வெள்ளி, 30 செப்டம்பர், 2011

தோற்ற கருணாநிதியே தனியாக நிற்கும்போது, ஜெயித்த நமக்கு என்னவாம்?

அரசியல் தன்னைச் சுற்றியே சுழல வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் கருணாநிதி.

 சக அரசியல் சக்திகளை வெறும் கறிவேப்பிலையாகக் கருதும் எண்ணம், எதிர்பாராத நேரத்தில் சறுக்கலையே கொடுக்கும். நல்லதையும் அல்லதையும் சொல்ல நண்பன் இல்லாதது சொந்த வாழ்க்கைக்கு மட்டும் அல்ல; பொது வாழ்க்கைக்கும் இழப்பாகவே ஜெயலலிதாவுக்கு இருக்கப்போகிறது!ப.திருமாவேலன்
'தனியே... தன்னந்தனியே...’ இது இப்போது காதல் பாட்டு அல்ல. தேர்தல் பாட்டு!
வென்றாலும் வீழ்ந்தாலும் அரசியல் தன்னைச் சுற்றியே சுழல வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் கருணாநிதி. அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளை மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தொடங்குவதற்கு முன்பே, ''இந்தத் தேர்தலில் தி.மு.க. தனித்துப் போட்டி!'' என்று கருணாநிதி அறிவித்தார். கடந்த 40 ஆண்டுகளாக சவாரி பாலிடிக்ஸ் செய்துவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு, இதை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. கருணாநிதியின் அறிவிப்புக்குக் கருத்து சொல்லாத தங்கபாலு, ''காங்கிரஸும் தனித்துப் போட்டி!'' என்று காமெடி பண்ணினார். ''இத... இதத்தான் எதிர்பார்த்தேன்' என்றார் இளங்கோவன். தீராத தலைவலியில் சிக்கி இருக்கும் சிதம்பரத்துக்கு இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட நேரம் இல்லை. ஜி.கே.வாசன் இப்போது கப்பலைப்பற்றி மட்டுமே பேசுகிறார். கட்சிபற்றிப் பேசுவது இல்லை.
தி.மு.க-வுக்கும் காங்கிரஸுக்கும் ஃபெவிக்கால் வைத்து ஒட்டும் காரியத்தை எப்போதும் பார்க்கும் காங்கிரஸ் பத்திரிகையான 'தேசிய முரசு’கூட, 'இது தி.மு.க-வுக் கும் நல்லது... காங்கிரஸுக்கும் நல்லது’ என்றது. தன்னைச் சமாதானப்படுத்த டெல்லியில் இருந்து யாராவது வருவார்கள் என்று கருணாநிதி காத்திருந்தார்; ஏமாந்தார். மக்களவைத் தேர்தலைத் தவிர, வேறு எதிலும் அக்கறை காட்டாத காங்கிரஸ் மேலிடத்துக்கு, தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கப்போகும் விஷயம் தெரியுமா என்றே தெரியவில்லை!



கருணாநிதியின் அறிவிப்பு தொல்.திருமாவளவனுக்கு மட்டும்தான் பெரும் தொல்லையாகப் போனது. ''காங்கிரஸைப் பழிவாங்குவதாக நினைத்து சிறுத்தைகளையும் ஒதுக்கிவிட்டார்!'' என்று அவரால் ஒப்பாரிவைக்கவே முடிந்தது. ஈழத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதிக்காக எல்லா வலிகளையும் தாங்கிய திருமாவை உதாசீனப்படுத்தியது, கருணாநிதியின் அரசியல் தீண்டாமையாகவே கணிக்க வேண்டியுள்ளது. அன்றைய முகமூடிக்கு திருமா தேவைப்பட்டார். இன்று வேண்டாம் என்று கருணாநிதி நினைக்கிறார்.

இந்த அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், சிறுத்தைகள் மூன்றுமே தேர்தலை தனித் தனியாகச் சந்திக்கின்றன!

அடுத்து அ.தி.மு.க!

சட்டமன்றத் தேர்தல் வெற்றிச் செய்தி வர வர... பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, ''இது தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த வெற்றி'' என்றார். மறு நாள் எம்.ஜி.ஆர். சிலைக்கு வெயிலில் மாலை அணிவித்து வணங்க வந்தபோது, ''இது அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த வெற்றி'' என்றார். தே.மு.தி.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சரத்குமார், டாக்டர் கிருஷ்ணசாமி என்று வலுவான கூட்டணி அமைத்து வென்றவர் மன நிலையில் அன்றே மாற்றம் தெரிந்தது. விஜயகாந்த்தை இந்தக் கூட்டணிக்குள் கொண்டுவர எத்தகைய திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளும் கெஞ்சல்களும் அ.தி.மு.க. தரப்பால் மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிந்தவராகவே இருந்தாலும், வெற்றியை விஜயகாந்த்துடன் பங்கிட்டுக்கொள்ள ஜெயலலிதா தயாராக இல்லை என்று அப்போதே வெளிச்சத்துக்கு வந்தது!

இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸ் பக்கமாக அடித்த டார்ச்சை கருணாநிதி கட் செய்தது... ஜெயலலிதா சிந்தனையில் புது வெளிச்சம் பாய்ச்சியது. 'தோற்ற கருணாநிதியே தனியாக நிற்கும்போது, ஜெயித்த நமக்கு என்னவாம்?’ என்று ஜெயலலிதா நினைத்தார். சட்டமன்றத் தேர்தலில் தோற்ற கருணாநிதி, உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டால், பெரிய பிரச்னை எதுவும் இல்லை. சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு இதில் சிறு சறுக்கல் ஏற்பட்டாலும் பெரும் சங்கடம் ஏற்படும் என்பதை அவரிடம் சொல்வதற்கு எவரும் இல்லை!

தே.மு.தி.க-வுக்கு அ.தி.மு.க-விடம் இருந்து அழைப்பே இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும்தான் பழகிய பாசத்துக்காக சீனியர் அமைச்சர்களிடம் பேசிப் பார்த்தார். ''அம்மா சொன்னதும் முதல் போன் உங்களுக்குத்தான் வரும்'' என்றார்கள் அமைச்சர் கள். ஜெ. சொல்லவும் இல்லை... போன் வரவும் இல்லை. கம்யூனிஸ்ட்டுகளுக்கு மட்டும்தான், நிறைவேறாத கோரிக்கை என்று தெரிந்தும் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் இயல்பு உண்டு. மேயர் வேட்பாளர் 10 பேரை ஜெயலலிதா அறிவித்த பிறகும் நம்பிக்கையோடு பேச வந்தார்கள். 'இன்னுமா வருகிறீர்கள்?’ என்று நகராட்சிப் பட்டியலை விட்டார் ஜெ. 'இது சரியல்லவே’ என்று உடன்பாடான விமர்சனத்தையே மார்க்சிஸ்ட் விட்டது. 'இன்னுமா நம்புகிறீர்கள்?’ என்று ஊராட்சித் தலைவர் பட்டியலை விட்டார் ஜெ. மார்க்சிஸ்ட்டுகளுக்கு லேசாக ரோஷம் வந்தது. ஆனாலும், தா.பாண்டியனின் பக்தி தொடர்ந்தது. 'அவசரப்பட வேண்டாம்’ என்று மார்க்சிஸ்ட்டுகளுக்கு அறிவுரை சொன்னார். பெரிய வேட்டிகளே பறந்தபோது, சரத்குமார், டாக்டர் கிருஷ்ணசாமியால் என்ன செய்ய முடியும்? வேறு வழி இல்லாமல் தே.மு.தி.க. பட்டியலை வெளியிட்டது. மார்க்சிஸ்ட் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. கடந்த தேர்தலில் 'வைகோ வேண்டாம்’ என்று முதலியே முடிவு எடுத்துக் காலம் கடத்தியது போல, இந்த முறை விஜயகாந்த், கம்யூனிஸ்ட்டுகள் விஷயத்தில் ஜெயலலிதா நடந்துகொண்டார். இது நல்ல அரசியலும் அல்ல... கூட்டணி தர்மமும் அல்ல. சக அரசியல் சக்திகளை வெறும் கறிவேப்பிலையாகக் கருதும் எண்ணம், எதிர்பாராத நேரத்தில் சறுக்கலையே கொடுக்கும். நல்லதையும் அல்லதையும் சொல்ல நண்பன் இல்லாதது சொந்த வாழ்க்கைக்கு மட்டும் அல்ல; பொது வாழ்க்கைக்கும் இழப்பாகவே ஜெயலலிதாவுக்கு இருக்கப்போகிறது!

இதை ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தலில் உணர்வாரோ, இல்லையோ திருச்சி மேற்கு இடைத்தேர்தல் உணர்த்தும்!

'தி.மு.க, அ.தி.மு.க. இரண்டுடனும் கூட்டணி இல்லை’ என்று அறிவித்த வைகோ, எல்லா இடங்களுக்கும் வேட் பாளர் அறிவித்தார். பாரதிய ஜனதா எப்போதும் தனியாகவே இருக்கும். இப்போதும் அப்படியே. திருமாவளவனுடன் கூட்டணி போடலாம் என்று நினைத்த டாக்டர் ராமதாஸ், அதையும் செய்யாமல் தனியே நிற்கிறார். இப்படி எல்லோருமே தனியாக நிற்கிறார்கள்.

தமிழ் மக்கள் பார்ப்பது வித்தியாசமான காட்சி. எல்லாக் கட்சிகளும் இப்படி தனித்து எப்போதும் நின்றது இல்லை. ''தனித்துப் போட்டியிடும் தைரியம் எனக்கு மட்டும்தான் உண்டு'' என்ற விஜயகாந்த், ஜெயலலிதாவுடன் சேர்ந்தார். ''எல்லோரும் தனித்து நின்றால் நானும் தயார்'' என்ற டாக்டர் ராமதாஸ் எல்லாக் கூட்டணியிலும் இருந்துவிட்டார். ஆனால், அப்படிப்பட்ட எந்தத் திட்டமிடல்களும் இல்லாமலேயே கட்சிகள் பிரிந்துவிட்டன. முதன்முதலாக தமிழ்நாட்டில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு செல்வாக்கு என்பதைத் தெரிந்துகொள்ளப்போகிறோம். மொத்த வாக்காளர்களைக் கட்சிரீதியாகக் கணக்கிடப்போகிறோம்.

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல்தான் முன்னோட்டம். ஒவ்வொரு கட்சியும் தங்கள் பலத்தைக் காட்டி, அந்தத் தேர்தலில் கூட்டணி அமைக்க இதுவே அடித்தளம் அமைக்கப்போகிறது என்ற அடிப்படையில் பார்த்தால், கருணாநிதி நாட்டுக்கு நல்லதே செய்திருக்கிறார்!

thanks vikatan+mahendran ,Argentina

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக