வெள்ளி, 9 செப்டம்பர், 2011

வெள்ளையருக்கு பக்கவாத்தியம் வாசிப்பவரா கொழும்புக்குத் தேவை ரணில் கேள்வி .

கொழும்பு மாநகரசபையின் அதிகாரத்தை சாதாரண மக்களுக்காகக் குரல் கொடுக்கும் நபரிடம் ஒப்படைப்பதா? அல்லது வெள்ளையர்களுக்காக பேசுபவருக்குக் கொடுக்கப்போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த மாநகரசபைத் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு தேர்தலாகுமெனவும் தெரிவித்தார். கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய கொழும்பில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். கட்சியின் மேயர் வேட்பாளர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது; ஐக்கிய தேசியக் கட்சி சகல இன மக்களையும் உள்வாங்கிய தேசியக் கட்சியாகும். இக்கட்சியில் மட்டுமே சிங்கள மக்களுக்குரிய அதே சம உரிமை ஏனைய தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இக்கட்சியை ஆரம்பிக்கும்போதே ஸ்தாபகத் தலைவர் டி.எஸ்.சேனநாயக்க தமிழ், முஸ்லிம் தலைவர்களையும் இணைத்துக் கொண்டே ஆரம்பித்தார். அவர் அன்று எந்தவொரு சமூகத்தையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. அனைவரையும் இலங்கையர்கள் என்ற சொற்பிரயோகத்தையே பயன்படுத்தினார். அந்த தேசியக் கோட்பாட்டிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி இன்று வரை விடுபடவில்லை. தேசிய அடையாளத்திலிருந்து இக் கட்சி பலம் பொருந்திய ஜனநாயக அரசியல் கட்சியாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பின்னரே ஏனைய சகல அரசியல் கட்சிகளும் உருவாகின. அவை காலத்துக்குக் காலம் அவற்றின் அடையாளத்தை இழந்து போனது மட்டுமன்றி மக்கள் பலத்தையும் இழந்து விட்டன. இனவாதத்தை முற்றாக நிராகரித்த ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமேயாகும். திறமைசாலிகளுக்கும் தகுதி வாய்ந்தவர்களுக்குமே நாம் முன்னுரிமை கொடுத்துள்ளோம். இந்த விடயத்தில் பாகுபாடு காட்டப்படவில்லை. கொழும்பு மாநகரசபைக்கு மேயராக வரக்கூடிய சகல தகுதிகளும் முஸம்மில் ஹாஜியாரிடம் காணப்படுகின்றது. அதனால்தான் அவரை மேயர் வேட்பாளராக நிறுத்தியிருக்கின்றோம். அவர் சாதாரண மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடியவர். கொழும்பு மாநகர மக்களை புரிந்து வைத்துள்ளவர். மக்கள் ஆதரவும் அவருக்குகிட்டி வருகின்றது. ஆளும் தரப்பில் போட்டியிடும் மேயர் வேட்பாளர் மக்களுடன் நெருக்கமாக செயற்படுகிறாரா எனக் கேட்க விரும்புகின்றேன். சாதாரண பொதுமக்களுக்காக குரல்கொடுப்பவரை மக்கள் ஆதரிக்கப் போகின்றார்களா அல்லது வெள்ளையர்களுக்காகவும் மேற்குலகத்துக்கு பக்கவாத்தியம் வாசிப்பவருக்கு ஆதரவளிக்கப்போகின்றீர்களா எனக் கேட்கிறேன். கொழும்பு வாழ் மக்களின் வீடுகளை உடைத்து, காணிகளைக் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்குத் தாரை வார்ப்பதுதான் மகிந்த சிந்தனையின் தேசியத்துவமா என்று கேட்கிறேன். உழைக்கும் வர்க்கத்துக்கும் சாதாரண மக்களுக்கு அடிவயிற்றிலடிக்கும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கான போராட்டத்தின் ஆரம்பமாக இந்த கொழும்பு மாநகர சபைத் தேர்தல் அமையப்போகிறது. கொழும்பு மாநகர வெற்றியுடன் மக்கள் போராட்டத்தை நாடெங்கும் முன்னெடுக்கத் திட்டமிட்டிருக்கின்றோம். கொழும்பு மாநகரில் முஸம்மில் ஹாஜியார் தலைமையில் நாம் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் எந்தச் சவாலையும் எதிர்கொண்டு வெற்றி கொள்ளும் படையாகும். கொழும்பு வாழ் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தலாகவே இந்த மாநகரசபைத் தேர்தலை எதிர்கொள்கின்றோம். ஆளும் தரப்பினால் கொள்ளையடிக்கப்பட்ட காணிகளை நாம் அதிகாரத்துக்கு வந்ததும் அந்த மக்களிடமே திருப்பி ஒப்படைப்போம். மக்களின் அனுமதியின்றி விற்கப்பட்ட காணிகளின் உறுதிகளைக் கிழித்தெறிவோம். ஒப்பந்தங்களைத் தீவைத்துக் கொளுத்துவோம் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஐ.தே.க.பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் ஏ.ஜே.எம்.முஸம்மில் ஆகியோரும் உரையாற்றினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக