செவ்வாய், 6 செப்டம்பர், 2011

போலீசார் பதில் சொல்ல வேண்டும்: கருணாநிதி பேட்டி

சென்னை:""அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைக்கு துணை போகும் போலீசார், எதிர்காலத்தில் இதற்கு பதில் சொல்ல வேண்டி வரும்,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனரே?
ஜெயலலிதாவுக்காக ஆஜரான வழக்கறிஞரிடம், "எத்தனை முறை அவர் வாய்தா வாங்குவார்? நீங்கள் சொல்லக் கூடாதா' எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். அவரை, நேரடியாகச் சென்று விசாரணையை சந்திக்கவும் சொல்லியிருக்கின்றனர்.

அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் மாநகராட்சி இடத்தை, மீண்டும் கைப்பற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறியுள்ளாரே?
அந்த இடம் குறித்து ஏற்கனவே பிரச்னை எழுப்பி, அதற்கான ஆணைகள் எல்லாம் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் உள்ள அண்ணாதுரை சிலை இருக்கக் கூடாது என நினைத்து, அதற்கான முயற்சியில் ஈடுபட எண்ணுகின்றனர்.

தி.மு.க.,வினர் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். சட்டசபையிலும் பேச அனுமதிப்பதில்லையே?
இன்றைக்கு (நேற்று) கூட, வீரபாண்டி ஆறுமுகம், ஜாமினில் வெளி வந்த உடன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும், ஏற்கனவே அவருக்கு சாதகமாக ஐகோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கில் தான் அவரை கைது செய்துள்ளனர். இப்படி சட்டத்திற்கு எதிரான அராஜகங்கள் இந்த ஆட்சியில் நடக்கின்றன.

அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்று கருதுகிறீர்களா?
நிச்சயமாக. போலீசாரும் சேர்ந்து கொண்டு செய்யும் காரியங்கள் இவை. இதற்காக அவர்கள் எதிர்காலத்தில் பதில் கூற வேண்டி வரும்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக