புதன், 12 அக்டோபர், 2011

இலவச லேப்டாப் திட்டம் கைவிடப்படுமா?அரசுக்கு 1,276 கோடியே 80 லட்சம் ரூபாய் தேவைப்படும்

மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் மடிக்கணினியின் விலை, திட்டமிட்டதை விட அதிகரித்துச் செல்வதால், இதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் அல்லது பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.இலவச மடிக்கணினி திட்டத்தில், இந்த நிதியாண்டுக்குள், 9.12 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க திட்டமிடப் பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் சாத்தியமா?
முதல்கட்டமாக, தலா 14 ஆயிரத்து 406 ரூபாய் என்ற விலையில், 6,875 மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு, அதில் 4,396 வினியோகிக்கப் பட்டுள்ளன. மீதம் உள்ள 2,479 மடிக்கணினிகள், உள்ளாட்சி தேர்தலால், கிடங்குகளில் காத்திருக்கின்றன.முதல்கட்டத்தில் இந்த விலைக்கு வாங்கினாலும், அடுத்தடுத்த கட்டங்களில் கொள்முதல் அளவு அதிகம் என்பதால் மடிக்கணினிகளை தலா 10 ஆயிரம் ரூபாய் என்ற விலைக்கு வாங்கிவிடலாம் என்ற கணக்கில், திட்டத்திற்கு 912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.ஆனால், தற்போது சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, ஒவ்வொரு மடிக்கணினிக்கும் குறைந்தபட்சம் 14 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என தெரிகிறது. இந்த விலையே சாத்தியமாவது மிக கடினம் என்று கணினி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, மடிக்கணினி வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ள ஒரு தனியார் நிறுவன பொது மேலாளர் கூறுகையில், ""சர்வதேச அளவில் அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துவரும் நிலையில், எத்தனை கோடிகள் வாங்கினாலும் மடிக்கணினி விலை, பெரியளவில் குறைய வாய்ப்பில்லை. திட்டத் துவக்கத்திற்காக குறைந்தளவு மடிக்கணினிகள் வாங்கப்பட்டபோது, ஒரு அமெரிக்க டாலர் விலை, 42 ரூபாய். இன்று 50 ரூபாயைத் தொட்டுவிட்டது. எனவே, பழைய விலைக்கு நிறுவனங்கள் கொடுத்தாலே பெரிய விஷயம் தான்,'' என்றார்.

14 ஆயிரம் ரூபாய் வீதம் கணக்கிட்டால், இந்த நிதியாண்டு, ஆறு லட்சத்து 51 ஆயிரத்து 430 மடிக்கணினிகள் தான் வாங்க முடியும்.இரண்டு லட்சத்து 60 ஆயிரத்து 570 மடிக்கணிகளில், "துண்டு' விழுந்துவிடும்.

கூடுதல் செலவை ஏற்குமா அரசு?
ஒருவேளை, பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில்லை என முடிவானால், தமிழக அரசுக்கு 1,276 கோடியே 80 லட்சம் ரூபாய் தேவைப்படும். அதாவது, ஒதுக்கீடு செய்ததை விட கூடுதலாக, 364 கோடியே 80 லட்சம் ரூபாய், "கையைக் கடிக்கும்'தமிழக அரசின் தகவல் தொடர்புத் துறை அதிகாரி கூறுகையில், ""இது குறித்து ஏற்கனவே தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வராவிட்டாலும், திட்டத்தை, எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் முடிவில் தான் அரசு இருக்கிறது. முடிந்தவரை குறைந்த விலையில் கொள்முதல் செய்ய முயன்று வருகிறோம். எந்தச் சூழ்நிலையிலும், பயனாளிகளின் எண்ணிக்கை குறையாது. தேவைப்பட்டால், நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் அரசு தயங்காது,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக