செவ்வாய், 27 செப்டம்பர், 2011

தேர்தலிலும் பங்கேற்கலாம் : பெண்களுக்கு ஓட்டுரிமை சவுதி மன்னர் அறிவிப்பு !



ரியாத்: சவுதி அரேபியாவில் தேர்தலில் இனிமேல் பெண்கள் ஓட்டளிக்கலாம் என்று மன்னர் அப்துல்லா அறிவித்துள்ளார்.சவுதியில் கடுமையான சட்ட திட்டங்கள் அமலில் உள்ளன. பெண்கள் கார் ஓட்ட கூடாது. ஆண் துணை இல்லாமல் பெண்கள் எங்கும் பயணம் செய்ய கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமையும் பெண்களுக்கு இல்லை. இவற்றை எதிர்த்து பல ஆண்டுகளாக பெண் உரிமை இயக்கத்தினர் போராடி வந்தனர். இந்நிலையில் கடும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மன்னர் அப்துல்லா நேற்று கூறுகையில், ÔÔதேர்தலில் இனிமேல் பெண்கள் ஓட்டளிக்கலாம். நகராட்சி தேர்தலிலும் பங்கேற்கலாம். இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையில் பெண்கள் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யலாம். அத்துடன் அரசின் எல்லா ஆலோசனை கவுன்சிலிலும் பெண்கள் இடம்பெறலாம்ÕÕ என்று தெரிவித்தார்.

சவுதியில் நகராட்சிகளுக்கு மட்டும்தான் தேர்தல் நடக்கிறது. வேறு எந்த தேர்தலும் இல்லை. சவுதி நகராட்சிகளுக்கு முதல் முறையாக கடந்த 2005ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அதன் பதவி காலம் கடந்த 2009ம் ஆண்டு முடிந்தது. ஆனால், தேர்தல் நடத்தாமல் நகராட்சி பதவி காலத்தை 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து மன்னர் உத்தரவிட்டார். இந்நிலையில் அடுத்த தேர்தல் வரும் வியாழக்கிழமை நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி விட்டது. மன்னர் அறிவிப்பை அடுத்து இந்த தேர்தலில் பெண்களுக்கும் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதியில் மொத்தம் 285 நகராட்சி கவுன்சில்கள் உள்ளன. அவற்றில் பாதி உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதி பாதி இடங்களுக்கு அரசே உறுப்பினர்களை நியமிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக