திங்கள், 15 ஆகஸ்ட், 2011

பேரவையில் இணைந்து செயல்பட தி.மு.க. - காங்கிரஸ் திட்டம்?

சென்னை, ஆக. 14: சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தி.மு.க. - காங்கிரஸ் இணைந்து செயல்பட திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு, "ஒரே பகுதியில் தி.மு.க. உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும்' என்று கோரிக்கை எழுப்பி சட்டப் பேரவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் பேரவையைப் புறக்கணித்தனர்.இதன் பின், ஒரே பகுதியில் இடம் ஒதுக்காதவரை கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்கப் போவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.பேரவையைத் தொடர்ந்து புறக்கணித்தால் மக்கள் மத்தியில் ஒரு அனுதாப பார்வை பார்க்கப்படும் என்று தி.மு.க.வால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எவ்வித சலனமும் ஏற்படாமல், "ஆளும்கட்சியாக இருந்தால்தான் பேரவைக்குச் செல்வார்களா?' என்ற கருத்து பரவியது.வெளியிலிருந்து வசைபாடுவதா? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ராமச்சந்திரன் பேசும்போது,"குழந்தைகள் மிட்டாய்க்கு அடம் பிடிப்பதுபோல, ஒரே வரிசையில் இடம் கொடுத்தால்தான் பேரவைக்கு வருவோம் என்று ஏதோ காரணத்தைக் கூறி தி.மு.க.வினர் புறக்கணித்து வருகின்றனர்' என்று கூறியதுடன் பேரவையில் வந்து விவாதிக்காமல் வெளியிலிருந்து விவாதிப்பது சரியான நிலைப்பாடாக இல்லை என்றும் தெரிவித்தார். அச்சமே காரணம்: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் "தி.மு.க.வினர் கோரிக்கை சிறுபிள்ளைத்தனமானது என்றும் அச்சப்பட்டுக்கொண்டுதான் தி.மு.க.வினர் சபைக்கு வர மறுக்கின்றனர் என்றும் கூறினார். இந்த இரண்டு கூரான இடித்துரைகளே தி.மு.க.வினரை மீண்டும் சபைக்கு வர வைத்தது என்று சொல்லப்படுகிறது.கூட்டத் தொடர் புறக்கணிப்பு முடிவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி முதலில் ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. உறுப்பினர்கள் எல்லோருமே ஒருமித்த கருத்து தெரிவிக்கவே இந்த முடிவை கருணாநிதி எடுத்ததாகச் சொல்கின்றனர். ஆனால், பேரவையில் தி.மு.க.வினர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளும், தாக்குதல்களும் அதிகரிக்கவே எப்படி இருப்பினும் பேரவையில் பங்கேற்க வேண்டும் என்று கருணாநிதி உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது.காங்கிரஸ் நிலை: தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் 5 சட்டப் பேரவை உறுப்பினர்களைக் கொண்டுள்ள காங்கிரஸ், பேரவையில் தொடர்ந்து பங்கேற்று வந்தது. இந்த நிலையில் கொங்கு இளைஞர் பேரவைத் தலைவரும் பரமத்தி வேலூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உ.தனியரசு பேரவையில் பேசும்போது, "மத்தியில் உள்ள மன்மோகன் சிங், சோனியா காந்தி அரசு, தமிழகத்துக்கு எதிராக நடந்துகொள்கிறது. அது மக்களுக்கான அரசே இல்லை' என்று பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.முதல்வர் ஜெயலலிதாவும் "மத்திய அரசு தமிழக அரசு திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கவில்லை' என்று பேசினார்.தி.மு.க. - காங்கிரஸ்: வரும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தி.மு.க.வுடன் கூட்டணியைத் தொடரவே காங்கிரஸ் விரும்புகிறது. இதனால் பேரவையில் தி.மு.க. உறுப்பினர்களோடு இணைந்து செயல்பட விரும்புகிறதாம். இது தொடர்பாக தி.மு.க. தலைவரோடு காங்கிரஸ் தலைமை பேசி உள்ளதாகச் சொல்லப்படுகிறது.இதையடுத்து பேரவையில் தி.மு.க. - காங்கிரஸ் உறுப்பினர்கள் இணைந்து செயல்பட உள்ளனர் என்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக