திங்கள், 3 அக்டோபர், 2011

ஒரிசா.வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் 1,000 கர்ப்பிணி பெண்கள்



ஒரிசா மாநிலத்தில் பல்வேறு கிராமங்களில் 978 கர்ப்பிணி பெண்கள் மழை, வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். வெள்ளம் சூழ்ந்த வீட்டின் கூரையில் சிக்கி தவித்த இரு பெண்களுக்கு அங்கேயே பிரசவம் நடந்தது.

ஒரிசா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கேந்திரபாரா மாவட்டத்தில் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

அங்குள்ள பிராமணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அவுல், பட்முன்டாய், ராஜ்கனிகா உள்ளிட்ட 50-க்கும் அதிகமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
இதனால் அங்குள்ள மக்கள் தவிக்கிறார்கள். இந்த கிராமங்களில் 978 கர்ப்பிணி பெண்கள் இருக்கிறார்கள். அவர்களும் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள்.
ஜதுபூர் என்ற கிராமத்தை வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ளவர்கள் வீடுகளின் கூரைகளில் ஏறி அமர்ந்து உள்ளனர். அப்படி கூரையில் அமர்ந்து இருந்தவர்களில் ரினாராணி ஓஜா என்ற நிறைமாத கர்ப்பிணியும் ஒருவர்.
அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அங்கேயே அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வன்யா (வெள்ளம்) என்று பெயர் சூட்டினார்கள்.
இதேபோல் நலபாரி என்ற கிராமத்திலும் வீட்டின் கூரையில் சிக்கி தவித்த சவிதா சாகு என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டதால் செல்போன் மூலம் ஆரம்ப சுகாதார மையம் மற்றும் போலீசாரின் உதவியை நாடினார்கள். ஆனால் அவர்களால் அங்கு போய்ச் சேர முடியவில்லை. சிறிது நேரத்தில் அந்த பெண்ணும் குழந்தை பெற்றெடுத்தார்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக