ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

கூட்டணி தேன்கூடு கலைத்தது யார்? : விஜயகாந்தின் புது ரூட்டு?

சட்டசபை தேர்தலில் உருவான அ.தி.மு.க., தே.மு.தி.க., கூட்டணியின் "தேன் கூடு' உள்ளாட்சித் தேர்தலில் கலைக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சு நடத்த அ.தி.மு.க., அழைக்கவில்லை என்ற காரணத்தை வெளியே தெரிவித்தாலும், உள்ளுக்குள்ளே அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க தே.மு.தி.க., தலைமை விரும்பவில்லை என்ற தகவல் கசிந்துள்ளது. தனித்து போட்டியிட்டு, ஓட்டு சதவீதத்தை அதிகரித்து, வரும் லோக்சபா தேர்தலில் பேரம் பேசுவதற்காக புது ரூட்டில் பயணிக்க தே.மு.தி.க., முடிவெடுத்துள்ளது. தே.மு.தி.க., துவக்கி ஏழு ஆண்டு தொட்டுள்ள நிலையில், அக்கட்சி ஒரு சட்டசபை மற்றும் ஒரு லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு பிரயோஜனம் இல்லை என்பதால், கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
தேர்தல் முடிவில் எதிர்கட்சி அந்தஸ்து தே.மு.தி.க., வுக்கு கிடைத்தது. அ.தி.மு.க., ஆட்சி அமைத்த இரண்டு மாதங்கள் வரை தே.மு.தி.க., நட்புறவுடன் இருந்தது. ஆனால், அ.தி.மு.க., தலைமையின் அதிருப்திக்கு ஆளாகும் வகையில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் பதில், கூட்டணி முறிவுக்கு அச்சாரமாக அமைந்து விட்டது.
தனது பிறந்ததினத்தை ஒட்டி, கடந்த மாதம் 24ம்தேதி தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் 3 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை விஜயகாந்த் வழங்கினார். அப்போது நடந்த நிருபர்கள் சந்திப்பின் போது, "100 நாட்கள் அ.தி.மு.க., ஆட்சியின் சாதனை குறித்து உங்கள் கருத்து என்ன?' என்ற கேள்வியை விஜயகாந்திடம் கேட்டனர். அதற்கு அவர், "எதையுமே ஆறு மாதம் பார்த்து தான் சொல்ல முடியும். முதன் முதலாக தி.மு.க., ஆட்சி அமைந்ததும் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு காமராஜரும் இதே பதிலை தான் சொல்லியுள்ளார்' என உதாரணத்தை மேற்கோள் காட்டி பதிலளித்தார். ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கும் விஜயகாந்த், அ.தி.மு.க.,வின் ஆட்சியை பற்றி பொதுவான கருத்தை தெரிவித்திருக்கலாம். அ.தி.மு.க., ஆட்சியை பாராட்ட விரும்பவில்லை என்பதால் தான் அவரிடமிருந்து அப்படியொரு பதில் வந்துள்ளது என்ற குற்றச்சாட்டை அ.தி.மு.க., வினர் தெரிவிக்கின்றனர்.

விஜயகாந்தின் இந்த பதிலை கேப்டன், "டிவி' யில் ஒரு நாள் முழுவதும் ஒளிப்பரப்பினர். இதுவும் ஆளும்கட்சியினருக்கு கடும் அதிருப்தியை அளித்தது. இந்நிலையில் தான் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து அ.தி.மு.க., தரப்பிலிருந்து தெரிவிக்க வில்லை. சட்டசபையில்,"தே.மு.தி.க., எம்.எல்.,ஏ.,க்கள் எங்களுக்கு பாலப்பாடம் நடத்த வேண்டாம்,'' என முதல்வர் ஜெயலலிதா கண்டித்தார். இதற்கிடையில் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் விவகாரத்தில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விஜயகாந்த் விசாரணை நடத்தியதும் ஆளுங்கட்சியின் அதிருப்தியை சம்பாதித்தார். தொடர்ந்து கூடங்குளம் அனுமின் நிலைய விவகாரத்தினால் மத்திய, மாநில அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த மக்களையும் விஜயகாந்த் சந்தித்து பேசியதும் ஆளுங்கட்சி வட்டாரத்தை அதிருப்தியடைய வைத்தது.
இதற்கும் மேலாக அனைத்து கூட்டணிக் கட்சிகளும், தொகுதி பங்கீடு குழுவை அமைத்த போது தே.மு.தி.க., மட்டும் குழு அமைக்கவில்லை. ஆளுங்கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடத்த விருப்பம் தெரிவித்து எந்தக் கடிதமும் அனுப்பி வைக்கவில்லை. இதனால் தான் பேச்சுவார்த்தைக்கு ஆளுங்கட்சியும் அழைக்கவில்லை.

ஆளுங்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் தொடர்ந்து வெளியிடப்பட்டதால் தே.மு.தி.க., அதிர்ச்சி அடைந்தது. அ.தி.மு.க.,வுடன் இனி கூட்டணி அமைக்க வேண்டாம் என்ற முடிவை எடுக்க விஜயகாந்த் விரும்பினார். உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு, தனது கட்சியின் ஓட்டு வங்கியை வலுடைய செய்து, வரும் லோக்சபா தேர்தலில் அதிக சீட்டுகளை பெறும் வகையில் பேரம் பேசுவதற்காக புது ரூட்டில் பயணிக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். அதனால் தான் தனித்து போட்டி என்ற முடிவு எடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தே.மு.தி.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தே.மு.தி.க.,வின் தொண்டர்கள் அ.தி.மு.க., கூட்டணியை விரும்புகின்றனர். எம்.எல்.ஏ.,க்கள் சிலர் விரும்பவில்லை. கூட்டணி முறிவுக்கு அ.தி.மு.க., காரணம் அல்ல; நாங்கள் தான் காரணம். அ.தி.மு.க., ஆட்சியின் 100 நாள் சாதனையை பற்றி நாங்கள் ஆஹா, ஓஹோ என்று சட்டசபையில் பேசியிருக்க வேண்டும். கூட்டணியில் இருந்து கொண்டு எதிரி கட்சியை பாவிக்கிறது போல பாவித்து ஆளுங்கட்சியை பாராட்டி பேசாதது எங்கள் தவறு தான். உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் போட்டியிட எங்கள் தலைமையும் விரும்பவில்லை. அதனால் தான் தொகுதி பங்கீடு குழு அமைக்கவில்லை. காங்கிரசுடன் நாங்கள் நட்பு வைத்திருப்பது போல் காட்டுகிறோமே தவிர, அவர்களிடம் நாங்கள் கூட்டணி வைக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

-நமது சிறப்பு நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக