செல்போன்களையும் திருடிச் சென்றிருந்தனர். இதையடுத்து அந்த செல்போன்களின் டவர்களை வைத்து போலீஸார் அவர்களது நடமாட்டத்தைக் கண்காணித்தனர். அப்போது ஈரோடு பகுதியில் கொள்ளைக் கும்பல் நடமாடுவது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் ஈரோட்டை முற்றுகையிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது.

இந்தக் கும்பலில் இடம் பெற்றுள்ள முக்கிய நபர் வெங்கடேசன். இவன்தான் இந்தக் கொள்ளைக் கும்பலுக்குத் தலைவன் போல செயல்பட்டுள்ளான். இவன் முத்தூட் மினி நிறுவனத்தில் பணியாற்றியவன் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்தக் கும்பலில் மொத்தம் 9 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஈரோடு, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் 3 பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். மற்ற மூவரும் நெல்லையைச் சேர்நதவர்கள். இவர்கள் தவிர வெங்கடேசன், மணிவண்ணன், காளி ஆகிய மூவரும் தலைமறைவாக உள்ளனர். இவர்களைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். விரைவில் இவர்கள் சிக்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 6 பேரிடமிருந்தும் 1106 பவுன் தங்க நகைகளை போலீஸார் மீட்டுள்ளனர். மீதமுள்ள நகைகள் தலைமறைவாக உள்ள 3 பேரிடம் இருப்பது தெரிய வந்துள்ளது.

கொள்ளையர்கள் ஒன்பது பேருமே தற்போதுதான் முதல் முறையாக கிரிமினல் செயலில் ஈடுபட்டுள்ளதாக போலீஸாருக்குத் தெரிய வந்து அதிர்ந்துள்ளனர். முதல் சம்பவத்திலேயே மிகப் பெரிய அளவில் அவர்கள் நிகழ்த்தியதுதான் போலீஸாரின் அதிர்ச்சிக்குக் காரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக