திங்கள், 8 ஆகஸ்ட், 2011

மைசூர் வந்த ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு வர தயங்குவது ஏன்? அரசு வக்கீல் கேள்வி

சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு விலக்கு தருவதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யலு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராக விலக்கு தரக்கோரி ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது, சிறப்பு நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்பு 08.08.2011ல் விசாரணை நடைப்பெற்றது.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார், முதல் அமைச்சராக பதவி வகிகும் ஜெயலலிதா அதிக பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றம் நடந்துகொண்டிருப்பதால் அவர் பெங்களூரு வந்து நீதிமன்றத்தில் ஆஜராக நேரமில்லை. ஜெயலலிதா பெங்களூரு நீதிமன்றத்துக்கு வரவேண்டுமானால் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும். தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில்கொண்டு ஜெயலலிதா சென்னையில் இருந்து வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் விளக்கமளிக்க வாய்ப்புத் தர வேண்டும் என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யலு, கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிரச்சனையால் ஏற்கனவே நிலவிய பதற்றம் தற்போது இல்லை. காவிரி நீர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், கர்நாடகத்தில் அமைதி நிலவுவதால் ஜெயலலிதா பெங்களூரு வர எதிர்ப்பு ஏதும் இல்லை. மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு அண்மையில் வந்து சாமி கும்பிட்ட ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு வர மட்டும் தயக்கம் காட்டுவது ஏன் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா, தீர்ப்பை 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 96ஆம் ஆண்டு வரை முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் ஆஜரானால் விசாரணை முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக