ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

அ.தி.மு.க.,வினர் என்றால் நடவடிக்கையே இல்லை:கருணாநிதி புகார்

சென்னை:"ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு; மறு கண்ணுக்கு வெண்ணை என, நில அபகரிப்பு வழக்குகள் தி.மு.க.,வினர் மீது பாய்கிறது. அ.தி.மு.க.,வினர் என்றால் நடவடிக்கையே இல்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:அ.தி.மு.க., அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் காஞ்சிபுரம், பவானி, சோழவந்தான், ஆண்டிப்பட்டி, நாகர்கோவில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,கள்., முன்னாள் எம்.பி., என்.ஆர்.கோவிந்தராஜன் ஆகியோர் மீது நில அபகரிப்பு புகார்கள் ஆதாரத்துடன் கொடுக்கப்பட்டும், நடவடிக்கை இல்லை.
ஆனால், பொய்யான நில அபகரிப்பு புகாரிலும், புகார்கள் கூட இல்லாமல், கைது செய்துவிட்டு புகார்களை தயாரிப்பதும், வாரன்ட் இல்லாமல் கைது செய்வதும், கைதாகி ஜாமின் பெற்றவுடன், வேறொரு வழக்கில் கைது செய்வதும், முதல் தகவல் அறிக்கையில் பெயர் இல்லாமலேயே கைது செய்வதும் தி.மு.க.,வினர் மீது மட்டுமே நடக்கிறது.அ.தி.மு.க., ஆட்சியின் 100 நாள் சாதனையாக, தமிழகத்தில் இதுவரை 323 பேர், குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர். மிகக் கடுமையான குண்டர் சட்டம், சட்டம் - ஒழுங்கிற்கு பாதகம் விளைவிப்பவர் என கருதுபவர்கள் மீது, உரிய ஆதாரத்துடன் பயன்படுத்த வேண்டும். இச் சட்டத்தை பயன்படுத்தும் முன், ஒன்றுக்கு பல முறை ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.

அ.தி.மு.க., ஆட்சியிலோ, ஒருவகை பயமுறுத்தலோடு நாட்டை வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில், குண்டர் சட்டத்தை பயன்படுத்துகின்றனர். குண்டர் சட்டத்தைவிட பெரும் துன்பங்களை தி.மு.க.,வினர் சந்தித்துள்ளனர். எனவே, இச்சட்டத்தைக் கொண்டு பயமுறுத்த முடியாது.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக