ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

உள்ளாட்சி தேர்தல் நடப்பதால் திருச்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை ஒத்தி வைக்க வேண்டும்; ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக அறிவித்ததால், தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு 14 மணி நேரம் முன்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டதால் அ.தி. மு.க.வைத் தவிர எந்த அரசியல் கட்சியாலும் இதுவரை வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிடமுடியவில்லை.

அதுமட்டுமின்றி திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான அக்டோபர் 17-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய ஒருசில மணி நேரங்களிலேயே திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு விடும் என்பதால் அது வாக்காளர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் திருச்சி இடைத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு சாதகமாக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அமைய வாய்ப்பிருக்கிறது.

அதுமட்டுமின்றி, உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில், திருச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி, வெற்றியை கொண்டாடும் போது அது அரசியல் கட்சிகளுக்கிடையிலான மோதலாக மாறும் வாய்ப்பும் உள்ளது.

திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான அட்டவணை முன் கூட்டியே வெளியிடப்பட்டு விட்ட நிலையில், அதனுடன் எந்த வகையிலும் குறுக்கிடாத படிதான் உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆளும் கட்சியை திருப்தி படுத்துவதையே ஒரே கொள்கையாக கொண்டுள்ள மாநிலத் தேர்தல் ஆணையம், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் விருப்பம் போல தேர்தல் அட்டவணையை தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல்கள் அக்டோபர் 13 மற்றும் 15-ஆம் தேதிகளில் நடைபெற்றன. அதற்கு முன்பாக அக்டோபர் 11-ஆம் தேதியே மதுரை மத்திய தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்ட போதிலும், அதன் முடிவுகள் உள்ளாட்சி தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக, உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த பின்னர் அக்டோபர் 17-ந் தேதி தான் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

அது மட்டுமின்றி, கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் கூட ஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் இன்னொரு மாநிலத்தின் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக தமிழகத்தில் தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்து தான் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

அதே போல் இந்த உள்ளாட்சி தேர்தலிலும் திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தி விடாமல் தவிர்க்க, அதன் வாக்கு எண்ணிக்கையை அக்டோபர் 19-ம் தேதிக்குப்பிறகு நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக