செவ்வாய், 27 செப்டம்பர், 2011

கிழக்கு CM பதவி முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கப்படும் என்றால்

கிழக்கு முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கப்படும் என்றால் மாத்திரமே அரசுடன் இணைந்து போட்டி'
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்
எதிர்வரும் 2013ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர் தான் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கல்முனை பிரதேசத்தில் நேரில் வந்து பிரகடணப்படுத்தினால் மாத்திரம் தான் எமது கட்சி அரசாங்கத்துடன் போட்டியிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
அவ்வாறு இடம்பெறவில்லையென்றால் நிச்சயமாக அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்று தனித்து போட்டியிட்டு ஏனைய கட்சிகளோடு இணைந்து ஆட்சியமைப்போம் என்ற செய்தியை அரசாங்கத்திற்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என குறிப்பிட்டார்.
கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சாய்ந்தமருது கடற்கரை வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பாக இருந்தாலும் சரி ஐக்கிய தேசிய கட்சியாக இருந்தாலும் சரி கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமானால் முஸ்லிம் காங்கிரஸ் கேட்கின்ற அனைத்ததையும் வழங்கி அக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் மாத்திரமே ஆட்சியை கைப்பற்ற முடியும்.
இத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து போட்டியிடுவது நிச்சயம். இதனால் அரசாங்கத்தினால் தனித்த ஆட்சி அமைக்க முடியாது. கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் தான் கட்சி என்ற அமைப்பு இருக்கும். அப்போது தான் மாகணத்தில் உள்ள முஸ்லிம்களின் அரசியல் அந்தஸ்த்து இருக்கும். அதனூடாக அபிவிருத்தி கிடைக்கும். இதுவே எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் கனவாகும். அந்த கனவை நினைவாக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த தேர்தலை நாம் பயன்படுத்துகின்றோம்.
எனவே தான் கடந்த 30 ஆண்டுகளாக கட்டிக்காத்த இந்த கடசியின் கொள்கைகளை காப்பற்றி இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். தனி நபர்கள் சண்டையிட்டு கொள்வதற்காக அல்ல இக்கட்சி. மறைந்த தலைவரின் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதே பெரும்பான்மை இன கட்சிகளின் நோக்கமாகும். அதற்காகவே முஸ்லிம் காங்கிரஸிலிருந்து சிலரை பிரித்தெடுத்து அமைச்சு பதவிகளையும் அபிவிருத்திகளையும் அரசாங்கங்கள் வழங்குகின்றன.
நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது குறித்த பதவிக்காவே. ஆனால் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் மேயர் அல்லது தவிசாளர் பதவிக்கே என்று தான் போட்டியிடுவார்கள். இங்குள்ள 25 வேட்பாளர்களினதும் நோக்கம் மேயராககுவதே தவிர உறுப்பினராகுவதல்ல.
யாரும் இந்த சாய்ந்தமருது மக்களை ஏமாற்றி விட முடியாது. அக்கரைப்பற்றை ஓருவர் ஏமாற்றினார். மட்டக்களப்பிலுள்ள மூன்று முஸ்லிம் பிரதேசங்களை மூன்று பேர் ஏமாற்றினார்கள. பல சிறிய முஸ்லிம் கிராமங்களை ஒருவர் ஏமாற்றினார். ஆனால் அமைச்சு பதவியை கொண்டு எந்த கொம்பனாலும் இந்த சாய்ந்தமருது மக்களின் தலையில் மிளகாய் அரைக்க முடியாமல் போய்விட்டது என்பதே வரலாராகும்.
தனி நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊர் அல்ல இந்த ஊர். முஸ்லிம் காங்கிரஸிற்கு முதன்மையை வழங்கிய ஊராகும். எந்த வேட்பாளரும் தையிரியமிருந்தால் சொல்லட்டும் நான் முஸ்லிம் காங்கிரஸின் மர சின்னத்தில் போட்டியிடாது வேறு எந்த கட்சியின் சின்னத்திலாவது போட்டியிட்டு வென்று மேயராகுவேன் என்று.
முன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸை கல்முனை மாநகர மேயராக்கினோம். இந்த ஊரை சேர்ந்த பஷீரை பிரதி மேயராக்கினோம். இவர்களை விருப்பு வாக்குகளின் அடிப்படையிலே தெரிவு செய்தோம். அது போன்று இம்முறையும் மக்கள் ஆணையை மீறி எந்த தனி நபரையும் மேயராக நியமிக்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை நான் இவ்விடத்தில் வழங்குகிறேன்.
எனினும் மக்களுடைய ஆணையை முஸ்லிம் காங்கிரஸ் மீறி வரலாறும் உண்டு. அது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்றை தலைவர் ரவூப் ஹக்கீம் ஒருபோதும் அவ்வாறு செய்யமாட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்மருது என்று கல்முனை என்று மருதமுனை என்று நற்பட்டிமுனை என்று பிரித்து பார்ப்பதில்லை என்றார்.
- தமிழ்மிரர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக