செவ்வாய், 20 செப்டம்பர், 2011

ஐ. நா., பொது சபை கூட்டம் இன்று துவங்குகிறது.உச்சகட்ட பாதுகாப்பு!

ஐ. நா., பொது சபை கூட்டம் இன்று துவங்குகிறது: பிரதமர் மன்மோகன் பங்கேற்பு: உச்சகட்ட பாதுகாப்பு!

நியூயார்க் : ஐ.நா., பொதுச் சபையின் இந்தாண்டுக்கான கூட்டம் இன்று துவங்குகிறது. பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 130 நாடுகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அதனால், அந்நகரில் வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஐ.நா., பொதுச் சபை கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறும் ஒன்று. இந்தாண்டுக்கான கூட்டம் 13ம் தேதியே துவங்கிவிட்டாலும், கூட்டத்தின் மிக முக்கியமான நிகழ்ச்சிகளான உலகத் தலைவர்களின் உரைகள், பொது விவாதம் போன்றவை இன்று முதல் துவங்கி 27ம் தேதி வரை நடக்க உள்ளன.
தொடரும் பாதுகாப்பு:நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பின் 10வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கலாம் என்று அமெரிக்க உளவுத் துறை நிறுவனங்கள் கூறியதையடுத்து, அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இன்னும் திரும்பப் பெறப்படவில்லை.மேலும், ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தை முன்னிட்டு, 130 நாடுகளின் தலைவர்கள் அனைவரும் நியூயார்க்கிற்கு வருவதால், பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நியூயார்க் போலீஸ் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "130 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 220 வாகன அணிவகுப்புகளின் பாதுகாப்பை முன்னிட்டு, உளவுத் துறை மற்றும் வெளியுறவுத் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:முக்கிய தலைவர்கள் தங்கும் ஓட்டல்களிலும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில ஓட்டல்களின் அருகில், நிரந்தர தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.வாகனப் பரிசோதனை, பாதாள ரயில் நிலையத்துக்குச் செல்வோரின் உடைமைகள் பரிசோதனை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இம்மாதம் 11ம் தேதியே துவக்கப்பட்டுவிட்டன. தெருக்களில் கூடுதல் எண்ணிக்கையில் போலீசார், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், தலைவர்கள் செல்வதற்கான தனிப் போக்குவரத்துப் பாதைகள், வெடிபொருட்கள் பரிசோதனைகள் போன்ற ஆண்டுதோறும் செய்யக்கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன.

இந்தியாவுக்கு நிரந்தர இடம்:"ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம், அதில் இந்தியாவுக்கு நிரந்தர இடம், லிபியாவின் இடைக்கால கவுன்சிலுக்கு ஆதரவு ஆகியவற்றை பிரதமர் மன்மோகன் சிங் தனது 24ம் தேதி உரையில் வலியுறுத்துவார்' என, வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் நேற்று தெரிவித்தார்.

எரிச்சலில் இலங்கை:இலங்கையில், 2009 மே மாதம் நடந்த இறுதிக் கட்டப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை, ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன், ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் சமீபத்தில் சமர்ப்பித்தார். இலங்கை வெளியுறவு விவகார நடைமுறைகளில் மூன் தலையிட்டதாக இலங்கை இதுகுறித்து குற்றம் சாட்டியது.பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து அதிபர் ராஜபக்ஷே புறப்பட்டுச் சென்றார். 23ம் தேதி பொதுச் சபையில் பேச உள்ள அவர் தனது உரையில், மூன், போர்க் குற்ற அறிக்கை தாக்கல் செய்த விவகாரத்தில் இலங்கையின் ஏமாற்றத்தை அவர் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டங்கள்:இதற்கிடையில், இந்தக் கூட்டத்தை முன்னிட்டு, ஐ.நா., தலைமை அலுவலகத்தின் வெளியில், திபெத், பாலஸ்தீனம், தைவான் போன்ற நாடுகளை ஐ.நா.,வில் உறுப்பினராக சேர்க்கக் கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் நடக்க உள்ளன.

ஐந்து முக்கிய விவகாரங்கள் : இந்தாண்டு ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பல்வேறு உலக விவகாரங்கள் விவாதிக்கப்பட இருந்தாலும், மிக முக்கியமான ஐந்து விவகாரங்கள், அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடிய விதத்தில் விவாதிக்கப்பட உள்ளன.
* பாலஸ்தீனத்துக்கு உறுப்பினர் அந்தஸ்து: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்னைக்குத் தீர்வு காண்பதன் ஒரு படியாக, பாலஸ்தீனத்துக்கு ஐ.நா.,வில் முழுமையான உறுப்பினர் அந்தஸ்து வேண்டும் என, அந்நாட்டின் அதிபர் மகமது அப்பாஸ் கோரியுள்ளார். தனது கோரிக்கையை பொதுச் சபை விவாதத்தில் வைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது கோரிக்கையை தனது "வீட்டோ' எனப்படும் மறுப்பாணை மூலம் நிராகரிக்கப் போவதாக அமெரிக்கா மிரட்டியுள்ளது. இஸ்ரேலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
* மையப்புள்ளியாகும் துருக்கி: அரபுலக நாடுகளின் எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள துருக்கி, ஈராக்கில் நிலையான அரசியல் வேண்டும் எனக் கோரி வருகிறது. அதோடு, லிபியாவுக்கு ஆதரவளித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், தற்போது தான் துருக்கி ஒரு முக்கிய மையப்புள்ளியாக உருவாகி வருகிறது. அதன் அதிபர் டாயிப் எர்டோயனை, அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்க உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எர்டோயன், பாலஸ்தீனத்தின் உறுப்பினர் அந்தஸ்துக்கு தனது ஆதரவை உறுதிப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
* லிபியா விவகாரம்: லிபியா அரசு சார்பில் பங்கேற்பதற்கு, எதிர்ப்பாளர்களின் இடைக்கால அரசின் பிரதிநிதிகளுக்கு ஐ.நா., ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டது. இதையடுத்து, அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றம், சர்வதேச சமூகத்தில் புதிய லிபியா அரசுக்கு ஆதரவு, முன்னாள் தலைவர் கடாபியைத் தேடும் பணியை முடுக்கி விடுதல் ஆகிய விவாதங்கள் இம்முறை இடம் பெறுகின்றன.
* சிரியா மீது மேலும் தடைகள்: ஏற்கனவே ஐ.நா., ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா என மூன்று தரப்பும் இணைந்து சில தடைகளை விதித்திருந்த போதும், தனது மக்கள் மீதான அடக்குமுறையை சிரியா அதிபர் பஷர் அல் அசாத் கைவிடவில்லை. கடந்த வாரம் ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் விடுத்த அறிக்கை ஒன்றில், சிரியாவுக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒன்று திரளும்படி கோரியிருந்தார். சிரியா மீதான கடுமையான பொருளாதார தடைகளுக்கு ரஷ்யாவும், சீனாவும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்த விவாதம் இந்த முறை இடம் பெறுகிறது.
* தெற்கு சூடான் வன்முறை: புதிய நாடாக அதிகாரபூர்வமாக உதயமாகியுள்ள தெற்கு சூடான், இம்முறை முதன் முறையாக ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர்ரை சந்திப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும், சூடான் மற்றும் தெற்கு சூடான் இடையே நடந்து வரும் சில வன்முறை தாக்குதல்கள் இன்னும் நிற்கவில்லை. இதுகுறித்த விவாதமும் இம்முறை நடக்க உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக