புதன், 31 ஆகஸ்ட், 2011

மங்காத்தா. அஜீத் இந்த ஆட்டத்தில் வென்றிருக்கிறார். வெங்கட் பிரபு

அஜீத், த்ரிஷா, அர்ஜுன், அஞ்சலி, லட்சுமி ராய், ஜெயப்பிரகாஷ், பிரேம்ஜி
ஒளிப்பதிவு: சக்தி சரவணன்
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: வெங்கட் பிரபு
தயாரிப்பு: க்ளவுட் நைன் மூவீஸ்

பிஆர்ஓ: விகே சுந்தர் - சுரேஷ் சந்திரா

பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வந்துள்ள அஜீத்தின் பொன்விழாப் படம் மங்காத்தா. அஜீத்துக்காக இந்த ஆட்டத்தில் வென்றிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு என்பதுதான் சரியாக இருக்கும். உள்ளூர் சமாச்சாரத்தை கொஞ்சம் ஹாலிவுட் சாயத்தில் முக்கியெடுத்திருக்கிறார். களைகட்டுகிறது ஆட்டம்!
இந்தியாவின் நிஜ சூதாட்டமான ஐபிஎல் கிரிக்கெட்டில், பெட்டிங் பணமாக கட்டப்படும் ரூ 500 கோடியை அப்படியே தனதாக்கிக் கொள்ள திட்டமிடுகிறார் ஜெயப்பிரகாஷ். இவர்தான் கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கியப் புள்ளி.

இந்தப்பணத்தை அவரிடமிருந்து பறிக்கத் திட்டமிடுகின்றனர், ஜெயப்பிரகாஷிடம் வேலைப் பார்க்கும் வைபவ் உள்ளிட்ட நால்வர் கோஷ்டி. இன்னொரு பக்கம், இந்த சூதாட்டத் தொகை பற்றி கேள்விப்படும் போலீஸ் உஷாராகி, அர்ஜுன் தலைமையில் ஒரு போலீஸ் படையை மும்பையில் களமிறக்குகிறது. விஷயம் புரிந்து உஷாராகிறது வைபவ் கோஷ்டி. அப்போதுதான் இந்த நால் அணியை மோப்பம் பிடித்து, அவர்கள் மூலமே விஷயத்தைக் கறந்துவிடுகிறார் அஜீத். சஸ்பென்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி இவர்.
இப்போது இவரும் அந்த ரூ 500 கோடியை தானே திட்டமிட்டுக் கொள்ளையடிக்கிறார் அஜீத். அந்தப் பணத்துக்காக அஜீத், ஜெயப்பிரகாஷ், போலீஸ் அதிகாரி அர்ஜூன் மற்றும் அஜீத்தின் உடனிருக்கும் நால்வரும் பெரும் சேஸிங்கை நடத்துகின்றனர். இதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் மங்காத்தா ஆட்டத்தின் க்ளைமாக்ஸ்.
தனது 50 வது படத்தை முன்னணி கலைஞர்களுடன் இணைந்து பங்குபோட்டுக் கொண்ட அஜீத்தின் பக்குவத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.

கிட்டத்தட்ட சரிபாதி வெளுத்த நரை, ஐந்தாறு நாள் தாடி, அசத்தலான கறுப்புக் கண்ணாடி கெட்டப்பில் மனதை அள்ளுகிறார் அஜீத். இதற்கு முன் முன்னெப்போதும் பார்த்திராத ஒரு அசத்தல் தோற்றம் இந்தப் படத்தில். எதிர்மறை நாயகன் வேடம் என்றாலே பலவித நடிப்பையும் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு சுதந்திரமும் தைரியமும் வந்துவிடுகிறது போலும். நடிப்பில் ரசிகர்களுக்கு நல்ல விருந்தே படைத்துவிடுகிறார் அஜீத். சண்டை, நடனம், ரொமான்ஸ் என கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் பவுண்டரி, சிக்ஸர் என வெளுத்திருக்கிறார் அஜீத்.

பல ஆண்டுகளுக்கு தனது 50வது படம் இது என தைரியமாக அவர் சொல்லிக் கொள்ளலாம்.
அஜீத்துக்கு இணையான வேடத்தில் ஆக்ஷன் கிங்காக ஜொலிப்பவர் அர்ஜூன். நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் சண்டைக் காட்சிகள், சேஸிங்குகளில் அர்ஜுன் காட்டும் வேகம் அசாத்தியமானது. ஆங்கிலத்தில் Show stealer என்பார்களே, அது சாட்சாத் அர்ஜூன்தான்!

ஹீரோயின் த்ரிஷாவுக்கு பெரிய ரோல் இல்லைதான். ஆனால் கிடைத்த வாய்ப்பை அழகாகப் பயன்படுத்தி மனதை கவர்கிறார். குறிப்பாக, ரொம்ப அழகாக இருக்கிறார், இதற்கு முந்தைய படங்களில் பார்த்ததை விட!
பிரேம்ஜி வழக்கம்போல. ஆனால் கடி கொஞ்சம் ஓவர். கத்தரி போட்டிருக்கலாம் சில காட்சிகளுக்கு. அஞ்சலியை வீணடித்திருக்கிறார்கள்.

மங்காத்தா பாடலில் லட்சுமிராய் அசத்தல். ஆண்ட்ரியா, வைபவ், ஜெயப்பிரகாஷ் என அனைவரிடமிருந்தும் ஒரு ஆக்ஷன் படத்துக்குத் தேவையானதை பெற்றுக் கொண்டுள்ளார் இயக்குநர்.

மைனஸ் என்று பார்த்தால் படத்தில் வரும் கெட்ட வார்த்தைகள். சென்ஸார் ஊமையாக்கிய பகுதிகளில் இடம்பெறும் வசனங்களை பாத்திரங்களின் வாயசைவை வைத்தே ரசிகர்கள் கண்டுபிடித்து கத்துகிறார்கள். இதை பெண்களால் ரசிக்க முடியுமா (வெளிப்படையாக!) என்பதை யோசித்திருக்க வேண்டும்.
ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் இழுவைதான். பாத்திரங்களை அறிமுகப்படுத்தவே அரைமணிநேரத்துக்கும் மேல் இயக்குநர் எடுத்துக் கொண்டது சலிப்பை தருகிறது. அஜீத், அர்ஜூன் நன்றாக சண்டை போடுவார்கள் என்பதற்காக எவ்வளவு நேரம்தான் அதையே பார்த்துக் கொண்டிருப்பது என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

டெக்னிக்கலாகப் பார்த்தால், இந்தப் படம் சின்ன பட்ஜெட்டில் ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கப்பட்ட படம் எனலாம். ஒளிப்பதிவில் ஜாலம் காட்டியிருக்கிறார் சக்தி சரவணன்.
யுவன் சங்கர் ராஜாவை இன்னொரு ஹீரோ எனலாம். பாடல்கள் எல்லாமே அட்டகாசம். ரசிகர்கள் ஆடித் தீர்க்கிறார்கள் அரங்கில். பின்னணி இசையும் விறுவிறுப்பு கூட்டுகிறது படத்துக்கு.

இந்தப் படத்தின் விளம்பரங்களில் எ வெங்கட் பிரபு கேம் என விளம்பரப்படுத்துகிறார்கள். அது உண்மைதான். அஜீத்துக்காக வெங்கட் ஆடிய இந்த ஆட்டத்தில் 'தல' டாப் கியரில் எகியிருக்கிறார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக