திங்கள், 19 செப்டம்பர், 2011

சிக்கிம் குலுங்கியது- ரிக்டர் அளவில் 6.8 பதிவு:குழந்தை உட்பட 6 பேர் பலி!

வட இந்தியாவில் நிலநடுக்கம்: சிக்கிம் குலுங்கியது- ரிக்டர் அளவில் 6.8 பதிவு:குழந்தை உட்பட 6 பேர் பலி!

கேங்டாக் : சிக்கிம் மாநிலத்தில் மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 என பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உணரப்பட்டன.

வடகிழக்கு மாநிலமான சிக்கிம் தலைவர் கேங்டாக்கிலிருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ள சிக்கிம் - நேபாள எல்லையை மையமாகக் கொண்டு மாலை 6.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 என பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக, சிக்கிம் மாநிலத்தில் மின்சாரம், தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் விரிசல் ஏற்பட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சிக்கிம் மணிபால் பல்கலைக்கழகம், வீடுகள், கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்தவுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பீதியுடன் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். எனினும், சேத விவரங்கள், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை.

மேலும், இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், தலைநகர் டில்லி, உத்தர பிரதேசம், பீகார், அசாம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் உணரப்பட்டன. அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசத்திலும், நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் காரணமாக பெங்காலில் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. டார்ஜலிங், ஜெய்பைகுரி, கோச்பெகார், சிலிகுரி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை பட்டுள்ளது. பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன

பிரதமர் மன்மோகன் சிங், சிக்கிம் முதல்வர் பவன்சாம்லிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சேத விவரங்கள் குறித்தும், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் குறித்தும் பேசினார். இதனை தொடர்ந்து பேரிடர் மேலாண் அமைப்பு கூட்டத்தை கூட்டுமாறு கேபினட் செயலாளருக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனிடையே, சிக்கிம் மாநில தலைமைச் செயலர், "நிலநடுக்கம் தொடர்பான சம்பவத்தில், ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர்' என, தெரிவித்தார்.

நிலநடுக்கத்தில் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் 50 பேர்படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்டு பணிகளில் ஈடுபட 4 விமானப்படை விமானங்களுடன் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிக்கிமில்நிலநடுக்கத்திற்கு பின்னர் ஏற்படும் நில அதிர்வுகள், 5.7.5.1,4.6 என்ற அளவுகளில் ஏற்பட்டன.

நிலநடுக்கம்: நேபாளத்தில் 5 பேர் பலி :நேபாளத்தில் ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்திற்கு 5 பேர் பலியாகியுள்ளனர். நிலநடுக்கம் காரணமாக இங்கிலாந்து தூதரகத்தின் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிழக்கு நேபாளத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட போது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இங்கிலாந்து தூதரகத்தை ஒட்டி அமைந்துள்ள இந்திய தூதரகத்துக்கு எந்தவித சேதமும் ஏற்டவில்லை என தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக