அரிசிச் சாதம் சாப்பிடும் நம் அனைவர் வீட்டிலும் பிரெஷர் குக்கர் இல்லாமல் இருக்காது. உண்மைதானே? ஆனால், இந்தியா தவிர பிற நாடுகளில் இந்தச் சமையல் கருவி அவ்வளவாக உபயோகத்தில் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? ஏன், நம் இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் அரிசிச் சோறை அவ்வளவாகச் சாப்பிடாத இடங்களிலேயே இந்த குக்கரை நீங்கள் பெரிதும் பார்க்கமுடியாது.
ஒரு பொருளைச் சமைக்கவேண்டுமானால் அதற்கு வெப்பத்தைக் கொடுக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அரிசியை நீர் விட்டு வேகவைத்தால் சாதமாகிவிடும். முதலில் நீர் பொங்க ஆரம்பிக்கும். அந்தப் பொங்கும் நீரில்தான் அரிசி வேகும். பொதுவாக கடல் மட்டத்தில் நீரின் கொதிநிலை 100 டிகிரி செண்டிகிரேட் என்று இருக்கும்.
ஆக, அரிசி இந்த 100 டிகிரி செண்டிகிரேட் நீரில் கொதிபடுகிறது. திறந்த பானையில் கொதிக்கும் நீரால் இந்த வெப்பத்தைத் தாண்டிச் செல்லமுடியாது. இதற்கு மேல் நீங்கள் நெருப்பை - சூட்டை - அதிகப்படுத்தினாலும், நீரின் வெப்பம் ஏறவே ஏறாது! மாறாக நீர் நீராவியாகி பாத்திரத்திலிருந்து வெளியேறத் தொடங்குகிறது. இந்த 100 டிகிரி நீரில் கொதிக்க அரிசிக்கு அதிக நேரம் ஆகிறது. இன்னும் வேகமாக அரிசியைக் கொதிக்கவைக்க என்ன செய்யலாம்? எப்படியாவது நீரின் கொதிநிலையை அதிகப்படுத்த வேண்டும். அது ஒன்றுதான் வழி.
நீரின் கொதிநிலை அதன் அழுத்தத்தைச் சார்ந்தது. கடல் மட்டத்தில் (அதாவது சென்னையில்) இருக்கும்போது நீரின் கொதிநிலை 100 டிகிரி செண்டிகிரேட். ஆனால் பெங்களூருவில்? ஊட்டியில்? 93 அல்லது 95 டிகிரி செண்டிகிரேடிலேயே நீர் கொதிக்க ஆரம்பித்துவிடும். இமயமலைமீது ஏறிக்கொண்டே போனால், நீர் அங்கே 70 டிகிரியிலேயேகூட கொதிக்க ஆரம்பிக்கும். இதனால் வெங்கலப் பானையில் அல்லது மண் பானையில் அரிசி பொங்கும்போது, சென்னையில் எடுக்கும் நேரத்தைவிட ஊட்டியிலும் பெங்களூருவிலும் அதிக நேரம் எடுக்கும்! (சோதனை செய்து பாருங்கள்.)
இதற்குக் காரணம், உயரம் அதிகமாக அதிகமாக அழுத்தம் (பிரெஷர்) குறைந்துகொண்டே போவதுதான். பிரெஷர் குறையக் குறைய கொதிநிலை குறைகிறது. அப்படியானால், பிரெஷர் அதிகமானால்? சரியாக யோசித்துவிட்டீர்கள். அழுத்தம் அதிகமானால், நீரின் கொதிநிலையும் அதிகமாகும்.
சரி, அழுத்தத்தை எப்படி அதிகரிப்பது? அதைத்தான் பிரெஷர் குக்கர் செய்கிறது. பிரெஷர் குக்கரில் முக்கியமாக மூன்று பாகங்கள் உள்ளன. ஒன்று கேஸ்கெட் எனப்படும் ரப்பர் வளையம். இரண்டாவது சேஃப்டி வால்வ் எனப்படும் பகுதி. மூன்றாவது, விசில்.
பிரெஷரை அதிகப்படுத்துவது இந்த கேஸ்கெட்தான். கீழ்பாகம், மேல்மூடி ஆகியவற்றுக்கு இடையே கேஸ்கெட் பொருத்தப்படுகிறது. மேல்மூடியின் உட்புறம் கேஸ்கெட்டைப் பதியவைத்து கீழ்ப்பகுதியோடு வைத்து அழுத்திப் பூட்டுகிறோம். குக்கரின் உள்ளே நீர் கொதிக்க ஆரம்பித்ததும், கொஞ்சம் நீர், நீராவி ஆகிவிடுகிறது. திறந்த பாத்திரமாக இருந்தால் இந்த ஆவி வெளியேறிவிடும். ஆனால் பிரெஷர் குக்கரில் இந்த ஆவியால் வெளியேற முடியாது. கேஸ்கெட் சற்றே அகலமாகி, இடைவெளியை நிரப்பி, இந்த நீராவி வெளியேறிவிடாமல் தடுத்துவிடுகிறது. இதனால் ஆவி உள்ளேயே தங்கி உள்ளே இருக்கும் நீரின் அழுத்தத்தை அதிகரிக்கிறது. அழுத்தம் அதிகமாக அதிகமாக, நீரின் கொதிநிலை அதிகமாகிறது. மேலும் மேலும் வரும் நீராவி, அழுத்தத்தை அதிகமாக்கிக்கொண்டே போகிறது.
இப்படி அழுத்தம் அதிகமாகிக்கொண்டே போனால் என்ன ஆகும்? பாத்திரம் வெடித்துச் சிதறிவிடும். அப்படி ஆகாமல் தடுக்கத்தான் இருக்கிறது விசில். விசில் என்பது தடியான ஒரு குண்டு எடை. இந்த எடை ஒரு மெல்லிய துளைக்கு மேலாக வந்து உட்கார்ந்து கொள்கிறது. இந்த விசிலைப் போடாவிட்டால், நீராவி இந்தத் துளைவழியாக வெளியேறிவிடும். ஆனால் விசிலை அந்த ஓட்டையின்மீது வைத்துவிட்டால் நீராவி, விசிலை மேலே தூக்க முயற்சி செய்யும். ஆனால் ஆரம்பத்தில் அதனால் முடியாது. காரணம், விசில் கனமாக உள்ளது. அழுத்தம் அதிகமாக அதிகமாக, நீராவி விசிலை மேலே தள்ளுகிறது. இதனால் அந்தத் துளை வழியாகக் கொஞ்சம் நீராவி வெளியேறுகிறது. குக்கருக்குள் இருக்கும் அழுத்தம் கொஞ்சம் குறைகிறது. உடனே விசில் கீழே விழுந்துவிடுகிறது. இப்படி ஒரு ‘ரிலீஸ்’ இருப்பதால், குக்கருக்குள் இருக்கும் அழுத்தம் ஓரளவுக்கு மேல் செல்லாமல் இருக்கிறது. பாத்திரமும் வெடிப்பதில்லை.
அப்படியும் ஏதோ பிரச்னை காரணமாக நீராவியால் வெளியேற முடியவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அதாவது விசில் பகுதியில் உள்ள துளையில் பருப்போ அரிசியோ சிக்கிக்கொள்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் சேஃப்டி வால்வ் எனப்படும் பகுதி இயங்கும். பாத்திரத்தின் பிற பகுதிகளைப் போல அல்லாமல், இது மட்டும் சற்றே இலகுவான உலோகத்தால் ஆனதாக இருக்கும். நீராவி மிகவும் அதிகமான அழுத்தத்தை உருவாக்கிவிட்டால், இந்தப் பகுதி பிய்ந்து வெளியே அடிக்கும். இதனால் ஏற்படும் ஓட்டை வழியாக நீராவி முழுதும் வெளியேறிவிடும். பாத்திரமும் சமையலறையில் வேலை செய்யும் நம் அம்மாவும் பிழைப்பார்கள். சமையலறைக் கூரை மீதுதான் சாதமும் பருப்பும் அடித்துச் சிதறியிருக்கும்!
இப்படி பிரெஷர் குக்கர், உள்ளே இருக்கும் அழுத்தத்தை அதிகமாக்குவதால், நீரின் கொதிநிலை 125 டிகிரி செண்டிகிரேட்வரை செல்கிறது. இதனால் அரிசி, பருப்பு, கிழங்குகள் ஆகியவை வேகமாகச் சமைக்கப்படுகின்றன. ஆனால், இதில் வேறு ஒரு பிரச்னை உள்ளது. பசிக்கிறது என்று உடனடியாக குக்கரைத் திறக்கமுடியாது. அமைதியாக உட்கார்ந்து, உள்ளே உள்ள நீராவி முழுதும் வெளியேறும் வரை பொறுமையாக இருக்கவேண்டும்.
ஆனாலும், பசிக்கு வேகமாகச் சோறிட, பிரெஷர் குக்கரைவிட்டால் வேறு வழியில்லை. குழம்புக்கு பருப்பு வேகவைக்க, பிரெஷர் குக்கர் வேகத்துக்கு வெறும் திறந்த பாத்திரத்தால் ஈடுகொடுக்கவே முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக