வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

அரசுடனான பேச்சுவார்த்தைக்கு த.தே.கூ. காலக்கெடு

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசு நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து, கூட்டமைப்பு கடும் விமர்சனத்தையும் கவலைகளையும் வெளியிட்டுள்ளது.
வியாழன் இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கை அரசு, பேச்சுவார்த்தைகளை வெளியுலகுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக காட்ட முனையும் அதே வேளையில், உண்மையில் இவை, ஒரு வெளித்தோற்றத்தை உருவாக்கும் முயற்சியாகவே இதைத் தாங்கள் பார்ப்பதாக கூட்டமைப்பு கூறியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தைகளில், உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு, உயர்பாதுகாப்பு வலையங்கள் அகற்றப்படுதல், வடகிழககில் செயல்படும் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைதல், அரசியல் கைதிகளின் பிரச்சினை ஆகியவை குறித்து பேசிவந்ததாக கூட்டமைப்பு கூறுகிறது.
ஆனால் பத்துச் சுற்றுப் பேச்சுக்களுக்கு பிறகு இந்தப் பிரச்சினைகளில் எந்தவிதமான பெரிய முன்னேற்றமும் காணப்படவில்லை என்று கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கொடுத்த பிரேரணைகள் எதற்கும் அரசிடமிருந்து பல மாதங்களாக எந்தவிதமான பதிலும் வரவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே அரசியல் தீர்வுப் பிரச்சினையில், எந்தவிதமான காத்திரமான விவாதமும் நடத்த முடியவில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
இந்தச் சூழ்நிலையில் பேச்சுவார்த்தை என்கிற “ஏமாற்று வழிமுறையை” தொடர வேண்டிய அவசியம் இருக்கிறதா என்றும் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
சமஷ்டி அமைப்பின் கட்டமைப்பு , மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு, நிதியதிகாரங்கள் ஆகியவை குறித்து அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் இரண்டு வாரத்தில் தெளிவாக்க வேண்டும் என்று கூட்டமைப்பு கூறியுள்ளது.
அப்படி செய்தால்தான் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை தொடர முடியும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக