திங்கள், 19 செப்டம்பர், 2011

பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது-சுமந்திரன்!

அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது-சுமந்திரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் காணப்படும் இணக்கப்பாட்டைப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு அரசாங்கத்தின் யோசனையாக முன்வைக்க அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அரசாங்கத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் இதற்கான இணக்கம் காணப்பட்டதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் எட்டப்படும் இணக் கப்பாட்டை தமது யோசனையாக பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் முன் வைக்கப் போவதாக அரசாங்கத் தரப்பினர் தெரிவித்தனர் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த விடயங்கள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு அறிவிக்கப்பட வேண்டும் என நாம் முன்னர் அறிவித்திருந்தோம். அரசாங்கம் ஏற்கனவே வெளியிட்டிருந்த பிரசுரங்களில் குறிப்பிடப் பட்டிருப்பதே இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு என எமக்குப் பதிலளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே அரசாங்கத்து டனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் இணங் கினோம். இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலமே தீர்வுகாணப்பட வேண்டும் என்பது கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடு. அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்படவேண்டும் என்பது குறித்தே அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் ஆராய்வதற்கு உள்ளோம்.

அரசாங்கத்துடன் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளை கூடிய விரைவில் முடித்துக்கொள்வதற்கும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டது என்றார்.

பேச்சுவார்த்தைப் பொறிக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிக்கிக்கொள்ளக் கூடாது என புத்திஜீவிகளை மேற்கோள் காட்டி பத்திரிகைகளில் வெளியாகியிருந்த செய்திகள் குறித்துக் கேட்டதற்குப் பதிலளித்த சுமந்திரன், புத்திஜீவிகள் என்றால் யார் என்று அந்தப் பத்திரிகைச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. யார் அந்தப் புத்திஜீவிகள் எனத் தெரியாதவிடத்து அதுகுறித்துப் பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக