சனி, 22 அக்டோபர், 2011

ஜெயலலிதாவின் 14 ஆண்டு 'வழக்கு வாசம்’ ஒருவழியாக முடிவுக்கு


ஜெயலலிதாவின் 14 ஆண்டு 'வழக்கு வாசம்’ ஒருவழியாக முடிவுக்கு வ‌ந்து விட்டது. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், கடந்த 20-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன ஹள்ளி அக்ரஹாரா மத்தியச் சிறைச்சாலை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஜெயலலிதாஆஜரானார். அவருடன் சசிகலா, இளவரசி ஆகியோர் வந்தார்கள்.
இந்த இடத்தில் ஒரு அவசிய பிளாஸ்பேக்!
1991-96 ஆம் ஆண்டுகளில் முதலமைச்​சராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, தி.மு.க. ஆட்சியில் வழக்குப் பதிவானது. அவருடன் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டன‌ர். சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த இந்த வ‌ழக்கில், குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. 2001-ல் மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார். உடனே, 'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டதால் சாட்சிகளை கலைக்கக்கூடும்’ என்ற காரணத்தைக் காட்டி வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்துக்குப் போனார் .

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன் றம், 2003-ம் ஆண்டுபெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் உள்ள தனி நீதிமன்றத்திற்கு வழக்கை விசாரிக்​கும் அதிகாரத்தை வழங்கி, நீதிபதி மல்லிகார்ஜூனையாவை நியமித்தது.

அதன் பிறகு இந்த வழக்கில் 45 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்​பட்டனர். அப்போது, 'ஆவணங்களின் மொழிபெயர்ப்பில் பிழை, மீண்டும் விசாரிக்க வேண்டும்...’ என்பது போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி மனு மேல் மனுப் போட்டார்கள். அதனால் வழக்கு அடுத்த கட்டத்துக்கு நகராமலே இருந்தது.
இந்த நிலையில் 2011-ல் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். கடந்த ஜூலையில் அரசு தரப்பு வக்கீல் ஆச்சார்யா, 'சாட்சிகளின் விசாரணை முடிந்துவிட்டதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று மனு போட்டார். ''கோர்ட்டில் நடப்பது எல்லாம் குற்றம் சட்டப்பட்டவர்களுக்குத் தெரியுமா?'' என ஆக்ரோஷமான நீதிபதி, 'இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 313-ன் படி நேரில் ஆஜராக வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 27-ம் தேதி சசிகலா, இளவரசி இருவரும் ஆஜரானார்கள்.

ஆனால் ஜெயலலிதா தரப்பினர், 'முதல்வராக இருக்கிறார், ரொம்ப பிஸியாக இருக்கிறார், இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கிறார், எழுத்துப் பூர்வமாக அல்லது வீடியோ கான்பரன்சிங் மூலமாக விசாரிக்கலாம்’ என ஏகப்பட்ட காரணங்களைக் காட்டி சட்டப் போராட்டம் நடத்தினார்கள்.

இது அரசு தரப்பு வக்கீலை கோபப்​படுத்தியது. ''மைசூர் கோயிலுக்கு வர முடியும், பக்கத்தில் இருக்கும் கோர்ட்டுக்கு வர முடியாதா?'' என்று சீறினார். அதனால் ஜெயலலிதா தரப்பு மீண்டும் உச்ச நீதிமன்றத்துக்குப் போனது. 'வழக்கில் ஆஜராகும் தேதியைச் சொல்லுங்கள்’ என தன் பங்குக்கு சுப்ரீம் கோர்ட்டும் கறார் காட்டியது. அதன்பிறகே, 'அக்டோபர் - 20’ என்று ஆஜராகும் நாள் குறிக்கப்பட்டது.

ஆஜராவதற்கு ஒப்புக் கொண்ட பிறகும் பாதுகாப்புக் காரணங்களை காட்டி, மீண்டும் ஒரு முறை சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனது, ஜெ. தரப்பு. 'தேவையான அனைத்துப் பாதுகாப்புகளையும் கர்நாடக போலீஸ் செய்யும். அதனால் நீங்கள் ஆஜராகலாம்'' என்று மீண்டும் விரட்டியது, உச்ச நீதிமன்றம்.



ஓவர் டு பெங்களூரு..
பரப்பனஹள்ளி அக்ரஹாரா மத்திய சிறைச்​சாலையில் ஆஜராக வேண்டும் என்று சொன்னதும் ஏகத்தும் ஷாக் ஆகி விட்டாராம் ஜெயலலிதா! ''ஏன் அந்த இடத்தில் ஆஜராவதற்கு ஓகே சொன்னீர்கள்? இப்பவே நான் நேரடியாக ஜெயிலுக்குப் போக வேண்டுமா?' என சென்டி​மென்ட் காட்டி வக்கீல்களை விளாசினாராம். முதல் நாள் முழுவதும் முதல்வருக்கு தூக்கமே வரவில்லையாம். தூக்கம் இழந்து டல்லாகத்தான் காலை 8.30 மணிக்கு போயஸ் கார்டனை விட்டுக் கிளம்பினார். பரப்பன ஹள்ளி அக்ரஹாரா, பெங்களூரு சிட்டியின் ஒதுக்குப் புறமாக இருப்பதால் பெங்களூரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்குப் போகாமல், தனி விமானத்தில் பெங்களூரு ஹெச்.ஏ.எல். விமான நிலையத்தில் சசிகலா, இளவரசியுடன் வந்து இறங்கினார். அப்போதும் யாரிடமும் சஜகமாகப் பேசவில்லை.

அன்றைய தினம் மெட்ரோ ரயில் துவக்க விழா இருந்த போதிலும், ஜெயலலிதா வருகையே பெங்களூருவை பரபரப்பு ஆக்கி​யது. உச்ச நீதிமன்றம் பாதுகாப்புக்கு உறுதி அளித்த காரணத்தால் பெங்களூரே காக்கிக் கலராக காட்சியளித்தது. வழியெங்கும் காவலுக்கு நிற்பதற்காக 3000 போலீஸார் நிறுத்தப்பட்டு இருந்தனர். காவல் துறையினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் பாஸ் கொடுக்கப்பட்டதால் அந்தப் பகுதியைக் கடக்க பொதுமக்களும் குடியிருப்புவாசிகளும் திண்டாடிப் போனார்கள்.

பரப்பனஹள்ளி அக்ரஹாராவுக்கு அன்று முழுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மீடியாக்களுக்கு பாஸ் வழங்கி இருந் தாலும், கோர்ட்டுக்குள் அனுமதிக்காமல் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலேயே நிறுத்தி விட்டனர். இதனால் மீடியாக்களுக்கும் போலீஸுக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் நடந்தது.



குற்றம் சாட்டப்பட்டு 14 ஆண்டுகள் கழித்து, 109 முறை ஆஜராகாமல் வாய்தா வாங்கி, முதல் முறையாக கோர்ட்டுக்கு வரும் ஜெயலலிதாவுக்கு அன்றைய பெங்களூரூ நாளேடுகளில் ரத்தத்தின் ரத்தங்கள் சிரித்துக் கொண்டே விளம்பரம் கொடுத்திருந்தனர். இதுபோதாதென்று வழி நெடுகிலும் பேனர்களும் கொடிகளும் அட்ட காசமாய் பறந்து கொண்டிருந்தன. ஓசூர், கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள், பெங்களூரு நோக்கிப் படையெடுத்து வந்து வழிநெடுகிலும் நின்றனர். 21 கார்கள் புடைசூழ வந்தாலும், ஜெயலலிதா புன்னகை காட்டாமல் டல் மூடில் சிறை வளாகத்துக்குள் நுழைந்தபோது, 'அம்மா வாழ்க...’ கோஷம் விண்ணைத் தொட்டது. பலரும் உற்சாகமாக ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்பதைக் கண்டு ஜெயலலிதா மேலும் கோபமானார். அதனாலோ என்னவோ மீடியாக்களைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

பாதுகாப்புக்காக தமிழ்நாட்டில் இருந்து வந்த போலீஸாருக்கும் கோர்ட் வளாகத்துக்குள் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அவர்களும் இரண்டு மணி நேரமாக வெளியே காத்திருந்தனர். சென்னையில் இருந்து வந்திருந்த அ.தி.மு.க. வழக்கறிஞர் அணியினரும், கோட் அணியாமல் வெளியே காத்துக் கிடந்தனர். வழக்குக்குத் தொடர்புடைய வக்கீல்களை மட்டுமே தீவிர சோதனை செய்து உள்ளே அனுமதித்தனர். தம்பிதுரை எம்.பி., பி.ஹெச் பாண்டியன் ஆகியோரும் நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகே உள்ளே நுழைய முடிந்தது.

உடல் நிலையை காரணம் காட்டி ஃபேனுக்கு அடியில் உட்கார்ந்தபடிதான் பதில் சொல்ல ஆரம்பித்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிடம் கேட்க 412 கேள்விகள் தயார் செய்யப்பட்டிருந்ததாம். முதல் நாள் 379 கேள்விகள் கேட்கப்பட்டது. எந்த கேள்விக்கும் கொஞ்சமும் தயக்கமில்லாமல் பதில் சொல்லிக் கொண்டே வந்தாராம். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் சேர்த்து மொத்தம் 1384 கேள்விகள்.

மதிய உணவு இடைவேளையின் போது தாஜ் ஹோட்டலில் இருந்து வெஜ் சான்விட்ஜ் வரவழைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா, வந்த காரிலேயே சசிகலா சகிதமாக உட்கார்ந்து அதை சாப்பிட்டு முடித்தார்.2.35 மணிக்கு மீண்டும் கேள்வி நேரம் தொடங்கியது. இதற்குள் ஜெயலலிதா தங்குவதற்காக பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மூன்றை தேர்வு செய்திருந்தார்களாம். தாஜ், தாஜ்விவென்டா, லீலா பேலஸ் ஆகியவை அந்த ஹோட்டல்கள். ஆனால் ஒவ்வொரு விஷயத்தை காரணம் காட்டி மூன்றையுமே பாதுகாப்பு அதிகாரிகள் நிராகரித்து விடவே சென்னைக்கே கிளம்பி விட்டாராம் ஜெயலலிதா. கோர்ட்டுக்குள் போகும் போது இருந்த அதே இறுக்கம் வெளியில் வரும் போதும் தொடர்ந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா, ''எல்லா கேள்விகளையும் நீதிபதிதான் கேட்டார். எந்த கேள்விக்கும் கொஞ்சமும் தயக்கமில்லாமல் நிதானமாக பதில் சொன்னார் முதல்வர்'' என்று மட்டும் சொல்லி விட்டு போனார். வெள்ளிக்கிழமை காலையிலும் ஜெயலலிதா ஆஜராகிறார்.

இதன்பிறகு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரிடம் கேள்விகள் கேட்க இருக்கிறார் நீதிபதி.
வழக்கு வாசம் முடிவுக் கட்டத்தை நெருங்கியே விட்டது!
_ இரா.வினோத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக