வியாழன், 4 ஆகஸ்ட், 2011

இலங்கைத் தமிழருக்கு தி.மு.க. ஆட்சிதான் அதிகம் செலவு செய்தது: கருணாநிதி பேட்டி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை, தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் 5,544 பேருக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்படி அரசுக்கு மாதம் ரூ.55.44 லட்சம் செலவாகும்.

 ஆனால் தி.மு.க. ஆட்சியில் இலங்கை தமிழ் மக்களுக்காக முதல்கட்டமாக 2008-ல் ரூ.10 கோடி மதிப்பில் பொருள்கள் கப்பல் மூலம் அனுப்பி அங்கு விநியோகிக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக 2009-ல் ரூ.6.45 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள், துணி வகைகள் அனுப்பி வைக்கப்பட்டன. 

மூன்றாம் கட்டமாக ரூ.7.5 கோடி மதிப்புள்ள பொருள்கள் அனுப்பப்பட்டன. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு திரட்டிய நிதியில் எஞ்சிய ரூ.25 கோடி தமிழக அரசின் சார்பாக நிதி உதவியாக வழங்கப்பட்டது.

  இதுபோல முகாம்களில் உள்ளோருக்கு வழங்கும் உதவித் தொகை உயர்வு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம் மூலம் உதவி, சமையல் பாத்திரங்கள் வழங்கியது, ஈமச் சடங்குக்கான உதவித் தொகை ரூ.100-ல் இருந்து ரூ.500 ஆகவும், பிறகு ரூ.2,500 ஆகவும் உயர்வு, முகாம்களுக்கான ஆண்டு செலவு 2008-09-ல் ரூ.48.58 கோடியாக உயர்வு ஆகியவை தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்டன. 

அகதி முகாம்களை சீரமைக்க மத்திய அரசிடம் ரூ.16 கோடி நிதி கோரி அது கிடைக்காத நிலையில், தமிழக அரசின் சார்பில் ரூ.5 கோடி ஒதுக்கீடு, 2009-ல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அகதி முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.12 கோடி ஒதுக்கீடு, பின்னர் மொத்தமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு ஆகியவை நடந்தன.    எனவே இவற்றை ஒப்பிட்டால் இலங்கைத் தமிழர் நலனுக்கு எந்த ஆட்சியில் அதிகம் செலவிடப்பட்டது எனத் தெரியும்.

அ.தி.மு.க.வினர் மீது வரும் நிலப் பறிப்பு புகார்கள் காவல் துறையினரால் சமரசம் செய்து வைக்கப்படுகின்றன.  ஆனால் நிலத்தை உண்மையாக விற்றவர்கள் தி.மு.க.வினர் மீது புகார் கொடுத்தால் அதைப் பெரிதுபடுத்தி வழக்குப் பதிவுசெய்து கைது செய்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள்தான் ஆகின்றன.

அதற்குள் அவர்கள் செய்த சாதனைகளில் ஒன்றாக, ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை ரூ.11.40-ல் இருந்து ரூ.13.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  தரிசு நிலங்களை மீட்டு ஏழைகளுக்கு வழங்குவோம் என தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் என்.வரதராஜன் கூறியுள்ளார். சிறுதாவூர் நிலம் தொடர்பாக நீதிபதி சிவசுப்ரமணியம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் அந்த நிலத்தை மீட்டு தலித்துகளுக்கு வழங்க அவர் முன்வர வேண்டும். 

சன் தொலைக்காட்சி நிர்வாகி சக்சேனா மீது காவல் துறையினரே தன்னிச்சையாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது, புகார்தாரர்கள் கூறும் தகவல்களின் மூலம் தெரிகிறது. ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது என கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக