சனி, 6 ஆகஸ்ட், 2011

KP: போராட்டம் வெற்றியடைந்திருந்தால் இந்த சுதந்திரம் எனக்கிருந்திருக்காது.

அரசாங்கத்தை பழிவாங்க எண்ணுபவர்கள் பலவீனப்பட்டுள்ளனர்: கே.பி
- தமிழ்மிரருக்கு வழங்கிய பேட்டி
இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத்தை பழிவாங்கவேண்டும் என்று கூறுபவர்கள் பலவீனப்பட்டுப்போய் இருக்கிறார்கள். சனல் -4 விவகாரம் அல்லது அரசினை பழிவாங்கும் எண்ணம் என்பது அர்த்தமற்றதொன்றாகவே நான் பார்க்கிறேன். இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டு இப்படியான குரோத போக்குகளையும் கோபமூட்டும் செயல்களையும் நிறுத்தவேண்டும் என புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்' என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளரும் நேர்டோ (NERDO)அமைப்பின் பொதுச் செயலாளருமான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், தமிழ்மிரருக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.
இதேவேளை, 'இந்தியா தன்னால் முடிந்த உச்சகட்ட உதவிகளை இலங்கைத் தமிழர்களுக்கு செய்துவருகிறது. இதற்கு மேலதிகமாக இந்தியாவால் இலங்கை தீர்வு விடயத்திலோ தமிழர்களின் சுயநிர்ணயத்திலோ தலையிடுவதற்கு ஒன்றும் இல்லை. அதனால் எடுத்ததற்கெல்லாம் இந்தியாவை நாடும் வரலாற்று தவறினை நாம் இனிமேலாவது நிறுத்த வேண்டும்' என்றும் அவர் தனது செவ்வியில் மேலும் குறிப்பிட்டார்.
செவ்வியின் முழு விபரம் பின்வருமாறு :-
    கேள்வி: வணக்கம் கே.பி. அவர்களே... நேர்டோ (NERDO) அமைப்பினூடாக பல பணிகளை இப்பொழுது நீங்கள் செய்து வருகிறீர்கள். குறிப்பாக அவ்வமைப்பினுடைய பணிகள் பற்றியும் அன்பு இல்லத்தின் நோக்கம் பற்றியும் கூறுவீர்களா?
பதில்: நேர்டோ அமைப்பு மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு மனிதாபிமான செயற்றிட்டம்தான் முத்தையன்கட்டில் அமைந்துள்ள இந்த அன்பு இல்லம். கடந்த முப்பது வருட போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீள வாழவைப்பதுதான் எமது குறிக்கோள். அதிலும் குறிப்பாக எமது இளம் சந்ததியினர் நன்றாக கல்விகற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதுதான் எமது ஒரே குறிக்கோள். இதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை.
    கேள்வி: : NERDOஅமைப்பு என்பது வடக்கு, கிழக்கு நல்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு. இருந்தபோதிலும் உங்களுடைய இந்த பணிகள் வடக்குக்கு மட்டுமாக மட்டுப்படுத்தப்பட்டிருப்பது ஏன்?
பதில்: நாங்கள் ஏற்கெனவே கிழக்கில் சில வேலைத்திட்டங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். குறிப்பாக எம்மைப் பொறுத்தவரை நிதி பற்றாக்குறை காணப்படுகின்றது. நாம் முடிந்தவரை எமது நண்பர்களினூடாக புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலிருந்து நிதியினை பெற்று இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். வெகுவிரைவில் கிழக்கு மாகாணத்திலும் மனிதாபிமான திட்டங்களை முன்னெடுக்கவிருக்கின்றோம்.
    கேள்வி: நிதி பற்றாக்குறை என்று கூறுகிறீர்கள். ஆனால், இந்த NERDO அமைப்பு உங்களின் பிரத்தியேக பணத்திலேயே இயங்குகிறது என்று சிலர் கூறுகிறார்களே..?
பதில்: இதில் உண்மை கிடையாது. எமக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள், உயரிய நல்ல மனப்படைத்தவர்களின் ஆதரவினூடாகத்தான் மனிதாபிமான நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றோம். என்னுடைய சொந்த நிதியினை போடுமளவுக்கு என்னிடம் பெரியளவில் பணம் இல்லை. முடிந்தளவில் எங்களால் எடுக்கமுடிந்தவர்களிடம் பணம் எடுத்துத்தான் இந்த மனிதாபிமான பணிகளை தொடர்கின்றோம். சில சமயங்களில் என்னுடைய மனைவியிடமிருந்துகூட பணத்தினை பெற்று சில பணிகளை செய்து வருகின்றேன்.
    கேள்வி: உங்களுடைய வாழ்க்கையில் புலம்பெயர் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமாகவே காணப்பட்டிருக்கிறது. நீங்கள் விடுதலைப் போராட்டத்தில் இணைந்திருந்த சமயத்திலாகட்டும் அல்லது இந்த நேர்டோ அமைப்பினால் முன்னெடுத்துச் செல்கின்ற மனிதாபிமான நடவடிக்கைகளிலாகட்டும் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு அதிகமாகவே காணப்படுகிறது. இந்த நேர்டோ அமைப்புக்கு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் எவ்வகையான பிரதிபலிப்புகள் காணப்படுகின்றன?
பதில்: நேர்டோ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம்தான் ஆகின்றது. ஆனால் இந்த காலத்திற்குள் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தினை நாங்கள் அடைந்திருக்கின்றோம். புலம்பெயர் தமிழர்கள் எங்களுடன் முழுமையாக ஈடுபடுவதற்கு சில காலம் தேவைப்படும். காரணம் என்னவெனில் அங்கிருக்கின்ற அரசியல் சூழ்நிலைகள், அதேநேரம் புலம்பெயர் உறவுகளை தொடர்ந்தும் இருட்டுக்குள் வைத்துக்கொண்டு சில கும்பல்கள் தமது நன்மைக்காக, தமது வருமானத்திற்காக தொடர்ந்தும் பொய் சொல்லிக்கொண்டிருப்பவர்களின் நடவடிக்கை என பல இருக்கின்றன.ஆகவே உண்மைகள் எப்போதாவது வெளிவரும் அவை கசப்பாகவும் இருக்கும். உண்மைகள் இந்த மக்களுக்குத் தெரியவரும்போது இந்த மக்கள் கண்டிப்பாக எம்மோடு இணைவார்கள், எமக்கு உதவுவார்கள். இதற்கு சில காலம் எடுக்கும். உண்மைகளை தெளிவுபடுத்துவதற்கான முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். அந்த ஆரம்பம் நன்றாக இருக்கிறது. தொடர்ந்தும் புலம்பெயர் உறவுகள் எம்மோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.
    கேள்வி: உங்களுடைய கடந்தகால பேட்டிகளில் முரண்பாடுகளை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. ஆரம்பத்தில் நீங்கள் கூறியிருந்தீர்கள் யுத்தம் முடியும்வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையுடன் உங்களுக்கு தொடர்பு இருந்ததாக. ஆனால், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தலைமையுடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை, நடேசனூடாகவே தகவல் பரிமாற முடிந்தது என குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த முரண்பாடான கருத்து எதற்காக?
பதில்:இந்த கருத்துக்களை வெளிக்கொணர்ந்தவர்களில் தவறிருக்கிறது. என்னை பேட்டி கண்டவர்கள் நான் சொன்னதை சரியான கோணத்தில் சொல்லாமல் வேறுவிதமாக கூறியிருக்கிறார்கள். சில சமயங்களில் நான் சில முக்கிய தகவல்களை நடேசனூடாக தலைவருக்கு பரிமாறுவது வழக்கம். அதற்காக எனக்கும் தலைருக்கும் தொடர்பில்லை என்பது அர்த்தமல்ல. எனக்கும் தலைவருக்குமான தொடர்பு இறுதிவரை இருந்தது. நீண்ட விடயங்களை தலைவருடன் உரையாட கால அவகாசம் கடைசி யுத்தகளத்தில் இருக்கவில்லை. காரணம் உக்கிரப் போர், எங்கும் குண்டுமழை. இதனால் நிதானமாக நீண்ட விடயங்களை ஆலோசிக்க கால அவகாசம் கிடைக்கவில்லை. அதனால்தான் நடேசனை ஒரு மீடியேற்றராக நானும் தலைவரும் பயன்படுத்தினோம். இதுதான் உண்மை.
கேள்வி: யுத்தம் நிறைவுறும்வரை விடுதலைப் புலிகளின் தலைமையுடன் தொடர்புகளை வைத்திருந்தீர்கள், அப்படித்தானே..?
பதில்:ஆம், நிச்சயமாக.
    கேள்வி: அப்படியென்றால் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் அறிந்திருப்பீர்கள் அல்லவா? அதுதொடர்பாக வெளிவந்த சனல் - 4 வீடியோ தொடர்பாகவும் அறிந்திருப்பீர்கள். 'இலங்கையின் கொலைக்களங்கள்' என்ற அந்த போர்க்குற்ற வீடியோ தொடர்பான உண்மைத்தன்மை என்ன?
பதில்: நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். யுத்தம் முடிந்துவிட்டது. இப்பொழுது புதிய அத்தியாயத்தின் முதல்படியில் நாங்கள் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். இந்த நாட்டினுடைய வரலாற்றை எடுத்துப் பார்ப்பீர்களேயானால் நாங்கள் மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்திருக்கிறோம். பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை மக்களும் அன்போடும் பாசத்தோடும் பழகியிருக்கிறார்கள். இடைப்பட்ட காலங்களில் சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சியினால்தான் இரண்டு இனங்களும் முரண்பட்டிருக்கின்றன. எனவே அந்த முரண்பாடுகள், இடைவெளிகளை குறைக்கவேண்டும், இரண்டு சமூகமும் மீண்டும் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதுதான் எமது இலட்சியம்.
சனல் - 4 மற்றும் ஐ.நா. சபையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்பது இதற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதுபோல் தோன்றுகிறது. எப்பொழுதும் ஒரு நாட்டில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் புனர்வாழ்வு அல்லது தீர்வு, நாட்டை எவ்வாறு முன்னேற்ற வேண்டும் என்பதுபற்றி சிந்திக்க வேண்டும். அதாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நிவாரணம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட சமூகத்தை எவ்வாறு உயர்த்த வேண்டும் என்பது பற்றியே சிந்திக்க வேண்டும். ஆனால் எமது நாட்டில் நாம் திரும்பத்திரும்ப நடந்தவற்றையே பேசிக்கொண்டிருக்கிறோம்.
கடந்தகாலத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். இது யாருக்குமே பிரயோசனமற்ற விடயமாகவே இருக்கிறது. வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான நடவடிக்கைகள்தான் இன்றைக்கு அவசியம். இப்படி, மனிதாபிமான தேவைகள் இருக்கின்ற இந்த நிலையில் இந்த சனல் - 4 வீடியோவை வெளியிடுவதனூடாக எதனை சாதிக்கப்போகிறார்கள்? ஒன்றுமே சாதிக்க முடியாது.
திரும்பத்திரும்ப சனல் -4 பல வீடியோக்களை வெளியிடுகிறது. ஆனால் இந்த மக்களுக்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறார்களா? இப்படியான வீடியோக்கள் வெளிவருவதன் மூலமாக இரு இனங்களுக்கிடையிலான முரண்பாடு மேலும் ஆழமாகிக்கொண்டு போவதாகவே நான் கருதுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை இந்த நாட்டு மக்களுக்கிடையில் இருக்கின்ற உறவுகள் எப்பொழுதும் பாதிக்கப்படக்கூடாது. நாம் படித்ததிலிருந்து, பட்ட அனுபவங்களிலிருந்து நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். இருதரப்பிலும் பிழைகள் நடந்திருக்கலாம், நடந்திருக்கும். அதில் நாங்கள் ஒருதரப்பினரில் மட்டும் குற்றம் கண்டுபிடிப்பதால் யாருக்கு என்ன நன்மை கிடைக்கப்போகிறது? வெளிநாடுகளில் இருக்கின்ற சில தீவிரவாத போக்குடையோர் இலங்கை அரசாங்கத்தை வழிவாங்க வேண்டும் அல்லது முக்கியமான ஆட்களை பழிவாங்கவேண்டும் என்ற குரோத மனப்பாங்குடன் திரிகிறார்கள்.
இதனால் பாதிக்கப்படப்போவது யார் என்பதை இவர்கள் சிந்திக்கத் தவறுகிறார்கள். எமது நாட்டிலுள்ள எம் மக்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். இயேசுநாதர் கூறியதுபோல் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும். பழிவாங்க நினைப்பதென்பது புத்திசாலித்தனமானதோ அல்லது ஆரோக்கியமானதோ அல்லது நல்லதொரு மனிதன் செய்கின்ற காரியமோ அல்ல. பழிவாங்குவதிலும் பார்க்க மன்னிக்கத் தெரிந்தவன் அல்லது மன்னிக்கக் கூடிய சிந்தனைக்கு சக்தி அதிகம். எனவே, இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத்தை பழிவாங்க வேண்டும் என்று கூறுபவர்கள் பலவீனப்பட்டுப்போய் இருக்கிறார்கள் என்றே நான் பார்க்கிறேன்.
சனல் -4 விவகாரம் அல்லது அரசினை பழிவாங்கும் எண்ணம் என்பன அர்த்தமற்றவையாகவே நான் பார்க்கிறேன். இந்த நாட்டில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றாக வாழ வேண்டும். இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டு இப்படியான குரோத போக்குகளையும் கோபமூட்டும் செயல்களையும் நிறுத்தவேண்டும் என புலம்பெயர் தேசத்தவர்களிடம் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.
    கேள்வி: புலம்பெயர் தமிழர்கள் பற்றி பல கருத்துக்கள் கூறப்படுகின்றன. நாட்டில் நிலவுகின்ற சுமூக நிலையை புலம்பெயர் தமிழர்கள் குழப்புகின்றார்கள் என்றும் சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். உங்களுடைய பார்வையில் புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாடு எப்படியிருக்கிறது?
பதில்:புலம்பெயர் உறவுகளில் வித்தியாசமான வெவ்வேறு குழுக்கள் இருக்கின்றன. பெரும்பான்மையானவர்கள் இருட்டில் வாழ்பவர்கள்போன்றே இருக்கின்றார்கள். அவர்களுக்கு உண்மை தெரியாது. பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார், அடுத்தவருடம் ஆயுதப் போராட்டம் தொடங்கும் போன்ற பொய் வதந்திகளை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், வெளிநாட்டில் இருக்கின்ற தீவிரப் போக்குடைய சிலர் இந்த விடயங்களை தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எவருக்கும் எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை.
இந்த நாட்டினுடைய யதார்த்தத்தைப் புரிந்துகொண்டவர்கள் இப்படி குரோத மனப்பாங்குடன் நடந்துகொள்ள மாட்டார்கள். உண்மையில் எமது மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினால் இங்கு வாருங்கள். இலங்கைக்கு வந்து உண்மையை பார்த்து, எமது மக்களுக்கு என்ன தேவையோ அதனை நிவர்த்தி செய்யுங்கள்.
தீவிரவாதம் பேசுகிறவர்கள் அல்லது அரசுக்கு எதிராக செயற்படுகிறவர்கள் இந்த மக்களுக்கு அல்லது பாதிக்கப்பட்ட இந்த குழந்தைகளுக்கு ஏதாவது செய்தார்களா? மக்கள் கஷ்டப்படுகின்றபோது, இந்த குழந்தைகள் வாடுகின்றபோது உதவத் தவறியவர்கள் 'நாம் சமூகத்திற்காக குரல் கொடுக்கின்றோம்' என்று கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இது எல்லாம் ஒரு ஏமாற்றுவேலை. ஒரு குழந்தை அழுகின்றபோது அந்தக் குழந்தையை தூக்கி அரவணைக்க மறந்தவர்கள், அக்குழந்தைக்கு பாலூட்ட மறந்தவர்கள், அந்தக் குழந்தையின் உரிமைபற்றி பேசுவதற்கு என்ன அருகதையிருக்கிறது!
எனவே, புலம்பெயர் தமிழர்களில் இருக்கின்ற குறுகிய மனப்பாங்குடைய தீவிரவாத போக்குடைய சில குழுக்களின் நடவடிக்கைகள்தான் இன்று நாங்கள் அனுபவிக்கின்ற துன்பநிலைக்கும் குழப்பத்துக்கும் காரணமாக இருந்திருக்கின்றன. புலம்பெயர் சொந்தங்களுக்கு யதார்த்த நிலை புரியாமல் இருக்கிறது. அவர்கள் யாதார்த்தத்தை புரிந்துகொள்வதற்கு சிறிது காலம் எடுக்கும். எனவே, புலம்பெயர் சொந்தங்கள் யதார்த்தத்தை புரிந்து செயற்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
    கேள்வி: இலங்கை தமிழர்களின் தீர்வு விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பு எவ்வாறுள்ளது என நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: இலங்கையில் இருக்கின்ற பிரச்சினை என்பது இரு இனங்களுக்கிடையில் உள்ள உள்நாட்டு பிரச்சினை. இந்த விடயத்தில் இந்தியா அண்டையிலுள்ள பிராந்திய வல்லரசு என்ற ரீதியிலும் ஆரம்பகாலம் தொட்டு இலங்கை மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் வரலாற்று தொடர்புகள் காணப்படுவதாலும் தலையிடுகிறது.
இலங்கைத் தீவில் இருக்கின்ற பெரும்பான்மையினராகட்டும் அல்லது சிறுபான்மையினராகட்டும் அனைவரும் இந்தியாவினோடு பூர்வீக தொடர்புகளை உடையவர்கள் என்பது வரலாறு. இந்தியாவைப் பொறுத்தமட்டில் இலங்கையிலுள்ள மக்கள் சந்தோஷமாக, ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. இலங்கை மக்களுக்கான தீர்வினை இலங்கையின் உயர்மட்டமே வழங்கவேண்டுமென இந்தியா விரும்புகிறது. ராஜீவ்காந்தியின் சம்பவத்தின் பின்னரான இந்தியாவின் ராஜாங்க முடிவுகளில் எந்தவித மாற்றமும் இதுவரை வந்ததில்லை.
இலங்கையிலுள்ள அரசியல் தலைமையும் கட்சிகளும் பேசி தீர்க்கமான தீர்வை முன்னெடுப்பதையே இந்தியா விரும்புகிறது. அதற்காகத்தான் பேச்சு மேசைக்கு அவர்களை அழைத்து வந்திருக்கிறது. ஆனால் அதற்குமேல் இந்தியாவினால் எதுவும் செய்ய முடியாது. காரணம் இது உள்நாட்டுப் பிரச்சினை.
நாங்கள் மீண்டும் மீண்டும் வரலாற்று ரீதியான தவறினை செய்து வருகிறோம். எடுத்ததற்கெல்லாம் இந்தியாவை நாடுகிறோம். இதனை வரலாற்று தவறாகவே நான் கருதுகிறேன். பெரும்பான்மை மக்களுக்கும் ஒரு பயமிருக்கிறது. இதனை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையில் ஒரு கோடி பெரும்பான்மையினர் இருக்கின்றார்கள் என்றால் தமிழ் நாட்டில் 6 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள்.
இங்குள்ள பெரும்பான்மையினருக்கு இருக்கின்ற பயம் என்னவெனில் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் வந்து தங்களை அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள் அல்லது தங்களது உரிமையை பறித்துவிடுவார்கள் என்பதே. எனவே, இந்த பெரும்பான்மையினரின் இப்படியான பயத்திற்கு எண்ணெய் ஊற்றுவதுபோல் எமது செயற்பாடுகள் அமையக்கூடாது. எடுத்ததெற்கெல்லாம் இந்தியாவிடம் ஓடக்கூடாது. தமிழ்நாட்டில் சீமான், வைகோ, நெடுமாறன் போன்றவர்களும் இலங்கையின் பெரும்பான்மையினரை சீண்டும் விதத்தில் பேசி வருகிறார்கள். இப்படியான சம்பவங்கள் இன முரண்பாட்டை மீண்டும் தூண்டிவிடுவதாக அமையக்கூடாது.
இந்தியா தன்னால் முடிந்த உச்சகட்ட உதவிகளை செய்துவருகிறது. இதற்கு மேலதிகமாக இந்தியாவால் இலங்கை தீர்வு விடயத்திலோ தமிழர்களின் சுயநிர்ணயத்திலே தலையிடுவதற்கு ஒன்றும் இல்லை. எனவே இந்த விடயத்தினை புரியவேண்டியவர்கள் புரிந்து நடக்கவேண்டும். இனங்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்க வேண்டுமானால் தமிழ் தலைமைகள் சிங்கள மக்களின் மனங்களை வெல்ல வேண்டும்.
அதனைவிடுத்து சனல் - 4 விடயத்திற்காகவோ ஐ.நா. அறிக்கைக்காகவோ அரசுக்கெதிராக போர்க்கொடி தூக்கினால் அதை சிங்கள மக்களுக்கெதிரான எதிர்ப்பாகவே சிங்கள மக்கள் கருதுகிறார்கள். ஆகவே, எதிர்காலத்திலாவது தமிழ் தலைமைகளின் நடவடிக்கைகள் சிங்கள மக்களின் மனங்களை புண்படுத்தாத விதத்தில் அமையவேண்டும் என வேண்டுகிறேன்.
    கேள்வி: ஜனநாயக நீரோட்டத்தில் நீங்கள் இணைந்து நேர்டோ போன்ற அமைப்புகளினூடாக மக்களுக்கு உதவிகளை செய்துவருகின்றமை எதிர்கால வடமாகாண சபை தேர்தலுக்காகவே என்று சிலர் கூறுகிறார்களே?
பதில்:உண்மையில் இப்பொழுது நாங்கள் செய்துகொண்டிருக்கின்ற இந்த சேவைகூட ஒரு வகையான அரசியல்தான். ஆனால் நீங்கள் குறிப்பிடுகின்ற நாடாளுமன்ற அரசியலிலோ மாகாணசபை அரசியலிலோ ஈடுபடுகின்ற எண்ணம் எனக்கு இல்லை. அதனை மக்களிடமே விட்டுவிடுகிறேன். அவர்கள் எதனை எதிர்பார்க்கிறார்களோ அது நடக்கட்டும். என்னைப் பொறுத்தமட்டில் இந்த அன்பு இல்லத்தில் இருக்கின்ற குழந்தைகளுடன் வாழவேண்டும் என்பதே அவா.
    கேள்வி: இறுதியாக உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்தமையால் இன்று நீங்கள் இந்த நிலைமையில் இருக்கின்றீர்கள். ஒருவேளை, தமிழீழ போராட்டம் வெற்றிபெற்றிருந்தால் எப்படி இருந்திருப்பீர்கள்...?
பதில்: (சிரிப்பினை அடக்கமுடியாமல் சிரித்துக்கொண்டே....) போராட்டம் தோல்வியடைந்தமையால் இன்று நான் இந்த அன்பு இல்ல சின்னப் பிஞ்சுகளுடன் சந்தோஷமாக உரையாடி மகிழக்கூடியதாகவிருக்கிறது. ஒருவேளை போராட்டம் வெற்றியடைந்திருந்தால் இந்த சுதந்திரம் எனக்கிருந்திருக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக