வெள்ளி, 14 அக்டோபர், 2011

நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் அதனை மீறிச் செயல்பட்டவர் சம்பந்தன்- வீ.ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரான தனது அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தி புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். புதிய நிர்வாக சபை செல்லுபடியற்றதெனவும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதும் சட்டவிரோதமானதும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு தான் கடித மூலம் அறிவித்துள்ளதாக சம்பந்தன் கூறுகிறார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாடு கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நல்லூரில் நடைபெற்று தலைவராக எஸ்.கனகராஜாவும் செயலாளராக வீ.ஆனந்தசங்கரியும் தெரிவு செய்யப்பட்டதுடன் புதிய நிர்வாக சபையும் தெரிவானது. இது குறித்து பதிலளித்த வீ.ஆனந்தசங்கரி நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் அதனை மீறிச் செயல்பட்டவர் சம்பந்தன். நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக விடுதலைப் புலிகளைத் தலைவராக ஏற்று செயற்பட்டவர். அப்படியிருக்கையில் கட்சியின் பொதுச் செயலாளர் என்று உரிமைகோர அவருக்கு அதிகாரம் எதுவும் இல்லை. கடந்த மூன்று தேர்தல்களில் அவரைக் கேட்காமல்தான் கட்சி போட்டியிட்டது. அவர் இல்லாமல்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி இயங்குகிறது. கட்சியின் மாநாட்டை நிறுத்தக் கோரி இரு தடவைகள் கடிதங்கள் அனுப்பினார். ஆனால் நான் அவற்றைக் கவனத்தில் எடுக்கவில்லை. முடிந்தால் அவர் சட்ட நடவடிக்கையை எடுக்கட்டும் என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக