புதன், 17 ஆகஸ்ட், 2011

Ranil ராஜா மகேந்திரன் எமது கட்சியிலிருந்து இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் பதவியை தமக்குத் தருமாறு

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது மகாராஜா நிறுவனத் தலைவர் ராஜா மகேந்திரன் எமது கட்சியிலிருந்து இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் பதவியை தமக்குத் தருமாறு

கேட்ட போது அதனை கட்சி முற்றாக நிராகரித்ததன் காரணமாகவே அவரது தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் மூலம் என்னையும் கட்சியையும் தாக்கி விமர்சித்து வருவதோடு கட்சியை பிளவுபடுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
நீண்டகாலமாக மறைத்து வைத்திருந்த இந்த உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டிய தருணம் இப்போது ஏற்பட்டு விட்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியை யாருக்கும் விலை பேசவோ, தாரை வார்க்கவோ ஒருபோதும் தயாரில்லையெனவும் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்திக் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
கொழும்பு மாநகர சபை உட்பட 23 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுச்சபையை அமைப்பதற்காக நாளை (இன்று) ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடவிருக்கின்றது. இக்கூட்டத்தைக் குழப்பும் நோக்கில் சில சக்திகள் இன்று கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவுக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவித்தல் கட்டணம் செலுத்தி மகாராஜா நிறுவன ஊடகத்தின் மூலம் பிரசாரப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள வேறு எந்த ஊடகத்தின் மூலமும் இப்பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.
மகாராஜா நிறுவனத்தின் ஊடகங்கள் தொடர்ச்சியாக என் மீதும் கட்சி மீதும் தாக்குதல்களையும் விமர்சனங்களையும் மேற்கொண்டு வருகின்றன. மகாராஜா நிறுவனத் தலைவர் ராஜா மகேந்திரன் எனது நண்பராவார். அண்மைக்காலமாக என்னை கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து வெளியேற்ற மறைமுகமாகத் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றார். இந்த சதி நாடகத்துக்குக் கட்சியில் சிலர் துணைபோயுள்ளனர். இந்த நிலைமை இன்று உச்சக்கட்டத்துக்கு வந்து விட்டதன் காரணமாக நாம் இதுவரை காலமும் மறைத்து வைத்திருந்த சில உண்மைகளை பகிரங்கப்படுத்த வேண்டிய தருணம் வந்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தலின் போது எமது கட்சியிலிருந்து இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிகளை தமக்குத் தருமாறு ராஜா மகேந்திரன் என்னிடம் கோரினார். அவரது கோரிக்கையை நான் அன்று வேட்பு மனுச்சபைக்குச் சமர்ப்பித்தேன். வேட்பு மனுச்சபை அந்தக் கோரிக்கையை முற்றாக நிராகரித்துவிட்டது. என்னால் கட்சியில் தனிச்சிச்சையாக முடிவெடுக்க முடியாது.
இதனால் ஆத்திரமடைந்த நிலையிலேயே அவரது மகாராஜா நிறுவன ஊடகங்கள் மூலமாக என் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றார். இது பொய்யென அவர் கூறினால் அதனை நிரூபிக்க என்னிடம் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன.
என்னிடமிருந்து தலைமைத்துவத்தைப் பறிக்க எடுத்த பலமுயற்சிகளும் தோல்வி கண்டதன் காரணமாக இப்போது கட்சியைத் தூண்டாடும் ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் முதற்பணிதான் கட்சித் தலைமையகத்துக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்துவது, அதற்கான பிரசாரத்தை தனது சிரச தொலைக்காட்சி ஊடாக மேற்கொண்டுள்ளார். இந்த விளம்பரக் கட்டணம் செலுத்திய விளம்பரம் எனக் கூறப்பட்டாலும் உண்மை அதுவல்ல. ஏனெனில் இந்தப் பிரசார விளம்பரம் வேறு எந்தவொரு ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை. பீ.பி.சி.யிலோ, சுவர்ணவாஹினியிலோ, பத்திரிகைகளிலோ அது வெளியிடப்படவில்லை. இதன் மூலம் இந்தச் சத்தியக்கிரகத்தின் உள்நோக்கத்தை நன்கு புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
பெப்சிகோலா கம்பனியை விலைக்கு வாங்குவது போன்று எமது அரசியல் கட்சியையும் விலைக்கு வாங்க ராஜா மகேந்திரன் திட்டமிடுகிறார். அவரது அந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை. அவரது முயற்சிகளுக்குத்தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
நான் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கப் போராடுபவன். ஊடகங்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயற்பட வேண்டும். எந்தவொரு ஊடக நிறுவனமும் அரசியல் கட்சிகள் மீது அதிகாரம் செலுத்த முற்படுவதை எவராலும் அனுமதிக்க முடியாது. ஊடகங்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும். எல்லை மீறிச் செயற்பட முனையக் கூடாது.
ஐக்கிய தேசியக் கட்சியை எந்தச் சந்தர்ப்பத்திலும் யாருக்கும் விலை பேசவோ, தாரைவார்க்கவோ நான் துணைபோகமாட்டேன். இந்தக் கட்சி வீழ்ச்சி கண்ட பல சந்தர்ப்பங்களிலும் நான் அதனைக் கட்டியெழுப்பப் பாடுபட்டுள்ளேன். ஏற்கனே தோல்விகளைக் கண்ட சந்தர்ப்பங்களில் கட்சியை பலமுடன் தூக்கியெடுத்தவன். எதிர்காலத்திலும் என்னால் அதனைச் சாதிக்க முடியும். வரக்கூடிய கொழும்பு மாநகர சபை உட்பட 23 சபைகளுக்குமான தேர்தலில் நிச்சயமாக எம்மால் வெற்றியீட்ட முடியும். அந்த வெற்றி தான் மகிந்த ராஜபக்ஷவின் தோல்வியின் ஆரம்பமாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த வெற்றியை முறியடிப்பதற்கான சதித் திட்டமே இந்த சத்தியாக்கிரகப் போராட்டமாகும். என்னை பலவீனப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு கட்சியை சின்னாபின்னப்படுத்தும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தோல்வியில் துவண்டு போன கட்சியை எப்படி மீளக்கட்டியெழுப்புவது என்பது பற்றி தான் எமது முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவிடமிருந்து நல்ல பாடம் கற்றுக் கொண்டிருக்கின்றேன். கட்சியை எப்படி கட்டியெழுப்புவது என்பது எனக்குத் தெரியும். எந்தச் சவாலையும் எதிர்கொண்டு முறியடிக்கும் பலம் என்னிடம் உண்டு. சவால்களையும் நெருக்கடிகளையும் கண்டு பயந்து ஒதுங்கிப் போகமாட்டேன்.
ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஜனநாயக அரசியல் கட்சியாகும். அது மக்கள் கட்சி. அக்கட்சியை யாருக்கும் தட்டிப்பறிக்க நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. கட்சி யாப்புக்கு முரணாக செயற்பட முனைவோர் யாராக இருந்தாலம் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக