வியாழன், 18 ஆகஸ்ட், 2011

பிரபாகரனை, பேரறிவாளன் ரகசியமாக சந்தித்துத் திரும்பியதற்கும் ஆதாரங்கள் இருந்தன

அவர்கள் குற்றவாளிகள் தான்!''

சொல்கிறார் ரகோத்தமன்!

ராஜீவ் காந்தி படுகொலையை விசா ரித்த சி.பி.ஐ-யின் விசாரணை அதி காரியான ரகோத்தமன், ஓய்வு பெற்று சென்னையில் இப்போது வசிக்கிறார். அவரைச் சந்தித்தோம்!
'' மரண தண்டனையை ஒழிக்க வேண்டுமா... கூடாதா என்று வாதங்கள் தொடங்கி உள்ளன. உங்கள் கருத்து என்ன?''

''ஒரு மனித உயிரை இன்னொரு மனிதன் எடுக்க, எந்தவித அதிகாரமும் இல்லை. ஆனால், மரண தண்டனையை ஒரு குற்ற வாளிக்குக் கொடுக்கச் சொல்லி சட்டத்தில் இருக்கும் வரை, எந்த நீதிபதியும் அதைக் கொடுக்காமல் இருக்க முடியாது. ஆகவே, 'சட்டத்தில் இருந்தே, மரண தண்டனையை எடுத்து விடலாமே?’ என்பதுதான் இன்று எழுப்ப வேண்டிய கேள்வியாக இருக்க முடியும். 'கொடூரமான குற்றங்கள் பெருகும்போது, அதைச் செய்யும் குற்றவாளிகள் மேலும் மேலும் உருவாகி, இந்தச் சமூகத்தையே அழிப்பார்கள். ஆகவே, இந்த மரண தண்டனை வேண்டும்.' என்று ஒரு தரப்பினர் வாதாடுகிறார்கள். இன்னொரு தரப்பினரோ, 'வளர்ந்த சமூகத்தில் இதுபோன்ற மரண தண்டனை விதிப்பது காட்டு மிராண்டித்தனம். இந்தத் தண்டனையைச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.' என்கி றார்கள். கொடூரமான படுகொலைகளைச் செய்கிற குற்றவாளிகளை மரண தண்டனை மூலம் தண்டித்தால்தான், அப்படிப்பட்ட குற்றங்கள் குறையும் என்பது என்னைப் பொறுத்தவரை வீண் வாதம். ஏனென்றால், பலதரப்பட்ட கொடூரக் குற்ற வாளிகளுக்கு மரண தண்டனை விதித்தும் இந்த நாட்டில் படுகொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், எதிரி நாட்டுக்கு ரகசியத்தை விற்பதுபோன்ற நாட்டின் இறையாண்மைக்கு எதிராக ஒருவன் கொடூரக் குற்றம் செய்தால், அப்போது அவனுக்கு நிச்சயம் மரண தண்டனை விதிக்கலாம்!''
'' ராஜீவ் கொலை வழக்கின் விசாரணையே இன்னமும் முடியவில்லை. 'ராஜீவ் கொலைச் சதியை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கைப்படி என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? பல்நோக்கு விசாரணைக் குழு என்று இன்னொரு அமைப்பை நியமித்தார்களே... அது என்ன ஆனது? அதெல்லாம் முடியாத நிலையில், எந்த அடிப்படையில் சி.பி.ஐ. சொன்னதை மட்டும் கேட்டு, முருகன், சாந்தன், பேரறிவாளன்... மூவருக்கும் மரண தண்டனை விதிக்கலாம்?’ என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேட்கிறார்களே?''
''விசாரணை ஏஜென்சிகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஜெயின் கமிஷனோ, பல்நோக்கு விசாரணைக் குழுவோ... சி.பி.ஐ. கைது செய்து பிடித்த குற்றவாளிகள்பற்றி எதுவுமே கருத்து சொல்லவில்லை. அவர்கள் தலையிடவும் இல்லை. எங்களால் கைது செய்யப் பட்டவர்களை நிரபராதிகள் என்றும் சொல்லி விடவில்லை. அவர்கள் சொன்னது - 'புலிகள் இயக்கத்திடம் இந்தக் காரியத்தைச் செய்யத் தூண்டிய வேறு ஏதாவது சக்திகள் பின்னணியில் இருக்கின்றனவா?’ என்ற கோணத்திலும் விசாரிக்கும்படி சொன்னார்கள். அதற்கும் சி.பி.ஐ-க்கும் சம்பந்தமே இல்லை. இதை ஒரு வாதமாக வைத்து, சி.பி.ஐ.யைத் திசை திருப்பக் கூடாது. எங்களைப் பொறுத்த வரை, அந்தக் கொலை வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது!''

''இரண்டு பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்காகவா, பேரறி வாளனுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்கிறார்களே?''
''இது ஒரு சப்பையான வாதம்தான்!
'பெல்ட் குண்டு எங்கே தயாரிக்கப்பட்டது? இங்கு எப்படி கொண்டுவரப்பட்டது என்கிற விவரங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.’ என்று நான் ஒரு பேட்டியில் சொன்னேன். அதை மேற்கோள் காட்டி, 'பெல்ட் குண்டைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம். அதற்கு பேட்டரி வாங்கிக் கொடுத்தவருக்கு மரண தண்டனையா?' என்று இப்போது வினா எழுப்புகிறார்கள். நான் அப்படிச் சொன்னது வாஸ்தவம்தான். ஆனால், அந்த பெல்ட் குண்டு எங்கு இருந்து தயாரிக்கப்பட்டது என்று இதுவரை தெரியவில்லை. அதை இயக்கத் தேவைப்பட்ட ஸ்பெஷல் பேட்டரிகளை, பேரறிவாளன் மூலம்தான் ஒற்றைக் கண் சிவராசன் பெற்றான் என்பதற்கு சி.பி.ஐ.யிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட இடத்தில் சிதறிக்கிடந்த பொருட்களில், அந்த பேட்டரியின் பாகங்களை நாங்கள் கைப்பற்றினோம். யாழ்ப்பாணத்தில் உள்ள புலிகள் இயக்கத் தலைவர்களுடன் சிவராசன் ரகசியமாகத் தொலைபேசியில் பேச, தேவைப்பட்ட பேட்டரியும் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு கடையில், பேரறிவாளனே பொய்யான விவரங்களைக் கொடுத்து, அவரே டெலிவரி எடுத்துச் சென்றதை விசாரணையில் கண்டுபிடித்தோம். சிவராசனுக்காகப் புது மோட்டார் சைக்கிளை அவர் வாங்கிக் கொடுத்ததையும் அறிந்தோம். யாழ்ப்பாணத்தில் இருந்த
பிரபாகரனை, பேரறிவாளன் ரகசியமாக சந்தித்துத் திரும்பியதற்கும் ஆதாரங்கள் இருந்தன. பிரபாகரன் சொல்லித்தான், 'சாத்தானின் படைகள்’ என்ற புத்தகத்தை, தமிழகத்தில் ரகசியமாக பேரறிவாளன் அச்சடித்தார். 'பிரின்டடு இன் யு.கே. இது ஒரு விடுதலைப் புலிகள் பிரசுரம்' என்கிற வாசகங்கள் அதில் இருந்தன. அதற்கான தொகையை, திருச்சி சாந்தன் மூலம் இவர் பெற்று இருக்கிறார். அந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துக்களைப் பார்த்தால், 'ராஜீவ் காந்தியை ஏன் கொல்ல வேண்டும்?’ என்கிற குறிக்கோளை வெளிப்படுத்திய முக்கிய ஆவணம் இது. இதற்கு மேல் அவரைக் குற்றவாளி என்று சொல்ல, வேறு என்ன ஆதாரம் வேண்டும்?''

''ராஜீவ் காந்தியைக் கொலை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறையில் இருந்தது ஒரு தண்டனை. தற்போது, விதிக்கப்பட்டு இருக்கும் மரண தண்டனை இரண்டாவது தண்டனை. இது எப்படி நியாயம்?''
''1991 முதல் எட்டு வருடங்கள் விசாரணை நடந்தது. தீர்ப்பு கிடைத்தது. அதன் பிறகு மாநில, மத்திய அரசுகளிடம் குற்றவாளிகள் தரப்பில் கருணை மனுப் படலம் 12 வருடங்கள் நடந்தது. இவர்கள் மட்டும் அல்ல... இந்தியா முழுவதும் வெவ்வேறு காலகட்டத்தில் கருணை மனு போட்ட மரண தண்டனைக் கைதிகள் இப்படித்தான் காத்திருக்கிறார்கள். எனவே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மட்டும் கால தாமதம் ஏற்படவில்லை. கருணை மனு மீதான இறுதி முடிவு தெரியும் வரை, தண்டனை பெற்ற குற்றவாளிகள் யாராக இருந்தாலும், சிறையில் இருப்பதுதான் முறை. அதுதான் இங்கேயும் நடந்தது!''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக