திங்கள், 19 செப்டம்பர், 2011

பணக்காரர்களுக்கு அதிக வரி - ஒபாமாவின் 1.5 ட்ரில்லியன் புதிய திட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய குறைந்தபட்ச வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார் அதிபர் பாரக் ஒபாமா.

இதன்படி 10 லட்சம் (ஒரு மில்லியன்) டாலருக்கும் அதிகமான வருமானம் கொண்டோர் தங்கள் வருவாயில் ஒரு பகுதியை வரியாகச் செலுத்த வேண்டி வரும். வருமானம் அதிகரிக்க அதிகரிக்க வரியின் சதவீதம் கூடிக் கொண்டே போகும்.
இதன் மூலம் அமெரிக்காவின் நீண்ட கால பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க அவர் முடிவு செய்துள்ளார்.
மேலும் இந்த திட்டத்தால் சேமிப்புக்கான முக்கியத்துவம் அமெரிக்காவில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் நடுத்தர வருமானம் கொண்டோர், பணக்காரர்களை விட அதிக வரி செலுத்த வேண்டியுள்ளதாக நீண்ட காலமாக உள்ள குற்றச்சாட்டுக்கு இதன் மூலம் தீர்வு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.

இந்த புதிய திட்டத்துக்கு 'பஃபே ரூல்' என பெயரிட்டுள்ளார் ஒபாமா. பணக்காரர்கள் மிகக் குறைந்த வரியை செலுத்துவதாக குற்றம்சாட்டியவர்களில் முக்கியமானவர் பிரபல முதலீட்டாளரான வாரன் பஃபே. இதைக் குறிப்பிட்டே, தனது திட்டத்துக்கு அந்தப் பெயரைச் சூட்டியுள்ளார் அதிபர் ஒபாமா!

ஆனால் ஒபாமாவின் இந்தத் திட்டத்துக்கு எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பும் எனத் தெரிகிறது. காரணம் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக பணக்காரர்களுக்கு அதிக வரிச்சுமை தரக்கூடாது என்று கூறிவரும் கட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், நாட்டின் பட்ஜெட்டில் பற்றாக்குறையைத் தவிர்க்க இது முக்கிய வழிமுறையாக பார்க்கப்படுகிறது.

ஒபாமாவின் இந்தத் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், மெடிகேர், மெடிஎய்ட் போன்ற சுகாதார காப்பீட்டுத் திட்டங்களில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1.5 ட்ரில்லியன் கூடுதல் வருவாய்

எந்த அளவு வருமானத்துக்கு எவ்வளவு வரி என்ற விவரத்தை இன்னும் ஒபாமா விரிவாகக் கூறவில்லை. இந்தப் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால் தோராயமாக 1.5 ட்ரில்லியன் கூடுதல் வருமானம் அமெரிக்க அரசுக்கு கிடைக்கும் என்று்ம், இது அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறையைத் தீர்க்கும் என்றும் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக