சனி, 20 ஆகஸ்ட், 2011

அம்பானி, டாடா, ஏர்டெல்,மித்தல் அன்னா போராட்டத்துக்கு ஸ்பான்சர்

பெரியோர்களே தாய்மார்களே, தமிழ்ப் பெருங்குடி மக்களே,
அனைவரையும் டைம்ஸ் ஆப் இந்தியா இணைய தளத்தின் முதல் பக்கத்துக்கு உடனே வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இரண்டு உரிமைப் போர்களுக்கு அணிதிரளுமாறு டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு இன்று தனது வாசகர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.
முதல் போராட்டம் “சரக்கடிக்கும் உரிமை” தொடர்பானது. “குடிப்பதற்கான வயது வரம்பு 25″ என்று மகாராட்டிரா, டெல்லி அரசுகள் தீர்மானித்திருப்பதை எதிர்த்த தனது போராட்டத்தின் நியாயத்தை கீழ்க்கண்டவாறு விளக்குகிறது டைம்ஸ் ஆப் இந்தியா:
“இந்திய இளைஞர்களின் ஆற்றலை உலகமே வியந்து போற்றுவது நம் அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை. மென்மேலும் அடக்குமுறை சட்டங்களைக் கொண்டு வரவும் அதன் மூலம் மக்களைத் துன்புறுத்தி லஞ்ச வசூலை அதிகரித்துக் கொள்வதற்கே கிழட்டு நரிகளான அரசியல்வாதிகள் திட்டமிடுகிறார்கள்.”
“மைக்கை பிடுங்கி அடித்து கெட்டவார்த்தைகளால் ஏசிக்கொள்கிற எம்.பி எம்.எல்.ஏக்களும், நாட்டைக் கொள்ளையடிக்கின்ற அமைச்சர்களும் ஒழுக்கம் பற்றி நமக்கு உபதேசம் செய்வதா? இது தண்ணியடிப்பது பற்றிய பிரச்சினை அல்ல. நம்முடைய சுயமரியாதை மற்றும் சுதந்திரம் பற்றிய பிரச்சினை. படித்த, நேர்மையான, பொறுப்பான, கடினமாக உழைக்கக்கூடிய இளைஞர்கள் அனைவரும் இந்த சர்வாதிகாரத்துக்கு எதிராக எழுந்து நின்றாக வேண்டும். இது என்னுடைய வாழ்க்கை. உன்னால் உதவ முடியாவிட்டால் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாதே என்று முழங்கவேண்டும்” என்று குமுறி வெடித்திருக்கிறது டைம்ஸ் .ஆப் .இந்தியா.
இரண்டாவது போராட்டம் ஊழல் எதிர்ப்பு, அண்ணா ஹசாரே ஆதரவு தொடர்பானது. சரக்கடிக்கும் உரிமையைப் போலன்றி, இது எல்லோருக்கும் தெரிந்த எளிமையான பிரச்சினை என்பதால் இது பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா அதிகம் விளக்கவில்லை.
சரக்கடிக்கும் உரிமை தொடர்பான டைம்ஸ் ஆப் இந்தியாவின் “அப்ரோச்” கவனிக்கத்தக்கது. “ITS MY LIFE இது என்னுடைய வாழ்க்கை. நான் குடிப்பேன், குளிப்பேன், குப்புற அடிச்சுப் படுப்பேன். நீ யார்றா கேக்குறதுக்கு – ITS NONE OF UR BUSINESS” என்று அரசாங்கத்துக்கு சவால் விடுகிறது அந்த முழக்கம்.
இல்லையா பின்னே? உண்ணாவிரதம் இருக்கணும்னா 22 கண்டிசன் போடறான். சரக்கடிக்கணும்னா 25 வயசுன்னு கண்டிசன் போடறான். என்ன சார் இது சர்வாதிகாரமா இருக்கு? சாப்பிடவும் கூடாதுங்குறான், சாப்பிடாம இருக்கவும் கூடாதுங்கிறான். சாப்பிட்டா நமக்கு ஜெயில். சாப்பிடலேன்னா ஹசாரேக்கு ஜெயில்.
ஊழல் கனிமொழிக்கு திகார் ஜெயில், ஹசாரேவுக்கும் அதே ஜெயிலான்னு கேட்டிருக்கார் கேப்டன். ஜெயில் மட்டுமா? ரெண்டு பேருக்கும் அதே போலீசு, அதே மாஜிஸ்டிரேட், அதே சி.ஆர்.பி.சி. என்ன சார் நியாயம்?
This is how you deal with a honest tax payer of this country? சரக்கடிச்சிட்டு ரோட்ல உருள்றவனுக்கும் பப்ல உக்காந்து டீசன்டா பியர் அடிக்கிறவனுக்கும் ஒரே சட்டம்னா where is the country heading towards?
அதுனாலதான் “ஐ ஆம் அன்னா ஹசாரே” ன்னு லட்சக்கணக்குல ‘சிட்டி’சன்ஸ் ரோட்டுக்கு வந்துட்டாங்க.
“அந்தப் பிரச்சினை வேற, இந்தப் பிரச்சினை வேற” ன்னு ஏமாத்த முடியாது சார். சாயங்காலம் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் டைம்ஸ் ஆப் இந்தியா.
ஐ ஆம்ன்னா ஹசாரே !
குறிப்பு:
ன்னா ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர் ஒரு குறிப்பிட்ட அலைபேசி எண்ணில் தம் ஆதரவைத் தெரிவிக்கலாம். ரிலையன்ஸ் அம்பானி, டாடா, ஏர்டெல் மித்தல் ஆகிய முதலாளிகள் ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புப் போரை ஸ்பான்சர் செய்திருப்பதனால், மேற்படி கம்பேனிகளின் மொபைலிலிருந்து ஊழல் எதிர்ப்பு போராளிகள் இலவசமாக பேசலாம் பேசலாம் பேசிக்கிட்டே இருக்கலாம் என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கிறது.
“இட்ஸ் மை லைப்” என்று முழங்கும் சரக்குரிமை இயக்கத்திலிருந்து ஹசாரேயின் ஊரான “ராலேகான் சித்தி”க்கு மட்டும் டைம்ஸ் ஆப் இந்தியா விலக்களித்திருக்கிறது. அந்த ஊரில் மட்டும் சரக்கடிப்பவர்களின் வயது 25 க்கு கீழே இருந்தாலும், மேலே இருந்தாலும் அவர்கள் கட்டி வைத்து உரிக்கப்படுவார்கள்
www.vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக