தமிழ்த் தரப்புக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தரப்பில் வீ.ஆனந்தசங்கரி, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வராஜா, சுமந்திரன், சரவணபவன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன், அமைச்சர்களான பசில் ராஜபக்ச, சுசில் பிறேம்ஜயந்த, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் பொலீஸ் மாஅதிபர் என்.கே.இலங்ககோன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர். இதன்போது வடக்கிலும் கிழக்கிலும் கிறிஸ் மனிதரால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்தும், தற்போது முழுமையாக வடக்கிலே இடம்பெறுகின்ற கிறீஸ் மனிதர் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் தமிழ்த் தரப்பினர் விரிவாக எடுத்துரைத்தனர். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், தான் இதுபற்றி அறிந்திருப்பதாகவும், அதற்காகவே தான் அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்தவை தான் அங்கு அனுப்பிவைத்து விசேட கூட்டமொன்றை நடத்தியதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்த் தரப்பு, கிறீஸ் மனிதர் விடயமாக ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் தமிழ்ப் பொதுமக்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியபோது, கைதுசெய்யப்பட்ட தமிழ்ப் பொதுமக்களுக்கு உடனடியாக பிணை வழங்குமாறும், பின்பு ஒரு சமாதான நடவடிக்கை எடுத்து அவர்களுடைய வழக்குகளை முடிந்தளவுக்கு இல்லாமற் செய்வதற்கான முயற்சிகளை எடுக்கும்படியும் பொலீஸ் மாஅதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார். அத்துடன் இது தொடர்பில் கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று வடக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டு பூரணமாக விசாரணை நடத்தப்படுமென்றும் ஜனாதிபதி உறுதியளித்தார். ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஜனாதிபதியால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் வருகின்ற 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பிற்போடுவது என தமிழ்த் தரப்பால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக