ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

விஜிலன்சே விசாரிக்கும்போது விஜிலன்ஸ் துறையை ஜெயலலிதா வகிப்பது conflict of interest

விஜிலன்ஸ் துறையை முதல்வர் வகிப்பது நியாயமில்லை! கருணாநிதி
சென்னை, ஆக.13: சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ஜெயலலிதா விஜிலன்ஸ் துறையை கையில் வைத்திருப்பது நியாயமில்லை என்று முன்னாள் முதல்வர்
கருணாநிதி கூறியுள்ளார்.  இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  விஜிலன்ஸ் குற்றச்சாட்டு: கேரள முதல்வர் மீது விஜிலன்ஸ் குற்றச்சாட்டு என்றதும், விஜிலன்ஸ் பொறுப்பில் இருந்து உடனடியாக விலகிக் கொண்டு, சட்டப்படி சந்திப்பேன் என்று கூறியுள்ளார். அது கேரளம். தமிழ்நாட்டில் உள்ள முதல்வர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் விஜிலன்ஸ் துறையை முதல்வர் ஜெயலலிதான் வைத்துக் கொண்டிருக்கிறார்.  அதோடு அந்தத் துறை சார்பில் நடைபெறும் வழக்கிலும், தான் வகிக்கும் அந்தத் துறையின் சார்பில் மீண்டும் அந்த வழக்கு பற்றி புதிதாக விசாரணை நடத்த வேண்டுமென்றும் பெங்களூரு நீதிமன்றத்தில் கோருகிறார்.  ஜெயலலிதா மீது விஜிலன்ஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அவரே அந்தத் துறையை வகிப்பது முற்றிலும் நியாயமல்ல.  கேரள முதல்வர் சொல்வதுபோல சொல்வதற்கு, "தான் தவறு செய்யவில்லை' என்ற மன துணிச்சல் ஜெயலலிதாவுக்கு வேண்டும்.  பேரவையில் வணக்கம்: திமுக ஆட்சியில் எதிர்க்கட்சித் 
தலைவராக இருந்த ஜெயலலிதா, அன்றைய பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் தனக்கு வணக்கம் செய்யவில்லை என்று ஒரு புகார் கூறினார். உடனே ஆவுடையப்பன் அவர் வணக்கம் சொல்லும் புகைப்படத்தைக் காட்டி பதில் அளித்தார்.  இப்போது தனது ஆட்சிக் காலத்திலும், பேரவைத் தலைவர் வணக்கம் செலுத்த மறந்த நிலையில் அதை ஜெயலலிதாவே நினைவுபடுத்தி வணக்கம் செலுத்த வைத்திருக்கிறார்.  சாதகமான பதில்: சரியான கேள்வியை கேட்க வைக்க பேரவைத் தலைவர் தவறி விட்டார். இது பேரவைத் தலைவரின் தவறு என்று முதல்வர் ஜெயலலிதா அவையில் சுட்டிக்காட்டி யிருக்கிறார்.  அமைச்சர் முதல்முதலாக பதில் அளிக்கும்போது, அரசின் சார்பில் சாதகமான பதிலைச் சொல்லும் கேள்வியைத்தான் பேரவைத் தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதெல்லாம் எந்த விதியின் கீழ் என்பதுதான் தெரியவில்லை.  விஜயகாந்த் பேச்சு: இரண்டாம் முறையாக அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக விடாமல் தடுத்தது கருணாநிதிதான் என்று விஜயகாந்த் கூறியுள்ளதற்கெல்லாம் பதில் சொல்லிக் காலத்தையும், கண்ணியத்தையும் வீணாக்க விரும்பவில்லை.  நான் எழுதிய தொல்காப்பியப் பூங்கா புத்தகத்திற்காக "தொல்காப்பியர்' விருதினை எனக்கு வழங்கி அந்த விழாவில் அவர் ஆற்றிய உரையையும் அறியாதவர்கள் சொல்லும் பொய்யை யார் நம்புவார்கள்? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.  இலங்கைத் தமிழர்களுக்காக திமுக ஆட்சியில் செய்யப்பட்டவை எல்லாம் கண் துடைப்பு நாடகங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார்.  இதனைக் குறிப்பிட்டுள்ள கருணாநிதி, இலங்கைத் தமிழர்களுக்கு திமுக செய்துள்ளவற்றைப் பட்டியலிட்டு, கண் துடைப்பு நாடகம் இப்போது ஆடுவது யார் என்று தெரிகிறதா? என்றும் கேட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக