வியாழன், 20 அக்டோபர், 2011

ஜெயலலிதாவிடம் 3 மணி நேரமாக விசாரணை

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். முற்பகல் 11 மணி முதல் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
உச்சநீதிமன்றத்தின் கிடுக்கிப் பிடி
உத்தரவைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா இன்று காலை தனி விமானம் மூலம் பெங்களூர் கிளம்பினார். பெங்களூர் பழைய எச்ஏஎல் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர் அங்கிருந்து கார் மூலம் ஒசூர் ரோட்டில் பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா முன்பு ஆஜரானார்.
ஜெயலலிதாவுடன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது தோழி சசிகலாவும், சசிகலாவின் உறவினர் இளவரசியும் ஆஜரானார்கள். அதன் பின்னர் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா விசாரணையைத் தொடங்கினார்.ஜெயலலிதா மீது சுமத்தப்பட்டுள்ள புகார்களின் அடிப்படையில் அவர் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். அந்தக் கேள்விகளுக்கு தனது தரப்பு விளக்கத்தை அளித்தார் ஜெயலலிதா. அவை பதிவு செய்து கொள்ளப்பட்டன. பெரும்பாலான கேள்விகளுக்கும் தனக்கும் அதற்கும் தொடர்பில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை, உண்மைக்குப் புறம்பானவை என்று ஜெயலலிதா மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

முற்பகலில் தொடங்கிய விசாரணை தொடர்ந்து நீடித்து வருவதால் பரப்பன்ன அக்ரஹாரா சிறை வளாகத்திற்கு வெளியே குழுமியுள்ள நூற்றுக்கணக்கான அதிமுகவினரிடையே பரபரப்பு நிலவுகிறது. மீடியாக்களும் கூட விசாரணை நீடித்து வருவது குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்துள்ளனர்.

விசாரணை நீடித்து வருவதால், இன்றைக்குள் அது முடியாது என்றும், நாளையும் கூட தொடரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

முன்னதாக இன்று காலை 11 மணிக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா.அதில் தனக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யவில்லை. அதுகுறித்து தனக்கு எந்தத் தகவலையும் கர்நாடக அரசு தரவில்லை. போதிய பாதுகாப்பு இல்லாததால் என்னால் இப்போது போக முடியாது. 2 வாரங்களுக்கு இதைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஆனால் ஜெயலலிதாவுக்கு செய்யப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக அரசின் சார்பிலும், போலீஸ் டிஜிபி சார்பிலும் விரிவான பதில் அளிக்கப்பட்டது. இதை ஏற்ற உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்குக் கண்டனம் தெரிவித்தது. மேலும் இன்று குறிப்பிட்டபடி முதல்வர் ஜெயலலிதா நிச்சயம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.

ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக, சிறப்பு நீதிமன்றத்தையே தற்காலிகமாக இடம் மாற்றியுள்ளனர். இதற்காக இன்று காலை 8.50 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானத்தில் பெங்களூர் கிளம்பினார் ஜெயலலிதா. அவரது விமானம் பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கிருந்து கார் மூலம் கோர்ட்டுக்கு வந்தார். காலை பத்தரை மணிக்கு ஜெயலலிதா நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன் ஆஜரானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக