திங்கள், 5 செப்டம்பர், 2011

Andhra 24 மணி நேரத்தில் 12 சிசுக்கள் மரணம்-கடவுள் காரணம் என அமைச்சர் பேச்சு!


ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 1- ம் தேதி வியாழக்கிழமை காலையில் இருந்து மறுநாள் வெள்ளிக்கிழமை காலை வரை 24 மணி நேரத்திற்குள் 12 சிசுக்கள் மரணமடைந்திருக்கின்றன என்பது அதிர்ச்சிகரமான செய்தி. ஆனால் அதை விட அதிர்ச்சி என்ன வென்றால் குழந்தைகளின் மரணத்தை அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் அலட்சியமாக வெளியிட்டதுதான். மேலும் இந்த மரணத்துக்கு கடவுள்தான் காரணம் என்று படு கேஷுவலாக பேசிய சுகாதார அமைச்சருக்கு கண்டனம் வலுத்துள்ளது.

இது எங்களுக்கு சாதாரணம் என்பதுபோல் மருத்துவமனை டீன் பேசியுள்ளார். கர்நூல் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஏராளமான குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். அங்குள்ள குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில் நூறு குழந்தைகள் வரை அனுமதிக்கலாம். ஆனால் அந்த மருத்துவமனையில் இரண்டு ஆக்ஸிஜன் வெண்டிலேட்டர் மட்டுமே உள்ளது என்பது வேதனை.

குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டலோ அவசர காலத்திலோ அவர்களுக்கு ஆக்ஸிஜன் கொடுக்க முடியாது என்பதுதான் உண்மை. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பும் இதுதான் நேர்ந்திருக்கிறது. ஒரே நாளில் நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்காததாலும் அப்பாவி சிசுக்கள் மரணமடைந்திருக்கின்றன. குழந்தைகளை பறிகொடுத்தவர்கள் அனைவரும் ஏழைத்தாய்மார்கள் என்பதுதான் ஜீரணிக்க முடியாத கொடுமை.

சிசுக்களின் மரணம் பற்றி ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்த உயரதிகாரி ஒருவரின் பதில் மிகவும் அலட்சியமாக இருந்தது. ஆந்திராவில் இதெல்லாம் சாதாரணம். ஒவ்வொரு மருத்துவமனையிலும் தினசரி மூன்று முதல் நான்கு சிசுக்கள் வரை மரணமடைவது இயற்கை என்று கூறினார். பிற அரசு மருத்துவமனைகளோடு ஒப்பிடும் போது கர்நூல் மருத்துவமனையில் சராசரியாக தினசரி மூன்று சிசுக்கள் மட்டுமே மரணமடையும் என்று கூறிய அவர், சம்பவ தினத்தன்று ஒரே நாளில் நாற்பது குழந்தைகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதே 12 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாகிவிட்டது என்றார். இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டனர்.

அதை விட கொடுமை என்னவெனில் மருத்துவமனையை பார்வையிட வந்த ஆந்திர மாநில சுகாதாராத்துறை அமைச்சர் ரவீந்திரா ரெட்டி கூறியதுதான். குழந்தைகளின் மரணத்திற்கு மனிதத்தவறு காரணமல்ல இது கடவுளின் தவறுதான் என்று கடவுளின் மீது பழி போட்டுவிட்டு பணியில் இருந்த மருத்துவர்களை காப்பாற்றிவிட்டார். இதற்கு தெலுங்குதேசம் கட்சியின் மூத்த தலைவர் எர்ரான் நாயுடுவிடம் இருந்து எதிர்ப்பு எழுந்ததை அடுத்து திடீரென்று சிசுக்களின் மரணம் மனிதத்தவறுதான் என்றும் அவற்றிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பல்டி அடித்து பதில் கூறியிருக்கிறார் ரவீந்திரா ரெட்டி.

எதற்கெடுத்தாலும் ஆர்பாட்டம், போராட்டம் என்று அறிவிக்கும் எதிர்கட்சிகள் கூட இந்த சம்பவம் தொடர்பாக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதுதான் உச்சபட்ச வேதனை. அரசு மருத்துவமனைகளின் லட்சணம் இந்த அளவிற்கு இருக்கிறது.

ஆந்திராவில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை முறை கேள்விக்குறியாகத்தான் உள்ளது. தமிழ்நாட்டில் இதுபோன்ற நிலை ஏற்படும்முன் அரசு விழித்துக்கொள்வதே நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக