புதன், 7 செப்டம்பர், 2011

விமர்சனம் சீனா பக்கம் கொழும்பை இழுத்துச் சென்றுவிடும் இந்தியா

மனித உரிமைகள் தொடர்பான மேற்குலகின் விமர்சனம் சீனா பக்கம் கொழும்பை இழுத்துச் சென்றுவிடும் இந்தியா கருதியதாக விக்கிலீக்ஸ் கேபிள் வெளிப்படுத்துகிறது
இலங்கையின் மனித உரிமை பதிவுகள் தொடர்பான மேற்குலகின் விமர்சனத்தில் இந்தியா அக்கறை கொண்டிருந்ததாகவும் இலங்கையை தவிர்த்துவிடுவது சீனா பக்கம் கொழும்பை இழுத்துச் செல்லும் நிலைமையைத் தோற்றுவித்து விடும் என்ற அபிப்பிராயத்தை இந்தியா கொண்டிருந்ததாக விக்கிலீக்ஸ் கேபிள் வெளிப்படுத்தியிருக்கிறது.
வெற்றி பெற்றிருக்கும் இலங்கையை (புலிகளை இலங்கை தோற்கடித்த பின்னர்) மனித உரிமைகள் விவகாரத்தில் சாடுவது சீனாவின் கரங்களுக்கு இலங்கையைத் தள்ளிவிடுவதாக அமையும் எனவும் அத்துடன், சீனா மற்றும் ஈரானின் செல்வாக்குக்கு பிராந்தியத்தை திறந்து விடுவதாக அமைந்துவிடுமெனவும் அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸை மேற்கோள்காட்டி ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை நேற்று தெரிவித்திருக்கிறது.
2010 ஜனவரியில் இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் ரி.எஸ்.திருமூர்த்தி இந்த அமெரிக்க இராஜதந்திரிகளுடனான உரையாடலில் இலங்கையின் தேர்தல்கள் வரவேற்கப்பட வேண்டியவை என்றும் தமிழ்ப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது புதிய கட்டத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். வாக்குகள் நெருக்கமான முறையில் பிரிவுபட்டிருந்தால் மற்றைய அணியினரின் கருத்துகளை பரிசீலிக்கும் தன்மையை வெற்றிபெற்றவர் கொண்டிருப்பார் என்பதில் இந்தியா நம்பிக்கையுடன் இருந்தது.
"இலங்கையின் வட பகுதிக்குத் தேவைப்படும் உதவிகளை சீனா வழங்கும் தன்மையைப் பார்க்கும்போது அந்த விடயம் ஜனநாயகக் கோட்பாடுகள், மனித உரிமைகள், இந்தியப் பாதுகாப்பு,இன ரீதியாகத் தொடர்புபட்ட நலன்கள் என்பவை இலங்கையின் நடவடிக்கைகளினால் நேரடியாகப் பாதிக்கப்படும். இந்த விடயத்தில் அமெரிக்காவின் ஈடுபாட்டை இந்தியா வரவேற்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் வாக்கெடுப்புத் தொடர்பாக அமெரிக்கா பிரசன்னமாகாமல் இருப்பது யதார்த்தபூர்வமான அணுகுமுறைக்கு சமிக்ஞையாக அமையும் என்று இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கேபிள் கூறுகிறது.
சீனாவின் வகிபாகம் தீய நோக்கம் கொண்டது என்ற கருத்தை இந்தியா கொண்டிருக்காமல் இல்லை. அதேவேளை, அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விரும்பவில்லை.இலங்கைக்குக் கடந்த டிசம்பரில் 425 மில்லியன் டொலர் கடன் உதவியை இந்தியா வழங்கியிருந்ததாகவும் ஆனால், எவ்வாறாயினும் அந்த விடயம் கவனத்தை ஈர்த்திருக்கவில்லை என்றும் திருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புதுடில்லியிலுள்ள தூதரகத்தின் இலங்கை முதல் செயலாளர் அமெரிக்க இராஜதந்திரிகளுக்குக் கூறுகையில்; புகையிரத திட்டங்களில் சிலவற்றுக்கு சீனா நிதியுதவி அளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்தியர்கள் தமது பங்கினை பூர்த்தி செய்திருக்காவிடின் இந்த விடயம் சங்கடமானதாக அமையுமென்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் சீனாவின் செல்வாக்கிற்கு பதில் நடவடிக்கையை மேற்கொள்வதற்கான முயற்சியில் இந்தியா ஈடுபட்டிருக்கவில்லை என்ற திருமூர்த்தியின் கருத்தை கேபிள் வெளிப்படுத்தியுள்ளது. புனர்நிர்மாணத்துக்கு சீனாவின் பங்களிப்புகளுக்கு இணையாக இந்தியர்களால் வழங்க முடியாவிடின், இந்த விடயமானது இந்தியாவுக்கு அசௌகரியத்தைக் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக