ஞாயிறு, 30 அக்டோபர், 2011

இந்த நபரை மே13ஆம் தேதிக்குப் பிறகு காணவில்லை

பேரன்பும், பெருங்கோபமும் கொண்டு எரிமலையாய் போஸ் கொடுக்கும் மேற்கண்ட படத்தில் இருக்கும் நபரை மே13ஆம் தேதிக்குப் பிறகு காணவில்லை. இந்த தேதிக்குப் பிறகு ஒரே ஒரு நாள் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மூவர் தூக்குத்தண்டனையை நிறுத்தக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய ஈழத்தாய் டாக்டர் புரட்சித்தலைவிக்கு பாராட்டுவிழா நடத்தியபோது மட்டும் மேடையில் கண்டதாக பொதுமக்கள் சொல்கிறார்கள்.
மே 13க்கு முன்பாக ‘மீனவனை அடித்தால், மாணவனை அடிப்பேன்’ என்று இவர் அடித்த பஞ்ச் டயலாக் மிக பிரபலம். மே 13க்குப் பிறகாக மீனவனை சிங்களவன் அடித்தால், பதிலுக்கு கொசுவை மட்டுமே அடித்து, இவர் காலம் தள்ளுவதாக பி.டி.ஐ. வட்டாரங்கள் கூறுகின்றன.

மூவர் தூக்குத்தண்டனை நேரத்தில் காஞ்சிபுரத்தில் செங்கொடி உயிர்த்தியாகம் செய்தபோது, ஊர்வலத்தில் கலந்துக்கொள்ள மேற்கண்ட நபர் காஞ்சிக்குச் சென்றார். அங்கே திடீரென்று காங்கிரஸ் கொடி எரிக்கப்படுவதாக   தகவல் கிடைத்ததும்   ‘தள்ளு தள்ளு’ என்று  கூட்டத்தை தள்ளிக்கொண்டு, எரியும் கொடிக்கு முன்பாக இந்திய தேசியத்தை சாடி வீரவசனம் பேசச் சென்றார்.
இவர் வேகமாக சென்றுக் கொண்டிருந்தபோதே, அடிபொடி ஒருவர் “அண்ணே அதிமுக கொடியையும் சேர்த்து எரிக்கிறாய்னுங்க…” என்று தகவல் கொடுத்த, அடுத்த நொடியே கோபத்தோடு, புயல்வேகத்தில் சென்னைக்குத் திரும்பினார் என்று நமது காஞ்சி மாநகர செய்தியாளர் காஞ்சனமாலா தெரிவித்திருக்கிறார். எனவே செங்கொடி இறுதி ஊர்வலத்திலும் சம்பந்தப்பட்ட நபரை பொதுமக்கள் யாரும் பார்த்ததாக சாட்சிகள் இல்லை.
இப்போது ராஜீவ் காந்தி கொலைவழக்கு கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டுமென்று மத்திய அரசுடன் இணைந்து, மேற்கண்ட நபர் நித்தமும் வணங்கும் ஈழத்தாய் புரட்சித்தலைவியின் தமிழக அரசாங்கமும் கோரிக்கை விடுத்திருக்கிறது.
புரட்சித்தலைவி அம்மாவின் இந்த தமிழின ஈழநல புரட்சிக் கோரிக்கையை பாராட்டி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மீண்டும் நடத்தப்போகும் பாராட்டு விழாவில் மேற்படி நபர் மீண்டும் தென்படலாம் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக