வியாழன், 8 செப்டம்பர், 2011

சட்டவிரோத நாணயமாற்று நிலையம் முற்றுகை 8.4 மில்லியன் ரூபா பறிமுதல்!

கொழும்பு புறக்கோட்டை 2ம் குறுக்குத் தெருவில் சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தை மாற்றும் ஒரு நிலையத்தை மோசடி பொலிஸ் பிரிவினர் நேற்று முற்றுகையிட்டு அங்கிருந்தவர்களிடமிருந்து 8.4மில்லியன் ரூபாவை பறிமுதல் செய்து மூவரை கைது செய்துள்ளனர்.இந்த சட்டவிரோத பணமாற்று நிலையத்தின் சூத்திரதாரியாக இருந்தவர் பம்பலப்பிட்டி விசாகா வீதியில் உள்ள ஒரு மருத்துவ நிலையத்தின் உரிமையாளராவார். இந்த பண மோசடியை தமிழில் உண்டியல் பணமாற்று செயற்பாடு என்று பொதுவாக அழைப்பார்கள்.

அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள், இங்கிலாந்து போன்றவற்றில் வாழும் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து செல்லும் தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர், முஸ்லிம்களும் தங்கள் சொந்த நாட் டில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணத்தை இந்த உண்டியல் முறையிலேயே பொதுவாக அனுப்பி வைப்பார்கள்.
இவ்விதம் வெளிநாட்டில் டொலர்களாகவும், டொய்ஸ் மார்க்காகவும், ஸ்ரேலிங் பவுனாகவும் கிடைக்கும் பணத்தை இந்த உண்டியல் தொழிலை நடத்துபவர்கள் வெளிநாட்டில் வைத்துக் கொண்டு அதற்கான இலங்கைப் பணத்தை உள்ளூரில் உள்ள அவர்களின் நண்பர்கள் உறவினர்களுக்கு கையளிப்பார்கள்.
இதற்காக அவர்கள் ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தின் அடிப்படையில் கட்டணமும் அறவிடுவார்கள். இது இலங்கையின் தேசிய வருமானத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒரு மோசடியாகும். இலங்கைக்கு சட்டபூர்வமாக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நாணயமாற்றை நாட்டுக்குள் அனுப்பி எங்கள் தேசிய வெளிநாட்டு நாணயமாற்று விகிதாசாரத்தை தவிர்ப்பதற்காகவே இலங்கைக்கு வரவேண்டிய பணத்தை இந்த மோசடிக்காரர்கள் தாங்களே பெற்று கொள்ளை இலாபம் பெற்றிருக்கிறார்கள் என்று ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார்.
புறக்கோட்டையில் கைது செய்யப்பட்ட ஒருவரை பொலிஸார் விசாரணை செய்த போது வெளிநாட்டில் கிடைக்கும் பணத்தை தாங்கள் வைத்துக் கொண்டு அதற்கான பெறுமதியை இலங்கை ரூபாவில் இங்குள்ளவர்களுக்கு செலுத்திவிடுவதாக அவர் கூறினார்.
இதனடிப்படையில் ஒரு வருடத்திற்கு எங்கள் நாட்டுக்கு கிடைக்கவிருந்த 20ஆயிரம் மில்லியன் வெளிநாட்டு நாணய மாற்றை இவர்கள் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட சூத்திரதாரி முன்னர் ஒரு தனியார் வங்கி ஊழியராவார். இவர் தெஹிவளையில் வசிப்பவரென அறிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் இந்தியா, கனடா, இங்கிலாந்து, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து உட்பட மேலும் பல நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களே இந்த உண்டியல் சேவையின் மூலம் பணத்தை அனுப்பி வருகிறார்கள் என்று ஒரு பொலிஸ் அதிகாரி கூறினார். இவ்விதம் கிடைக்கும் பணத்தை சில எதிர்கட்சியைச் சார்ந்த சில தமிழ் கட்சிகள் தங்களின் சட்டவிரோதமான பணிகளுக்கும் செலவிடுவதாக அறிவிக்கப்படுகிறது. இந்த உண்டியில் வங்கி நிலையம் இரண்டரை ஆண்டுகளாக பாரிய ரீதியில் இந்தத் தொழிலை புரிந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
நேற்றைய இந்த முற்றுகைக்கு பின்னர் உண்டியல் பணமாற்று தொழில் செய்து வந்த பலர் இப்போது தலைமறை வாகியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக