ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

பேசும் மைனா 25 வார்த்தைகள் பேசும் அதிசயம்


 கோவையை அடுத்த சோமனூர் அருகேயுள்ள அனந்தாபுரம் குட்டை தோட்டத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் வீட்டில் வளரும் மைனா ஒன்று மிகவும் அழகாக பேசுகிறது.

வீட்டில் உள்ளவர்களிடம் மிகவும் அன்பாக பழகுகிறது. காட்டில் பறந்து திரிய வேண்டிய இந்த மைனா ராமசாமி வீட்டின் செல்லப்பிள்ளையானது. கடந்த 1 1/2 ஆண்டுக்கு முன்பு ராமசாமியின் பக்கத்து தோட்டத்தில் பனை மரம் வெட்டப்பட்டது. அப்போது மைனா குஞ்சு ஒன்று கீழே விழுந்தது. அதனை ராமசாமி தனது வீட்டுக்கு எடுத்து வந்தார்.
அவரின் மகள்களான புவனா, கார்த்திகா, அன்னபூரணி ஆகியோர் மிகவும் அன்பாக அதனை வளர்க்கத் தொடங்கினார்கள்.

மேலும் மைனாவை தினமும் குளிக்க வைக்கிறார்கள். “குளிக்க வா” என்று அழைத்ததும் குதூகலமாக மைனா ஓடி வருகிறது.
காலையில் எழுந்ததும் 3 சகோதரிகளுக்கும் குட்மார்னிங் என்று பவ்யமாகச் சொல்கிறது. ராமசாமி குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரும் அந்த மைனாவுக்கு அத்துப்படி.

புதிதாக யார் வீட்டுக்கு வந்தாலும் “வாங்க” என்று அன்போடு அழைக்கிறது. அவர்கள் ஏதாவது கேட்டால் அதற்கும் பதில் தயாராக வைத்திருக்கிறது.

இதுவரை 25 வார்த்தைகளை எந்தவித சறுக்கலும் இல்லாமல் பேசுகிறது. மேலும் சில வார்த்தைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள். விவசாயி ராமசாமி என்னை மாதிரியே பேசு என்றால் போதும்.

மறு நிமிடமே அவரது 3 மகள்களின் பெயரையும் கூறி “இங்கே வா” என்று அழைக்கிறது. புவனா வெளியே இருந்து செல்போனில் அழைத்தால் போதும். செல்போனை ஆன் செய்ததும் “எங்கே இருக்கீங்க, எப்போ வருவீங்க?” என்று கேட்கிறது.

மைனா வீட்டில் எந்த பகுதியில் நிற்கிறது என்பதை அறிய அதன் காலில் கொலுசு அணிவித்துள்ளனர். சகோதரிகள் 3 பேரையும் விட்டு பிரியாத மைனா எப்போதும் அவர்களையே வளைய வளைய சுற்றி வருகிறது.

பேசும் மைனாவை அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிசயமாக பார்த்துச் செல்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக