ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

அதிமுக 2வது பட்டியலால் கூட்டணியில் மீண்டும் அதிர்ச்சி தேமுதிக உறவு முறியுமா?


சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக  கூட்டணி அமைத்து போட்டியிடுமா, தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  தன்னிச்சை யாக 10 மேயர் வேட்பாளர்களை அறிவித்த அதிமுக, நேற்று  52 நகராட்சி தலைவர் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.  கூட்டணி கட்சிகளிடையே இது  மேலும்  அதிர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நாள் அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளிவர இருக்கிறது. கடந்த 16ம் தேதி, 10 மாநகராட்சிக்கான மேயர் வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். அனைத்து இடங்களிலும் அதிமுகவே போட்டியிடும் என்பதை வெளிப்படுத்தும் இந்த பட்டியல்  அறிவிப்பு, கூட்டணி  கட்சிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக 2 கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளும் போயஸ் தோட்டம் வந்து, அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை யில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மீண்டும் 17ம் தேதி மாலை சந்தித்து பேசுவதாக தெரிவித்தனர்.   மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில், கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.  அதில், அதிமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், ஏற்கனவே அறிவித்தபடி நேற்று மாலை சந்திப்பு நடைபெறவில்லை.
 இதுபோல, முக்கிய கூட்டணி கட்சியான தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், அவசர ஆலோசனைக் கூட்டமும் நேற்று நடந்தது. கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் தொடரலாமா, வேண்டாமா  என்பது குறித்து நிர்வாகிகளுடன் சூடுபறக்க ஆலோசனை நடந்தது. எனினும், முடிவெடுக்காமல் கலைந்தனர்.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான 2&வது வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா நேற்று அதிரடியாக வெளியிட்டார். இதில், 52 நகராட்சி அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா அறிவித்து வருவது, கூட்டணி கட்சியினரிடையே மேலும் எரிச்சலை  ஏற்படுத்தியுள்ளது.
 இதில், விஜயகாந்தின் தேமுதிகவில் தான் அதிருப்தி அதிகரித்துள்ளது. கூட்டணியை  முறித்துக்கொண்டு, தனித்தே போட்டியிடலாம் என்று முக்கிய நிர்வாகிகள் கூறியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஓரிரு நாளில் இறுதி முடிவு தெரியவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தனித்தா? 3 வது அணியா?
சட்டமன்றத் தேர்தலின் போது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, அதிமுக வேட்பாளர்களை ஜெயலலிதா தன்னிச்சையாக அறிவித்தார். அதுபோலவே இப்போது நடந்து வருவதால் கூட்டணி கட்சிகள் பெரிதும் தர்மசங்கடத்துக்கு ஆளாகி உள்ளன.
கம்யூனிஸ்ட்கள், தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தனித்து போட்டியிடலாம் என்று ஒரு தரப்பும்,  3&வது அணி அமைத்து  போட்டியிடலாம் என்று இன்னொரு தரப்பும் கருதுவதாக தெரிகிறது. எனினும், தேமுதிக தனியாக போட்டியிடுவதில் ஆர்வமாக உள்ளதாக தெரிகிறது.
சட்டசபை தேர்தலை போலவே,  கடைசி நேரத்தில் ஜெயலலிதா இந்த முறையும் தங்களுக்கு ஒரு சில இடங்களை ஒதுக்குவார் என்ற எதிர்பார்ப்பு கம்யூனிஸ்ட்களிடம் உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக