சரி... அது உறுதி என்று சொல்லலாம். பிடிவாதம் என்றும் அழைக்கலாம். முதல்வராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி... அவருடைய செயல்பாடுகளில் எப்போதும் மாற்றம் இருக்காது. கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தொகுதிப் பேச்சுவார்த்தை கள் நடந்துகொண்டு இருக்கும்போதே... தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து, அத்தனை தலைவர்களுக்கும் ஷாக் கொடுத்தார். அடித்துப் புரண்டு அனை வரும் விஜயகாந்த் அலுவலகத்துக்குப் போய் கண்ணீர் மல்க உட்கார்ந்தார்கள். இந்தப் பேச்சுவார்த்தைகள் நெகடிவ்வாக மாறி வெற்றி-தோல்வியைப் பாதித்துவிடக் கூடாதே என்று கூட்டணித் தலைவர் களை அழைத்துப் பேசினார் ஜெயலலிதா. சில தொகுதிகளை விட்டுக்கொடுத்தார். பல தொகுதிகள் பறித்தபடியே இருந்தன. கடைசி யில் தேர்தலும் முடிந்தது. கருணாநிதியின் எதிர்ப்பு வாக்குகளால் கூட்டணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியது. அதாவது, ஆளும் கட்சியாக ஆவோமா, இல்லையா என்று தெரியாத நிலையி லேயே, கூட்டணிக் கட்சித் தலைவர்களின் மூக்கில் ரத்தம் வரவைத்தார் என்றால், ஆளும் கட்சியாக ஆன பிறகு என்ன ஆகும்?
அதிகப்படியான வேதனையை அனுபவித்துக்கொண்டு இருக் கும் விஜயகாந்த் நிலைமையைப் பார்த்தாலே தெரியும்!
கருணாநிதி ஆட்சியில் பிய்த்துக்கொண்டு ஓடிய விஜயகாந்த் படம், ஜெயலலிதா ஆட்சியில் இவ்வளவு சீக்கிரம் ஃப்ளாப் ஆகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதற்குக் காரணம் ஜெயலலிதா என்பதைவிட விஜயகாந்த்தான் அதிகம் பொறுப்புஏற்க வேண்டும். தன்னைப் பற்றிய மித மிஞ்சிய நினைப்பும் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பும் வைத்திருப்பவர்கள் எப்படி நடந்துகொள்வார்களோ... அப்படித்தான் கடந்த மூன்று மாதங்களாக விஜயகாந்த் செயல்பட்டுவருகிறார். எதிர்க் கட்சித் தலைவர் என்ற அஸ்திரத்தை அவர் முறையாகப் பயன்படுத்தவே இல்லை. ''நான் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேச மாட்டேன். புதிய ஆட்சிக்கு ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டாமா? அதனால்தான் அமைதியாக இருக்கிறேன்'' என்று விஜயகாந்த் சொன்னார். அதைப் பெருந்தன்மை என்று யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ''ஏதோ ஒரு விஷயத்துக்காக விஜயகாந்த் அமைதியாக இருக்கிறார்'' என்றே அனைவராலும் சொல்லப்பட்டது. அந்த விஷயம்... உள்ளாட்சித் தேர்தல்.
முந்தைய தேர்தலின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விருத்தாசலம் என்ற ஒரே ஒரு தொகுதியை மட்டும் பெற்று பிரதி நிதித்துவப்படுத்திய தே.மு.தி.க., இந்தச் சட்டமன்றத் தேர்தலில் 29 தொகுதிகளைக் கைப்பற்றியது. இது சாதாரணமான வளர்ச்சி அல்ல. தத்துவார்த்தப் பின்புலமும் திரும்பிய பக்கம் எல்லாம் தலைவர்களும் குக்கிராமங்களில் கூட கிளைக் கழகங்களும் கொண்ட தி.மு.க-கூட திடீர் என 30 இடங்களைத் தொட முடியவில்லை. ஆனால், இவை எதுவும் இல்லாத தே.மு.தி.க. பெற்றதற்குக் காரணம், கடந்த காலத்தில் அவருக்குக் கிடைத்த சினிமா செல்வாக்கு மட்டும் அல்ல... கடந்த தி.மு.க. ஆட்சி மீது அவர் வைத்த பதில் சொல்ல முடியாத விமர்சனங்களும்தான். அன்றைக்குப் பிரதான எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா மௌனமாக இருந்தபோது, விஜயகாந்த்தின் சத்தம்தான் அதிகமாகக் கவனிக்கப்பட்டது. யாருக்கும் பயப்படாமல் விமர்சனங்களை அள்ளித் தெளித்தார். அதன் மூலமாகத்தான் ஜெயலலிதாவால் கவனிக்கப்பட்டார். 41 இடங்கள் அவருக்குத் தரப்பட்டன. அவற்றில் 11 இடங்கள் நீங்கலாக மற்றவற்றில் வென்றும் காட்டினார். எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்து விஜயகாந்த்துக்குக் கிடைத்தது. அந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டு கட்சியை வழிநடத்தாமல் மௌனம் காக்க நினைத்தார். சட்ட மன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்து கணிசமான இடங்களைக் கைப்பற்றியதுபோல உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க-வுடன் அண்டி நின்று பதவிகளைப் பெறலாம் என்று அவர் திட்டமிட்டார். ஆனால், அதை ஜெயலலிதா விரும்பவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்க ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் தேவைப்பட்டார். இப்போது அந்தத் தேவை இல்லை.
விஜயகாந்த்தை ஜெயலலிதா உதாசீனப்படுத்த இரண்டு காரணங்கள்...
அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துக் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றிய விஜயகாந்த்... வெற்றிக்குப் பிறகு ஜெயலலிதாவை மதிக்கவில்லை என்பதைவிட உதாசீனப்படுத்தினார் என்பது முதல் காரணம். சட்டசபைக்கு வரவில்லை. சுதந்திர தின விழாவிலும் ஆள் இல்லை. ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆன விழாக் கொண்டாட்டத்தின்போதும் சபையில் இல்லை. ''இந்தக் குறைந்தபட்ச நன்றியைக்கூட காட்டாதவர் எப்படிக் கூட்டணியில் இருக்கலாம்?'' என்பது ஜெயலலிதாவின் மனதுக்குள் உள்ள கேள்வி.
இரண்டாவது, எதிர் அணியில் எப்போதும் பல கட்சிகளை இணைத்து பலமானவர் என்ற தோற்றத்தை உருவாக்கும் கருணாநிதி, இந்த முறை தனியாக நிற்கப்போகிறேன் என்று அறிவித்துவிட்டார். ஒப்புக்காவது 11 கட்சிக் கூட்டணி, 13 கட்சிக் கூட்டணி என்று துக்கடாக்களைக்கூட இணைத்துக்கொள்ளும் கருணாநிதியே தனியாக நிற்கும்போது, ஆட்சியில் பலம் பொருந்திய ஆளும் கட்சியாக இருக்கும் தனக்கு எதற்கு விஜயகாந்த்? தேர்தலில் அனைவரும் வென்றால் தன்னால்தானே அ.தி.மு.க. வென்றது என்று அவர்கள் சொந்தம் கொண்டாடாடும் கொடுமை தேவையா என்று ஜெயலலிதா நினைக்கிறார். அதனால்தான், தேர்தல் தேதியும் அறிவிக்காமல், எந்தத் தொகுதி யாருக்கு என்ற இட ஒதுக்கீட்டுக் கொள்கையையும் அறிவிக்காமல் இருக்கும் நிலையில், மேயர் மற்றும் நகராட்சித் தலைவர்கள் பதவிகளுக்கான வேட்பாளர்களை அவசரப் பட்டு ஜெயலலிதா அறிவித்தார். கூட்டணி என்று சொல்லிக்கொண்டு இனிமேலாவது யாராவது வருவார்களா என்று மனசுக்குள் கேட்டுக்கொண்டார். அதையும் மீறி கம்யூனிஸ்டுகள் பேச்சுவார்த்தைக்கு வந்தது அவர்களுடைய 'பரந்த உள்ள’த்தைக் காட்டியது. ஆனால், சிக்கிக்கொண்டார் விஜயகாந்த்!
ஜெயலலிதாவுக்குக் கோபம் வந்துவிடக் கூடாது என்பதற்காக எதையும் பேசாமல் இருந்துவிட்டார் விஜயகாந்த். மிகப் பெரிய சறுக்கலான சமச்சீர்க் கல்வி விஷயத்தில்கூட 'வெண்டைக்காயை விளக்கெண்ணெயில் தோய்த்த’ அறிக்கையே அவரிடம் இருந்து வந்தது. 100 நாள் ஆட்சி நிறைவுக்கு எதிர்க் கட்சித் துணைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் பேசிய பேச்சு... செங்கோட்டையன் பேசியதைப் போலவே இருந்தது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு 'விசாரணை கமிஷன் தேவை இல்லை’ என்பதே இவருடைய கருத் தாக இருந்தது. அத்தனை கட்சிகளும் விசாரணை கமிஷன் கேட்டன. அ.தி.மு.க-வும் தே.மு.தி.க- வும் மட்டுமே இதை மறுதலித்த கட்சிகள். இப்படி எல்லாம் பவ்யம் காட்டினோமே... ஏன் எங்களை ஒதுக்குகிறீர்கள் என்று தே.மு.தி.க. கேட்கலாம். அது 'உள்ளாட்சித் தேர்தலுக்கான நடிப்பு’ என்று நினைக்கிறார் ஜெயலலிதா. அவரிடம் இருந்து கிடைக்க வேண்டிய நல்ல பெயரும் கிடைக்காமல், ஆளும் கட்சி செய்த தவறுகளை விமர்சித்தவர் என்று பொது மக்களிடம் கிடைத்திருக்க வேண்டிய நல்ல பெயரும் கிடைக்காமல், நட்டாற்றில் நிறுத்தப்பட்டு உள்ளார் விஜயகாந்த்.
பொதுவாக, அரசியலில் 'ஹிடன் அஜெண்டா’ ரொம்ப நாளைக்குச் செல்லுபடி ஆகாது என்பார்கள். எல்லா அரசியல்வாதிகளும் ஒருவரைச் சேர்ப்பதும் விலக்குவதும் இந்த மாதிரியான 'மறைமுக வேலைத் திட்டப்படி’தான் என்பதால், விஜயகாந்த்தின் அரசியல் வெகு சீக்கிரமே ஜெயலலிதாவால் உணரப்பட்டுவிட்டது. இந்தக் கட்டுரை எழுதப்படும் திங்கள் கிழமை மாலை வரை தே.மு.தி.க. பிரதிநிதிகளுடன் அ.தி.மு.க. குழுவினர் பேசவில்லை. கம்யூனிஸ்டுகளாவது இரண்டு முறை பேசித் திரும்பிவிட்டார்கள். தே.மு.தி.க- வுடன் பேசுவதற்கான முஸ்தீபுகளும் இல்லை. என்ன செய்வது என்று விஜயகாந்த்துக்கும் தெரியவில்லை. வழக்கம்போல தனியாக நின்றால், எத்தனை இடங்களைப் பிடிக்க முடியும்? தோற்றால், 'அ.தி.மு.க. செல்வாக்குடன்தான் எம்.எல்.ஏ. ஆனோம்’ என்று குறை சொல்வார்களே? இப்படி எத்தனையோகேள்விகள் தொக்கி நிற்கின்றன.
பொறுப்பான எதிர்க் கட்சியாக இருந்து ஜெயலலிதா செய்த தவறுகளை விமர்சித்து வந்திருந்தால், இன்று விஜயகாந்த்தின் நிலைப்பாடுகளுக்குக்கூட பொதுமக்கள் மத்தியில் ஒருவிதமான செல்வாக்குக் கிடைத்திருக்கலாம். அதையும் இழந்து... இதையும் இழந்து... என்ன செய்வதாக உத்தேசம் கேப்டன்?
thanks vikatan+chandran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக