சனி, 17 செப்டம்பர், 2011

மனு தர்மத்தில் வேதம் கேட்ட காதில் ஈயத்தை ஊற்றுவது, உச்சரித்த நாக்கை வெட்டுவது

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 8

இந்த மண்ணின் மைந்தர்களான இந்துக்களுக்குக் கூட கொடுக்கப்படாத சலுகைகள் மதம் மாறிப் போனவர்களுக்கு அளிக்கப்படுவது மிகப் பெரிய கொடுமையாகும். பள்ளிக் கூடம் தொடங்குவது நடத்துவது போன்ற விசயங்களில் கூட முசுலீம், கிறித்தவர்களுக்கு உள்ள சலுகைகளையாவது தாருங்கள் என்று கேட்கின்ற நிலையில் இந்துக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
- ”இந்துக்களுக்கு உரிமையே கிடையாதா
இந்து முன்னணி வெளியீடு. பக்.19
இயற்கையையும், சமூகத்தையும் அறிவியல் நோக்கிலிருந்து புரிந்து கொள்வதே கல்வி. முட்டாள்தனங்களையும், மூடநம்பிக்கைகளையும் உயிராகக் கொண்டுள்ள மதங்கள் கல்வியுடன் உறவு கொள்ள எவ்வித அடிப்படையும் இல்லை. இந்தியாவில் பல நூறு ஆண்டுகளாக மதத்தின் பிடியில் சிக்கியிருக்கும் கல்வியை விடுவிக்க வேண்டும் என்பதுதான் மதச் சார்பின்மையின் முக்கியக் கோரிக்கை. இந்தியாவில் மதத்தோடு கல்வி கொண்டுள்ள உறவின் வரலாறு என்ன?
பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கல்வி கிடையாது என்பதைத்தான் பார்ப்பனியம் ஈராயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறது. ஷாகாவில் ஸ்வயம் சேவகர்கள் ஆராதனை செய்யும் ‘மனு’ தனது தர்மத்தில் வேதம் கேட்ட காதில் ஈயத்தை ஊற்றுவது, உச்சரித்த நாக்கை வெட்டுவது உட்பட கல்வி மறுப்பிற்காகப் பெரும் தண்டனைப் பட்டியலையே உருவாக்கியிருந்தான். நடைமுறையிலும் கட்டை விரல் வெட்டப்பட்ட ஏகலைவனிலிருந்து, கண்பறிக்கப்பட்ட சேலம் கட்டிநாயக்கன்பட்டி தனம் வரை அதே ‘தர்மம்’ தான் நிலவுகின்றது.

பிராமணர் – சத்திரியர்’ போன்ற ஆளும் வர்க்கப் பிரிவினருக்காக நடத்தப்பட்ட குருகுலங்களிலும் வருணாசிரம தர்மத்தின் பாடத்திட்டம்தான் கல்வியாகக் கற்றுத் தரப்பட்டது. மத்திய காலத்தில் முகலாய மன்னர்கள் அறிமுகப்படுத்திய மதரஸா கல்வியில்  இருந்த மதசார்பின்மை அம்சங்கள் படிப்படியாக ஒழிக்கப்பட்டு இறுதியில் அங்கேயும் மதக்கல்வியே மேலோங்கியது. ஆங்கிலேயர் காலத்தில்தான் கிறித்தவ மிஷனரிகள் மூலம் நவீன கல்வி அறிமுகமாகியது. அதுவும் காலனியாதிக்கத்திற்கு உதவும் வகையிலேயே உருவாக்கப்பட்டது.
இந்த கிறித்தவ நிறுவனங்களில் அன்றும் இன்றும் படித்துப் பயனடைபவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் பார்ப்பன – மேல் சாதியினர்தான். வெள்ளையர் காலத்து ஐ.சி.எஸ். தற்போதைய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். கும்பல்களெல்லாம் கிறித்தவக் கல்லூரிகளில் படித்து வந்தவர்கள்தான். அத்வானி போன்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் இங்கு படித்தவர்களே. அந்த வகையில் பார்த்தால் மிஷனரிகளின் சேவையில் முக்கியப் பங்கை இவர்கள்தான் அனுபவித்திருக்கின்றனர்.
‘இயேசு சங்கம்’ நடத்தி வரும் சென்னை லயோலா கல்லூரி இந்தியாவின் சிறந்த கல்லூரிகளில் ஒன்று என்கிறார்கள். நடிகர்கள், பணக்காரர்கள், அதிகாரி – அரசியல்வாதிகள் போன்றவர்களின் வாரிசுகள் இங்குதான் படிக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் ‘இந்துக்கள்’ என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், கிறித்தவப் பள்ளியோ, அரசுப் பள்ளியோ அங்கே தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறை அம்பேத்கார் முதல் குப்பன் சுப்பன் வரை மாறவில்லை. அவர்கள் படிக்கக்கூடாது என்ற மனுதர்மம் இன்னும் இறக்கவில்லை.
தற்சமயம் கல்வி நிறுவனங்கள் நடத்தும் சிறுபான்மைப் பிரிவினருக்கு சட்டத்தில் சில சலுகைகள் உள்ளது உண்மை. ஆனால், இச்சலுகை மதச் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, மொழி, இனம் என்று பலருக்கும் தரப்படுகிறது. அதை வைத்தே ராமகிருஷ்ணா மிஷன், சமஸ்கிருதக் கல்லூரிகள் போன்ற இந்துக்களும் சலுகைகளை அனுபவிக்கின்றனர். ராமகிருஷ்ணா மிஷன் கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர் நியமன முறைகேடுகளைத் தடுப்பதற்காக மேற்கு வங்க அரசு தலையிட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடிய மிஷன், ‘நாங்கள் ராமகிருஷ்ண பரமஹம்சரை வழிபடும் சிறுபான்மையினர், இந்துக்களல்ல’ என்று பகிரங்கமாக அறிவித்தது.
கல்விக் கொள்ளைக்காக மதத்தையே மாற்றிக்கொள்கிறார்களே என்று எந்த இந்து பக்தரும் இதுவரை கேள்வி எழுப்பியதில்லை. இத்தகைய முறைகேடுகள் எல்லாத் தனியார் கல்வி நிறுவனங்களிலும் நடந்து வருகின்றன. சிறுபான்மை கல்வி நிறுவனங்களும் விதி விலக்கல்ல. கேரளத்தில் கிறித்தவ மிஷனரிகள், நாயர்கள் மற்றும் இசுலாமியக் கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்த முனைந்த நம்பூதிரிபாடு அரசு அதற்காகவே கவிழ்க்கப்பட்டதும் ஒரு உதாரணம்.
சிறுபான்மையினருக்கான கல்விச் சலுகைகளால் இசுலாமிய மக்கள் அடைந்த பயன் என்ன? இந்துக்களை விடவும் கல்வி, வேலை வாய்ப்பில் அவர்கள் அதிகம் பயனடைந்திருக்கிறார்களா என்பதையும் நாம் பரிசீலிப்போம். தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனத்தின் ஆய்வுப்படி (1987-88) கிராமப்புற முசுலீம்களில் 58% பேர் கல்வியறிவற்றவர்கள். இந்துக்களில் கல்வியறிவற்றோர் 51% பேர். நகர்ப்புறத்திலோ 42% முசுலீம்கள் கல்வியறிவற்றவர்கள்; இந்துக்களில் 25% பேர் கல்வியறிவற்றவர்கள், முசுலீம் பெண்களின் கல்வியறிவின்மை பற்றிச் சொல்லவே தேவையில்லை.
நகர்ப்புற இந்துக்களில் பட்டப்படிப்பு படித்தோர் 8% பேர்; முசுலீம்களில் 2.3%தான் பட்டதாரிகள். மேலும் முசுலீம் கல்வி நிறுவனங்களில் முசுலீம் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கைதான் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது. படிப்பதே வேலை வாய்ப்புக்காகத்தான் என்ற நிலைமையும், அரசு வேலை வாய்ப்புகளில் முசுலீம்கள் புறக்கணிக்கபடுவதாலும், கல்வி கற்பதற்கான அவர்களது ஆர்வமும் இயல்பாகவே குறைந்து விடுகிறது. மேலும் ஏழ்மை காரணமாக பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்துவதென்பது இந்துக்களைவிடவும் முசுலீம் மாணவர்கள் மத்தியில்தான் அதிகமாக இருக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் மட்டும் 90% முசுலீம் மாணவர்கள் ஆரம்பப்பள்ளியையே தாண்டுவதில்லை என்கிறது கோபால் சிங் குழு (1983) அறிக்கை.
வடமாநிலங்களில் குறிப்பாக உ.பி.யில் முசுலீம் மக்களின் தாய்மொழியான உருது திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவதும், பாட நூல்கள் உருது மொழியில் அச்சிடுவது வேண்டுமென்றே தவிர்க்கப்படுவதும், சமஸ்கிருதமயமான இந்தி திணிக்கப்படுவதும், பாடத்திட்டமே மறைமுக இந்துப் பிரச்சாரமாக இருப்பதும் இந்நிலைக்குக் கூடுதல் காரணங்களாக அமைகின்றன.
ஆனால், கல்வி அமைச்சர்களின் மாநாட்டிலே சரசுவதி வந்தனம் பாடப்படும் சூழ்நிலையில், ஆர்.எஸ்.எஸ் .இன் புரட்டல் வரலாறு கல்வித் திட்டத்தில் அமலாக்கப்படும் நிலையில், 1947 இந்தியா – பாக். பிரிவினைக் கலவரத்தில் தன் கைத்துப்பாக்கியால் முசுலீம் பெண்ணைக் கொன்றதை சுயசரிதையில் எழுதிப் பெருமைப்படும் ராஷ்டோகி (ஓய்வு பெற்ற பேராசிரியர்) போன்ற இந்து வெறியரெல்லாம் – தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறுப்பெடுக்கும் காலத்தில், சிறுபான்மை மக்கள் சலுகை தந்து சீராட்டப்படுவதாகக் கூறுவது, அப்பட்டமான பித்தலாட்டமாகும். சிறுபான்மையோ, பெரும்பான்மையோ, கல்வி என்பதைக் கடைச்சரக்காக்கி விற்றுவரும் சூழ்நிலையில் உழைக்கும் மக்களுக்கு எந்தச் சலுகையுமில்லை என்பதே நடைமுறை. ஒரு மதச்சார்பற்ற அரசில் மதத்தின் பிடியிலிருந்து கல்வியை விடுதலை செய்வதுதான் இந்தப் பிரச்சினைக்குரிய ஒரே தீர்வு. அத்தகைய அரசில் சிறுபான்மையோரின் கல்விக்கும் உத்தரவாதமிருப்பதால் அவர்களுக்குச் சலுகை வேண்டும் என்ற கேள்வியே எழாது.
கிறித்தவ – இசுலாமியக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில பெரும்பான்மையினர் ‘இந்துக்கள்’தான். ஆனால், ‘இந்துக்களால்’ நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் பயில்பவர்கள் யார்? நிறுவனத்தை நடத்துகின்ற குறிப்பிட்ட ‘மேல்’சாதியினர்தான் பெரும்பான்மையாகப் படிக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் ‘இந்துக் கல்லூரிகள்’ என்ற பெயரில் ஏராளமான நிறுவனங்கள் உண்டு. நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருக்கும் ‘இந்துக் கல்லூரிகள்’ சைவ வேளாளருக்குச் சொந்தமானவை. ஆசிரியர் நியமனத்திலிருந்து, மாணவர் சேர்க்கை வரை சைவப் பிள்ளையினருக்குத்தான் முன்னுரிமை. அதைப்போல ‘ஆதித்தன் குரூப்’ நடத்தும் கல்லூரிகளில் நாடார்களுக்குத்தான் முதல் மரியாதை. தென் மாவட்டக் கலவரங்களின் போது பல தேவர் கல்லூரிகளில் படித்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தூக்கி எறியப்பட்டனர். அத்துடன் அவர்கள் கல்வி வாழ்க்கையும் முடிந்தது.
இப்படி தமிழகத்தில் வட்டார மேல் சாதியினரால் நடத்தப்படும் ‘இந்துக் கல்லூரிகளில்’ தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைப்பது குதிரைக் கொம்புதான். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு சுயநிதிக் கல்லூரிகளின் இடஒதுக்கீடு மற்றும் கட்டணங்களை முறைப்படுத்தும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. அரசுப் பதவிகளில் இடஒதுக்கீடு பெறுவதே சமூகநீதி என்று பேசும் மேல் சாதிக்காரர்களெல்லாம் – இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். காரணம் தங்கள் கல்விக் கொள்ளை குறைந்துவிடும் என்பதே. ஆக ‘இந்துப்’ போர்வையில் நடத்தப்படும் இம்மோசடிகளை மறைப்பதற்கு, இந்து முன்னணியின் பிரச்சாரம் எப்படி உதவுகிறது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே ‘காசுக்கேற்ற கல்வி’ என்பதுதான் உண்மையான பிரச்சினை. ”தமிழ் வழிக்கல்வி வேண்டாம், (கிறித்தவ) ஆங்கில மொழிக் கல்விதான் வேண்டும்” என்று கூறும் மெட்ரிக்குலேசன் கல்விச் சங்கம் ஒரு நாள் பள்ளி அடைப்பையே நடத்தியிருக்கிறது. இந்தச் சங்கத்தின் நிர்வாகிகள் எல்லாம் ‘இந்துக்கள்’தான். சங்கர மடம் துவக்க இருக்கும் மருத்துவக் கல்லூரியை எதிர்த்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். மாணவர்களில் பெரும்பான்மையினர் ‘இந்துக்கள்’தான். ‘இந்து நலன்’ பேசும் இந்து மதவெறியர்கள் இத்தகைய பிரச்சினைகளில் மக்கள் நலனுக்கு விரோதிகளாக இருக்கிறார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.
இந்து முன்னணி கவலைப்படும் அளவிற்கு இந்துக்கல்வி நிறுவனங்கள் இல்லாமலில்லை. சங்கரமடம், சைவ ஆதீனங்கள், பங்காரு, சாயிபாபா, ஆனந்தமாயி, சின்மயானந்தா, சித்பவானந்தா, ராமகிருஷ்ணா மிஷன், விவேகானந்தா கேந்திரா, ஆர்.எஸ்.எஸ்.ன் சேவா பாரதி, ஜெயலலிதா, சசிகலா, உடையர், வாழப்பாடி, தங்கபாலு, விஸ்வநாதன், தம்பித்துரை, சோ.பாலகிருஷ்ணன் இன்னபிற வகையாறாக்களெல்லாம் ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.
இனி, இராம.கோபாலன் ஒரு உண்மையான இந்துவாக இருந்தால் கீழ்க்கண்ட உண்மையான இந்து நலனுக்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.
  1. ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசதத் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சமசுகிருத மொழியில்தான் கல்வி. மிலேச்ச, சூத்திர மொழிகளுக்கு இடமில்லை. மெக்காலே பாணியிலான கல்வித் திட்டத்திற்குப் பதில் வேத, உபநிடத, புராண, இதிகாச, மனுதர்மம் முதலியவைதான் கல்வித்திட்டம். இந்துக்களே அணிதிரண்டு வாருங்கள்!
  2. இந்துக்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மட்டும் இந்து மாணவர்களுக்குக் கட்டணம் கிடையாது. அல்லது குறைவான கட்டணமே வசூலிக்க வேண்டும்.
  3. கிறித்தவ, இசுலாமியக் கல்வி நிறுவனங்களில் – இந்துக்கள் யாரும் படிக்கக்கூடாது, பணியாற்றக்கூடாது!
- இப்படி ஆத்ம சுத்தியுடன் இந்து முன்னணி கோரிக்கைகளை முன்வைத்துப் போராட வேண்டும். போராடினால் இந்து மத வெறியர்களை ஒழிப்பதற்கு எவரும் மெனக்கெட வேண்டியதில்லை. ‘இந்துக்களே’ பார்த்துக்கொள்வார்கள்.
-தொடரும்
www.vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக