வியாழன், 22 செப்டம்பர், 2011

அல்பிரட் துரையப்பாவினால் சங்கிலியன் சிலை 1974இல்

சங்கிலியன் சிலையை 1974இல் அமைத்தவர் முன்னாள் யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா! –

சங்கிலியன் என்ற மன்னன் யாழ்ப்பாணத்தை கடைசியாக ஆட்சி செய்தான்.

சங்கிலியன் அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடியவன். சங்கிலிய மன்னனை பெருமைப்படுத்தி சிலை வைத்தவர் அல்பிரட் துரையப்பா. அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்தவர். அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். அவர் யாழ் மாநகர முதல்வராக இருந்த காலத்தில், 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் பிரபல சிற்பியான சிவப்பிரகாசம் அவர்களால் சங்கிலிய மன்னன் சிலை வடிவமைத்து ஸ்தாபிக்கப்பட்டது. அல்பிரட் துரையப்பா யாழ் மேயராக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டிருந்தார். மக்களின் நேசத்துக்குரியவராக இருந்தார். எனினும் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை அவர் நசுக்கிவிடுவார் என்று பயந்தமையால் எதிராளிகளினால் ‘தமிழினத் துரோகி’ எனப் பட்டம் சூட்டப்பட்டு பிரபாகரனால் 1975ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அல்பிரட் துரையப்பாவினால் அமைக்கப்பட்ட சங்கிலியன் சிலை, 1994ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினர் சிலரால் சிதைக்கப்பட்டது. மீண்டும் அதே ஆண்டில் இலங்கை இராணுவத்தினரால் சிலை புனரமைப்பு செய்யப்பட்டது. எனினும் சிலையின் தோற்றம் உரியவாறு அமையவில்லை.
கடந்த பல ஆண்டுகளில், சங்கிலியன் சிலையோ அல்லது அங்கேயுள்ள சங்கிலியன் தோப்பு, யமுனா ஏரி, மந்திமலை எனச் சொல்லப்படும் எந்த வரலாற்றுச் சின்னங்களோ பராமரிக்கப்படாமலே காணப்பட்டது. தமிழினத்தின் வரலாற்று, கலாசார சின்னங்கள் பாதுகாக்கப்படவில்லை. தமிழர் வரலாற்றில் பெருமைப்படத்தக்க விஷயம் மாவீரர் மயானங்களே என்று மனநிறைவடைந்தார்கள். அழகிய பூங்காங்களாகத் தோற்றம் பெற்ற மாவீரர் மயானங்கள் கண்காட்சி மையங்களாகின.
மீண்டும் அதே சிங்களக் கட்சியின் கீழ் அமைந்த யாழ்ப்பாண மாநகர சபை, சங்கிலியன் சிலையை புனரமைத்து நாளை 03.08.2011 திறந்து வைக்கிறது. பிரதம அதிதியாக சிலை திரைநீக்கம் செய்ய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகிறார்.
கடந்த சில வாரங்களாக ‘சங்கிலியன் சிலை’ பற்றிய பல்வேறு புனைகதைகள் நாள்தோறும் ஊடகங்களில் வந்துகொண்டிருந்தன. தமிழ்த் தேசிய அரசியலில் வழமைபோன்று உணர்ச்சிவசப்படுத்தும் தமிழ் இனவாதம் 1981-1983 காலப்பகுதியைப் போன்ற கொதி நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஊடகங்கள் வெறும் தேர்தல் வெற்றிக்காக ஒன்று திரண்டு தமிழினவாதத்தைக் கக்கின. எமது இளம் சமுதாயத்தை மீண்டும் இனவாதத் பெருந்தீயில் கருக்கத் துடிக்கும் ஊடகங்கள் தம்மை சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ள வேண்டும். பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றே உண்மையை உணர்ந்த மக்கள் கேட்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக