வியாழன், 27 அக்டோபர், 2011

இந்தியர்களுக்கு எச்1பி விசாக்களை அள்ளித் தரும் அமெரிக்கா- தூதரகத்திலும் தமிழிலும் நேர்காணல்!

வாஷிங்டன்: 2010-11ம் ஆண்டில் இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்1பி விசா வழங்குவது 24 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் இந்த அளவுக்கு எச்1பி விசாவை அள்ளித் தந்துள்ளது வரலாற்றிலேயே இதுவே முதன்முறையாகும்.

இந்த ஆண்டில் இதுவரை 67,195 பேருக்கு எச்1பி விசா வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது 54,111 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரிவோருக்கே இந்த விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்தியர்களுக்கு 65,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதைவிட அதிகமாக 2,195 விசாக்களை அள்ளித் தந்துள்ளது அமெரிக்கா.
இரு ஆண்டுகளுக்கு முன் இந்தியர்களுக்கான எச்1பி விசா ஒதுக்கீடு 1,95,000 ஆக இருந்தது. ஆனால், உள்நாட்டினருக்கு வேலைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்ததால் அது இரு ஆண்டுகளுக்கு முன் 65,000 ஆகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அமெரிக்க விசாவுக்காக அந் நாட்டுத் தூதரகங்களில் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நேர்காணல் நடத்தப்பட்டு வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய நகர்களில் விசாவுக்கு விண்ணப்பிப்போர் சென்னையில் தமிழிலும் அல்லது இந்தியிலும், ஹைதராபாத்தில் தெலுங்கிலும், கொல்கத்தாவில் பெங்காலி மொழியிலும் நேர்காணலின்போது பதிலளிக்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக