வியாழன், 8 செப்டம்பர், 2011

EPDP: உதயன் குகநாதனை கூட்டமைப்பினரே தாக்கினர்

உதயன் செய்தி ஆசிரியர் குகநாதனின் கொலை முயற்சிக்கு சூத்திரதாரியாகச் செயற்பட்டவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ஒருவரே என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், ஈ.பி.டி.பி. உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் நேற்று சபையில் தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை தொடர்பான விவாதத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் நல்லவர், மிகவும் பண்பானவர். ஆனால் அந்தப் பத்திரிகை உண்மைகளை எழுதுவதில்லை. உணர்ச்சிகளைத் தூண்டும் செய்திகளையே வெளியிடுகின்றது. குகநாதன் தாக்கப்பட்டதற்கு ஈ.பி.டி.பி.க்கு எந்தத் தொடர்பும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாகாண சபை உறுப்பினர் ஒருவரே பின்னணியில் இருந்தார் என விசாரணையில் தெரியவந்தது எனக் குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் இடைமறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஈ.சரவணபவன், யாழ்.மாவட்டத்தில் மாகாண சபை என்று ஒன்று இல்லை. அப்படியாயின் எவ்வாறு மாகாண சபையின் உறுப்பினர் எவ்வாறு பின்னணியில் இருந்தவர் என்று சொல்ல முடியும் என்று கேட்டார். தனது தவறை உணர்ந்து கொண்ட சந்திரகுமார், மன்னிக்கவும். மாகாணசபை என்று தவறுதலாகக் கூறிவிட்டேன் நான் கூற வந்தது யாழ்.மாநகரசபை உறுப்பினர். இந்த விடயம் வழக்குகளுடன் தொடர்புபட்டது என்பதால் மேலதிகமாக பேச விரும்ப வில்லை என்றார். குறிப்பு: குகநாதனைத் தாக்கியவர்களின் பின்னணியில் மாநகர சபை உறுப்பினரான சட்டத்தரணி ஒருவர் உள்ளார் என அமைச்சர் டக்ளஸýம், நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர்.எனினும் அந்த நபரிடம் பொலிஸார் இதுவரை விசாரணை நடத்தவோ, அவருக்கு எதிராகக் குற்ற வழக்குகளைப் பதிவு செய்யவோ இல்லை. ஏற்கனவே கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கும் சந்தேக நபர்களை இதுவரை இந்த வழக்கு விசாரிக்கப்படும் யாழ்.நீதிமன்றத்தில் முற்படுத்தவும் இல்லை.இதேவேளை அண்மையில் லக்பிம பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், செய்தியாசிரியர் குகநாதன் உதயன் நிர்வாகத்துடன் முரண்பட்டுக் கொண்டதை அடுத்தே தாக்கப்பட்டார் என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக