புதன், 24 ஆகஸ்ட், 2011

திருச்சி சிறையில் அழகிரி: அனிதா ராதாகிருஷ்ணன், எஸ்ஸார் கோபியுடன் சந்திப்பு

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக மதுரை மாவட்ட நிர்வாகி எஸ்ஸார் கோபி ஆகியோரை மத்திய அமைச்சர் அழகிரி இன்று நேரில் சந்தித்து பேசினார்.

திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் தனது பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி சுரேஷை கொல்ல ஆளைத் தூண்டுவிட்டதற்காக கைது செய்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இது தவிர அவர் மீது மேலும் இரு வழக்குகள் உள்ளனர். கடந்த மே மாதம் 21-ம் தேதி ஆறுமுகநேரி நகர திமுக அலுவலத்திற்கு தீவைத்தது, அடைக்கலாபுரம் ரோட்டில் சுரேஷின் தம்பி ராஜேஷ் நடத்தி வரும் டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வீசியது ஆகிய இரண்டு சம்பவங்களுக்கு தூண்டுதலாக இருந்ததாகக் கூறி அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர அவர் மீது வீடு அபகரிப்பு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

மதுரை வில்லாபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் (33) கொலை வழக்கில் திமுக நிர்வாகி எஸ்ஸார் கோபி கைது செய்யப்பட்டார். அவரும் தற்போது திருச்சி சிறையில் தான் உள்ளார்.

இன்று திருச்சி சிறைக்கு வந்த மத்திய அமைச்சர் அழகிரி அங்கிருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்ஸார் கோபியை சந்தித்து பேசினார். இதில் எஸ்ஸார் கோபி அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அழகிரிக்கு நெருக்கமானவர்களில் பலர் தற்போது சிறையில் தான் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக