திங்கள், 19 செப்டம்பர், 2011

தேமுதிக கிளை கூண்டோடு கலைக்கப்பட்டது.பரமக்குடி எதிரொலி


துப்பாக்கி சூடு சம்பவ விவகாரம் தேமுதிக கொடிகள் எரிப்பு கிளை கூண்டோடு கலைப்பு

ராமநாதபுரம் : பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பத்துக்கு நீதி விசாரணை தேவையில்லை என கருத்து கூறிய தேமுதிக தலைமையை கண்டித்து ராமநாதபுரம் அருகே தேமுதிக கிளை கூண்டோடு கலைக்கப்பட்டது. கம்பத்தை பிடுங்கி எறிந்து கொடி, தோரணங்களை தொண்டர்கள் தீவைத்து எரித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ல் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பலியானோர் குடும்பத் துக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து கூறாமல் மவுனம் காத்து வந்தார். அக்கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், 6 பேர் படுகொலைக்கு நீதிவிசாரணை தேவையில்லை என சட்டசபையில் பேசி னார். இது தேமுதிக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
  இந்நிலையில், ராமநாதபுரம் அருகே காரேந்தல் கிராமத்தில் தேமுதிக தொண்டர்கள் கொடிக்கம்பத்தை பிடுங்கி எறிந்தனர். தேமுதிக கரை வேட்டி, கொடி, தோரணங்களை நேற்று காலை பெட்ரோல் ஊற்றி எரித்து கட்சியை கூண்டோடு கலைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.


ஒருங்கிணைப்பாளர் காசி முருகேசன், தலைவர் முருகானந்தம், செயலாளர் ராஜேஷ்குமார் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுக்கொரு முறை தேவேந்திரகுல மக்களை உயிர்பலி வாங்கும் சம்பவம் தொடர்கிறது. ஆட்சியில் அமர, எங்கள் ஓட்டுக்களை பயன்படுத்திக்கொள்ளும் கட்சியினர்,  கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக விஜயகாந்த் ரசிகர்களாக இருந்த நாங்கள் அவர் கட்சி தொடங்கிய பிறகு  மாவட்ட, மாநில மாநாடுகளில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தோம்.
நீதி விசாரணை தேவையில்லை எனக்கூறிய அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

மதுரையில் ஆர்ப்பாட்டம்: மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்எல்ஏ சுந்தர்ராஜன். இவரது வீடு, தல்லாகுளம் சின்னசொக்கிகுளம் கமலா நகர் முதலாவது தெருவில் உள்ளது.
இவரது வீட்டை மள்ளர் இலக்கிய கழக மாநில பொருளாளர் சோலை பழனிவேல் ராஜன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் ராஜ்குமார், நகர் செயலாளர் ராஜாராம், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் முருகானந்தம் உள்பட 14 பேர் திடீரென நேற்று முற்றுகையிட்டனர். தேமுதிகவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தல்லாகுளம் போலீசார் 14 பேரையும் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக