சனி, 17 செப்டம்பர், 2011

அரக்கோணம் ரயில் விபத்து: உதவிக்கு வந்தது கடவுளல்ல, தொழிலாளி வர்க்கம்!

சென்னை, அரக்கோணம் அருகேயுள்ள சித்தேரியில் 13.09.2011 இரவு நடந்த இரயில் விபத்து குறித்து அறிந்திருப்பீர்கள். அதில் பத்து பேர் உயிரிழக்க, 75க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதில் சிலர் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை. இயற்கை சீற்றமல்லாது நடக்கும் விபத்துக்கள் இந்தியா போல எங்கும் நடப்பதில்லை. பாசஞ்சர், புறநகர் இரயில்களில் பயணிக்கும் சாதரண மக்கள் பாதுகாப்பாக செல்வார்கள் என்பதற்கு நமது அதிகார வர்க்கம் எப்போதும் கவலைப்படுவதில்லை.
விபத்து குறித்து முறையான விசாரணை நடந்து காரணங்கள் கண்டறியப்படுவதற்கு முன்னரே அமைச்சர்களும், அதிகார வர்க்கமும் புறநகர் ரயிலின் ஓட்டுநரின் தவறென்று கை கழுவதில் அவசரம் காட்டுகின்றனர். அவர்தான் தவறு செய்தார் என்பதை முறையாக ஆய்வு செய்து கண்டுபிடித்துவிட்டு அறிவிக்கலாமே? எல்லா விபத்திற்கும் ரயில்வே ஓட்டுநர்கள்தான் காரணமென்றால் அதிகாரிகளுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் எந்தப் பொறுப்புமில்லையா?
ஓட்டுநர்களின் தயவில் மட்டும்தான் பொதுமக்களது உயிர் பயணிக்கிறது என்பது உண்மையானால் ரயில்வேயின் பொது மேலாளரது ஊதியத்தை ஓட்டுநர்களுக்கும், ஓட்டுநர்களின் ஊதியத்தை அதிகாரிகளுக்கும் மாற்றி அமைக்கலாமே? ஒத்துக் கொள்வார்களா, நமது அதிகாரிகள்?

இரவு 9.30 மணிக்கு விபத்து நடக்கிறது. மழையும் பெய்கிறது. எனினும் அருகாமையில் இருந்த மக்கள் உடன் வந்திருக்கிறார்கள். அருகாமை இடத்தில் ஒரு திருமண விருந்திற்கு பிரியாணி சமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த முகமது அலியும் அவரது 20 உதவியாளர்களும் சமையலை நிறுத்தி விட்டு ஓடி வந்திருக்கிறார்கள். இடிபாடுகளுக்கிடையில் உள்ள மக்களை காப்பாற்றியிருக்கிறார்கள். தலையற்ற, கை, கால்களற்ற உடல்களையும் எடுத்திருக்கிறார்கள்.
பின்னர் அந்த வட்டாரத்தில் உள்ள மருத்துவர்கள் பலரையும் வற்புறுத்தி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். எல் அன்ட் டி நிறுவனத்தின் தொழிலாளர்களும், லாரி ஓட்டுநர்களும் கூட உடன் வந்து நிவாரண வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். அரக்கோணம் பகுதியில் உள்ள அநேக டாக்சி ஓட்டுநர்களும் காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வேலையினை அவர்களாகவே முன்வந்து இரவு முழுவதும் செய்திருக்கிறார்கள்.
விபத்தில் காயமடைந்தவர்களை சுமந்து சென்றால் பணம் கிடைக்காது, வண்டியையும் கழுவ வேண்டும், பிற சவாரிகளையும் இழக்க வேண்டும் என்ற நிலையில் அவர்களை அப்படி செய்யச் சொன்னது எது? திருமண விருந்து வேலையை நிறுத்தி விட்டு சிதறிக்கிடக்கும் மனிதச்சதை கண்டு நிலை தவறாமல், காயம் பட்ட உயிர்களை அந்த சமையல் தொழிலாளிகள் காப்பாற்றியது எதனால்?
ஒரு வேளை சித்தேரி கிராமத்தில் ஏதாவது ஒரு கோயில் குடமுழுக்கிற்காக நூறு புரோகிதப் பார்ப்பனர்கள் யாகம் வளர்த்து மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கையில் இந்த விபத்து நடந்தால் என்ன செய்திருப்பார்கள்? ரத்தமும், எலும்புத் துண்டுகளும் சிதறி, மக்கள் குற்றுயிரும் கொலையுயிருமாக இருக்கும் நிலை கண்டு மயக்கம் அடைந்திருப்பார்களோ? என்ன இருந்தாலும் சைவ உணவு உட்கொள்ளும் அந்த புனிதர்களுக்கு இந்த வதைக்கூடத்தில் வேலையில்லையே? ஆனால் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டும் அந்த ‘பாய்’கள்தான் விபத்தில் சிக்கிய மனிதர்களின் உடலை யாரும் சொல்லாமலேயே சுமந்தார்கள் என்பதன் காரணம் என்ன? நமக்குத் தோழன் பாயா, இல்லை புரோகிதப் பார்ப்பனரா?
ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள் என்றால் ரவுடிகள் என்று முகத்தை சுழிக்கும் படித்த நடுத்தர வர்க்கம், நாளையே எல் அன்ட் டி தொழிலாளிகள் ஊதிய உயர்விற்காக வேலை நிறுத்தம் என்றால் கரித்துக் கொட்டும் அந்த அன்பர்கள் இதற்கு என்ன சொல்வார்கள்?
காயம்பட்டவர்களை யாரும் அப்பல்லோ மருத்தவமனைக்கு கொண்டு செல்லப் போவதில்லை. அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு செல்வார்கள். தானாக சரியாகும் சளியென்றாலும் தனியார் மருத்தவமனைக்கு தட்சணை வைக்கும் மேட்டுக்குடியினர்தான் தனியார்மயத்திற்கு ஆதரவாக வெறியுடன் கூச்சலிடுவார்கள். ஆனால் விபத்தில் படுகாயமுற்ற மக்களை காப்பாற்ற அந்த தனியார் மயம் முன்வராது.
ஆம். இந்த உலகில் இயற்கைச் சீற்றமோ, துயரமான விபத்தோ எதுவாக இருந்தாலும், உதவிக்கு ஆண்டவன் வரப்போவதில்லை. உழைக்கும் மக்கள்தான் உதவிக்கு வருவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக