ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

TNA யின் காலக்கெடு, நிபந்தனை எனும் சொற்பதங்களின் அர்த்தம் என்ன?

புரியாது குழம்பும் அரச தரப்பும், தமிழ் மக்களும்!
அம்பலத்தார்
இலங்கையில் இன்றைய அரசியல் போக்குகள் அனைத்தும் கபடத்தனமும் கழுத்தறுப்பும் வெட்டுக்கொத்தும் மிக்க ஒன்றாகவே ஒடிக்கொண்டிருக்கின்றன. ஊதிப் பெருத்துப் போயிருக்கும் உள்ளடக்கங்கள் பலவற்றை உள்ளடக்கியதான இன நெருக்கடித் தீர்வு முயற்சிகள் தொடர்பில் வெடித்துக்கிளறும் தறுவாயில் கூட மெளனம் காத்தல், மலட்டுத்தனப்போக்கு என்பவற்றையே இன்றைய அனைத்து அரசியல் தலைமைகளும் முன்னெடுத்து வருவது கவலை தரும்விடயமாகும்.
யுத்தம் முடிவுக்கு கொண்டு பரப்பட்டு இரண்டு வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்னமும் இறுதித் தீர்வை எட்டு வதற்கான எந்தவொரு இணக்கப்பாடும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினராலும் இதுவரை எட்டப் படவில்லை.

அதேநேரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய பிரதிநிதிகள் மட்டுமன்றி அரச தரப்பினர் கூட என்ன பேசினோம், எந்தக் கட்டத்தில் உள்ளோம், எதிர்காலத்தில் எவ்வாறான நிலைப்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். எதில் ஆரோக்கியம் பேணப்பட வேண்டிய அவசியத்தன்மைகள் என்பன தொடர்பில் வெளிப்படைத்தன்மைகளை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் மூடிமறைப்பது இன்னுமோர் காவு கொள்ளத்தக்க கடபத்தனமான நடவடிக்கையாகும் என்று எவரும் கருதுவதில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர் பீரிஸ் உள்ளடங்கிய அரச தரப்பு பிரதிநிதிகளுடனும் ஒன்பது தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ள போதிலும் என்ன பேசினோம். எதைப்பற்றி பேசினோம். எட்டப்படாத விடயங்கள் என்னவென்று இருதரப்பினரும் மூடிமறைக்க முற்படுவது எதிர்காலம் பற்றிய தீர்க்கமான அரசியல் போக்குகளுக்கு வழிவகுக்கப் போவதில்லை என்பதையே உணர்த்தி காட்டிநிற்கிறது.

யுத்தத்திற்குப் பின்னரான இன நெருக்கடி அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பில் நாம் எந்தவொரு நிபந்தனைகளையும், காலக்கெடுவையும் அரசுக்கு வலியுறுத்தவில்லையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சுமந்திரன் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

அதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ. பி. ஆர். எல். எப்) இன் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் விடும் அறிக்கைகள் (தமிழ்ப் பத்திரிகைகளுக்கு மாத்திரம்) வேறுபட்ட விதமாகவே காணப்படுகிறது.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நிபந்தனை, காலக்கெடு என்ற சொற்தொடர்கள் எந்த உள்ளடக்கத்தை கொண்டவையாகும் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெளிவுபடுத்தினால் அது அரச தரப்பினர் மத்தியில் மட்டுமல்ல தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் ஆரோக்கியமானதோர் எதிர்கால அரசியல் சூழ்நிலைக்கு வழிவகுக்கும். அதுவே இன்றைய அவசியத் தேவையாகும்.

இதனைவிட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு பிரமுகரான மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தினந்தோறும் தமிழ்ப்பத்திரிகைகள் வாயிலாக வெளியிட்டு வரும் அறிக்கைகள் அதன் ஊடாகக் கிடைக்கும் சூடான கருத்துக்கள் இனியொரு போதும் சமரசப் பேச்சுக்களுக்கே இடமில்லையென்ற கருத்துக்களை ஒத்ததாகவே அமைந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

அறிக்கைகள் விடுவது தவறான விடயமல்ல. ஆனால் விடப்படும் அறிக்கைகள் ஒவ்வொன்றும் பிரசுரத்திற்கு பின்னர் அளவற்ற பிரச்சினைகளை உருவாக்கி விடுவதற்கான அளவுகோலாக அமைந்துவிடக் கூடாது என்பதே எமது அழைப்பாகும்.

கடந்த கால யுத்த நடவடிக்கைகள் காரணமாக மிகமோசமான பாதிப்புகளை, துயரங்களை அவலங்களை இழப்புகளை எதிர்கொண்டவர்கள் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள். இழப்புகளின் கொடூரத்திற்குப் பின்னரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏதோவோர் நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களித்து வெற்றி பெறச்செய்து குளிரூட்டப்பட்ட வாகனம், ஆயுதம் தாங்கிய மெய்ப்பாதுகாவலர் என்ற சுகபோக வாழ்க்கைக்கு வித்திட்ட மக்களுக்கு இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி எதையாவது செய்ய வேண்டும் என்ற திடமான உறுதி மாத்திரமே இன்றைய அவசியத்தேவையாகும்.

அதனைவிடுத்து கடந்த கால நிலைக்கு இழுத்துச் செல்ல முற்படும் சூடான, நிலையான கருத்துருவாக்கங்கள் கொண்ட அறிக்கைகள் அர்த்தமற்ற ஒன்றாகும். அதுவும் இன்றைய இக்கட்டான தருணத்தில் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒருசில கூட்டமைப்பு எம். பி.க்களின் எடுத்ததற்கெல்லாம் விடும் போலித்தனமான அறிக்கைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கூட காழ்ப்புணர்ச்சியை மட்டுமல்ல கோபத்தையும் உருவாக்கியுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது.

அதுவெல்லாம் இருக்கட்டும் யுத்தம் முடிந்துவிட்டது. இனிமேல் மீள்குடியேற்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வு என்று அரச தரப்பினர் தெரிவிக் கின்றனர்.

சமரசப் பேச்சுக்கள் ஊடாகவே தமிழ் மக்களின் அரசியல் இருப்பை கட்டியெழுப்ப முடியும் என்ற அடிப்படையிலேயே அரசதரப்பினருடன் பேச்சுக்களில் ஈடுபடுகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது.

கொடூர யுத்த துயரத்துடன் துன்பத்துடன் முடிந்து இரண்டு வருடங்களும் பல மாதங்களும் கடந்து போயுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இன்றைய தேவை என்ன? எதிர்காலம் பற்றிய நல் நோக்குக் கொண்ட அரசியல் தீர்வு என்ன என்பதே இன்றைய தேவையாகும்.

இதன் மூலம் முன்வைக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகளே நாளைய சமூகத்தின் வாழ்வுக்கு ஒளிமயமிக்கதாக அமைவதுடன் எதிர்காலம் பற்றிய புரிந்துணர்வையும் தோற்றுவிக்கும்.

இதனைவிட சர்வதேச சமூகம் எமது நாடு பற்றியும் கடந்த கால இறுதி யுத்த சம்பவங்களை தொடர்ச்சியாக எழுப்பிவரும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றோம் என்பதற்கு அப்பால் அதற்கு மாற்aடாக என்ன செய்யப்போகிறோம் என்பதும் உற்று அவதானிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.

அரசாங்கம் பல்வேறு கருத்துக்களையும் இனவாதப் போக்குகளையும் உள்ளடக்கிய கூட்டரசு என்பது உண்மையென்ற போதிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான சக்திகளிடமிருந்து மேலும் வேறுபட்ட ஒருவராக வெளிக்கிளம்பி நாட்டின் மிகப் பிரதான பிரச்சினையான, அரசியல் தீர்வை துரிதமாக எட்டுவதற்கு விரைவில் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் கடந்தகால வரலாற்றுத் தவறுகளை மீண்டும் தொடராது தமிழ் மக்கள் வாழ்வியலுக்கான ஆரோக்கியமான நவடிக்கைகளுக்கு தமது அரசியல் ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும். அதுவே இன்றைய அவசியத்தேவையாகும்.
- தினகரன் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக