வியாழன், 1 செப்டம்பர், 2011

தமிழ்நாட்டில் உள்ள அகதிகளை வரவழைக்கும் பணிகள் துரிதம்!

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 31 முகாம்களில் வாழ்ந்துவரும் அகதிகளை வரவழைக்கும் பணிகள் துரிதம்!


வடபகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவுபெறும் கடைசிக் கட்டத்தை அடைந்தி ருக்கும் இவ்வேளையில் மீள்குடியேற்ற அமைச்சு, தமிழ்நாட்டில் உள்ள சுமார் 31 முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற பல்லாயிரக்கணக்கான மக்களை மீண்டும் பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வந்து, மீள்குடியேற்றுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

யுத்தம் காரணமாக இந்த இலங்கைத் தமிழர்கள் கடந்த பலவருடங்களாகத் தங்கள் குடும்பத்துடன், தோணிகளில் சட்டவிரோதமாகவும், சட்டபூர்வமாகவும் இந்தியாவுக்கு பாதுகாப்பைத் தேடிச்சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது யுத்தம் முடிவடைந்து நாட்டில் மீண்டும் அமைதியும் சமாதானமும் திரும்பிக்கொண்டிருப்பதனால் அவர்கள் இலங்கை திரும்பி தங்கள் உறவுகளுடன், ஒன்றிணைந்து வாழ இப்போது அவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஒன்றிணைக்கப்பட்ட வலையமைப்பின் கீழ் இந்தத் தகவல்கள் பெறப்பட்டன. மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் உத்பல பஸ்நாயக்க, புதுடில்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக தமிழ் நாட்டு முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களை மீண்டும் இங்கு அழைத்து வருவதற்கான ஒழுங்குகளைச் செய்து வருவதாகக் கூறினார்.

இந்த மக்கள் இலங்கை திரும்புவதற்குத் தேவையான ஆவணங்களை அவர்களுக்குத் தயார்படுத்திக்கொடுத்து, அவர்களை மீண்டும் நாடு திரும்புவதற்கான வசதிகளை துரிதப்படுத்துமாறு அரசாங்கம் சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்களுக்கு உடனடியாக இலங்கை திரும்புவதற்கான கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்பிலுள்ள அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயமும் இந்த மக்களை இங்கு நெறியான முறையில் இங்கு அழைத்து வருவதற்கும், அவர்களை வடபகுதியில் மீள்குடியேற்றுவதற்கும் சகல உதவிகளை செய்து வருவதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் உத்பல பஸ்நாயக்க தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் மக்களை தமிழ் நாட்டிலிருந்து இங்கு அழைத்து வருவதற்கு பல வெளிநாட்டு அரசாங்கங்கள், யூ.என்.எச்.சி.ஆர். அமைப்புக்கு நிதியுதவிகளை வழங்கி வருவதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூரில் இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் பேரில் 7 ஆயிரம் பேர் மட்டுமே மீள்குடியமர்த்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த ஏழாயிரம் பேரும் அடுத்த மூன்று மாதங்களுக்கு மீள்குடியமர்த் தப்படுவார்கள் என்று தெரிவித்த பஸ்நாயக்க, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கும் கொம்பாவில் பகுதியில் இவர்களை மீள்குடியமர்த்துவதற்காக 600 ஏக்கர் காணி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் நிறைவுபெறவிருப்பதனால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடுகளை நிர்மானித்துக் கொள்வதற்காக 40 பரப்புக் காணி வழங்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக