வியாழன், 4 ஆகஸ்ட், 2011

Chennai 60 வயது பெண்ணுக்கு குழந்தை : தம்பதிகள் ஆனந்தக் கண்ணீர்

சென்னை: அறுபது வயது பெண்ணுக்கு, பழனி, பாலாஜி மருத்துவமனையில், செயற்கை முறை கருத்தரித்தல் மூலம், ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஈரோடு மாவட்டம், கவுந்தம்பாடியைச் சேர்ந்த ரிங்கேஸ்வரனுக்கு, 66 வயதாகிறது. இவரது மனைவி சரஸ்வதிக்கு, 60 வயதாகிறது. இவர்களுக்கு திருமணமாகி, 40 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. குழந்தை பெற்றுக் கொள்வதற்காக பழனி, டி.எஸ்.மருத்துவமனையில் இயங்கி வரும், பாலாஜி செயற்கை முறை கருத்தரித்தல் (டெஸ்ட் டியூப் பேபி) மையத்தில், கடந்த ஆண்டு சரஸ்வதி சிகிச்சைக்கு சேர்ந்தார். சிகிச்சை வெற்றியடைந்ததால், சரஸ்வதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் செய்து, 40 வருடங்களுக்குப் பிறகு குழந்தை பிறந்துள்ளதால், தம்பதியர் சந்தோஷமடைந்துள்ளனர். இந்த தம்பதியருக்கு சிகிச்சை அளித்த, பழனி, பாலாஜி மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனர், டாக்டர் செந்தாமரைச்செல்வியும், இத்தம்பதியும் குழந்தையுடன் நேற்று சென்னை வந்தனர்.

பத்திரிகை நிருபர்கள் சந்திப்பில், டாக்டர் செந்தாமரைச் செல்வி கூறியதாவது: எங்கள் மருத்துவமனைக்கு, சரஸ்வதி - ரிங்கேஸ்வரன் தம்பதியர் ஒரு ஆண்டுக்கு முன் குழந்தையின்மை சிகிச்சைக்காக வந்தனர். அப்போது ரிங்கேஸ்வரனுக்கு வயது, 65 ஆவதாகவும், சரஸ்வதிக்கு, 59 வயது ஆவதாகவும் தெரிவித்தனர். தங்களுக்கு குழந்தை இல்லாததால் சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும், அப்படியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்றனர். சரஸ்வதிக்கு, மாத விலக்கு நின்று, பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. "எங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளதா, அதற்கான சிகிச்சையை உங்கள் மருத்துவமனையில் எடுத்துக் கொள்ள விரும்புகிறோம்' என்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி, சோதனை குழாய் சிகிச்சை மூலம் சரஸ்வதியின் கர்ப்பப் பையில், கருவூட்டப்பட்டது. பின் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையின் மூலமும், ஜனவரி மாதம் நடத்திய ஸ்கேன் பரிசோதனையின் மூலமும் கரு வளர்வது, உறுதி செய்யப்பட்டது. அன்றிலிருந்து சரஸ்வதிக்கு, மிக கவனமாக மகப்பேறு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தனி மருத்துவக் குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
சரஸ்வதிக்கு கடந்த, 28ம் தேதி ஆண் குழந்தை பிறந்து குழந்தை இரண்டேகால் கிலோ எடையுடன், ஆரோக்கியமாகவும் இருந்தது. தம்பதியருக்கும்,சிகிச்சை குழுவினருக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை அளித்துள்ளது. எங்கள் மருத்துவமனையில், சோதனை குழாய் குழந்தை சிகிச்சை மூலம், ஆயிரக்கணக்கான தம்பதியர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு டாக்டர் செந்தாமரைச்செல்வி கூறினார்.

சரஸ்வதி - ரிங்கேஸ்வரன் தம்பதியர் கூறும் போது, ""திருமணமாகி 40 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், உறவினர்களாலும், சமுதாயத்தாலும் எங்களுக்கு ஏற்பட்ட சங்கடமான நிலை, யாருக்கும் ஏற்பட்டிருக்காது. குழந்தை இல்லாத ஏக்கம் எங்களை தினம், தினம் இம்சித்தது. குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனப் பல மருத்துவமனைகளுக்கு சிசிக்சைக்கு சென்றும், எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. கடைசியில் பாலாஜி மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்றதால் ஆண் குழந்தை பிறந்துள்ளது,'' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக